தாகத்தோடு ஒரு தேடல் (யோவா 20:1-10)
கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவைத் தேடிச் சென்ற முதல் பெண் மகதலா மரியா. அவர் இயேசுவைத் தேடிச்சென்ற நாள் வாரத்தின் முதல் நாள். நேரமோ அதிகாலைப் பொழுது. ஆக, ஒரு பகல் பொழுதின் முதல் மணித்துளிகளில் இயேசுவை மட்டுமே தன் வாழ்வில் முதன்மைப்படுத்தித் தேடுகிற அளவுக்கு அவருக்குள் உள்ளார்ந்த தாகம் இருப்பதை இது நமக்கு வெளிப்படுத்துகிறது. மகதலா மரியா இயேசுவைத் தேடிக் கல்லறைக்குச் செல்லுகின்ற நிகழ்வை நற்செய்தியாளர் யோவான் இரண்டு விவரிப்புகளாகத் தனது நற்செய்தியில் பதிவு செய்கிறார் (யோவா 20:1-10; 20:11-18)
முதல் தேடல் தந்த அனுபவம் (யோவா 20:2)
மகதலா மரியா ஆர்வத்தோடு இயேசுவைத் தேடிக் கல்லறைக்கு வந்தாலும், இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து அவர் பெறுகின்ற முதல் அனுபவம்
எதிர்மறையானதாகவே அமைகிறது. கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டு வெறுமையாகக் காணப்பட்ட கல்லறையைப் பார்த்தவுடனே அவர் பதறிப்போய், ‘இயேசு உயிர்த்தெழவில்லை, மாறாக அவருடைய உடலானது திருடப்பட்டுவிட்டது ' என்ற எதிர் மறையான முடிவுக்கு வருகின்றார்.
தொடர் தேடலின் படிநிலைகள் (யோவ 20:11-18)
மகதலா மரியா இயேசுவின் வெறுமையான கல்லறையை இரண்டாவது முறையாகப் பார்வைடும் விவரிப்புப்பகுதியை யோவான் 20:11-18இல் வாசிக்கின்றோம். உயிர்த்த இயேசுவுக்கும் மகதலா மரியாவுக்குமிடையே நடைபெறும் தனிப்பட்ட, உள்ளார்ந்த, ஆத்மார்த்தமான சந்திப்பு நிகழ்வாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற நற்செய்தியாளர்கள் வேறு சில பெண்கள் கல்லறைக்குச் சென்று பார்க்கும் குறிப்புகளைத் தரும் வேளையில் (மாற் 16:1; மத் 28:1; லூக் 24:1), மகதலா மரியாவை மட்டும் இயேசுவின் வெறுமையான கல்லறையருகே தனிமைப்படுத்திக் காட்டுவது யோவானின் தனிச் சிறப்பாக அமைகிறது. உயிர்த்த இயேசுவைச் சந்திக்க மகதலா மரியா மேற்கொள்ளும் இந்தத் தொடர் தேடல், இயேசுவின் உயிர்ப்பில் அவரைப்படிப்படியாக விசுவாசத்தின் முழுமைக்கு அழைத்துச் செல்வதை நாம் பார்க்கிறோம்.
அடையாளம் காண முடியவில்லை (யோவா 21:4-7; லூக் 24:13-31). மகதலா மரியா இன்னும் விசுவாசத்தின் உள்ளொளியைப் பெறவில்லை. எனவேதான் இயேசுவைத் தோட்டக்காரர் என்று அவர் நினைக்கின்றார். இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறை புதிதாக இருந்ததால், ஒரு வேளை தோட்டக்காரர் அவரின் உடலை இடம் மாற்றி வைத்திருக்கக்கூடும் என்று நினைத்து, அந்த இடத்தை அறிய முற்படுகின்றார். இவ்வாறு தனது தேடலை இன்னும் ஆழப்படுத்துகிறார்.
"மரியா" (யோவா 20:16)
தனது தேடலின் ஆழத்திலே இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளுகின்ற உச்ச நிலைக்கு மரியா வருவதை இங்கு பார்க்கிறோம். இயேசு மகதலா மரியாவைப் பெயர் சொல்லி அழைக்கின்றார். உடனே விசுவாசத்தோடு அவரைப்பற்றிக் கொள்கிறார். அதாவது முகம் தரையில் முழுமையாகப்படுமாறு பயபக்தியோடு அவரைத் தாழ்ந்து பணிந்து வணங்குகிறார். பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் இறைவெளிப்பாட்டின்போது நடக்கின்ற நிகழ்வை இச்செயல் நம் நினைவுக்கு கொண்டுவருகிறது (நீத 13:20; 1 அர 18:42). மகதலா மரியாவின் இச்செயலானது அவர் சிறிது சிறிதாக உயிர்த்த இயேசுவைத் தொடர்ந்து தேடி, அவரில் விசுவாசம் கொள்ளும் உச்ச நிலைக்கு வந்துவிட்டார் என்பதையே நமக்குக் காட்டுகிறது. உயிர்த்த இயேசு ஒரு நல்ல ஆயர், அவர் தனது ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக்கின்றார். அவர் மந்தைன் ஆடுகளும் அவரின் குரலை அறிந்து நேர்மறையாகப்பதில் கொடுக்கின்ற உண்மையை இங்கு நாம் பார்க்கிறோம் (யோவா 10:14)
மரியாவின் சான்று : "நான் ஆண்டவரைக் கண்டேன்" (யோவா 20:18)
மகதலா மரியா உயிர்த்த இயேசுவை அடையாளம் கண்டு, அவரில் முழுமையாக நம்பிக்கை கொண்டு, தான் பெற்ற உயிர்ப்பு அனுபவத்தைத் தனது சகோதரர்களிடம் சென்று சான்று பகர இயேசு கட்டளைடுகின்றார். "ஆண்டவர் இயேசு தான் முன்பு உரைத்தபடியே உயிர்த்துவிட்டார். இப்போது தனது தந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் " என்று அவரது உயிர்ப்பை அறிக்கைடும் முதல் சாட்சியாக மகதலா மரியா அனுப்பப்படுகிறார். மகதலா மரியாவின் "நான் ஆண்டவரைக் கண்டேன்" எனும் அனுபவ நற்செய்தியானது, ஆண்டவர் உயிர்த்துவிட்டார், அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நற்செய்தியை நமக்குப்பறைசாற்றுகிறது.
மகதலா மரியாவின் தேடல் நம் வாழ்வின் தேடல்
உயிர்த்த இயேசுவைத் தேடுதலில் மகதலா மரியா மேற்கொள்ளும் தொடர் முயற்சி, நம் அனைவரின் வாழ்விலும் இயேசுவை முதன்மைப்படுத்த, அவரை மட்டுமே தொடர்ந்து தேட அழைப்புக் கொடுக்கின்றது. இயேசுவால் பெயர் சொல்லி அவர் பணி செய்ய அழைக்கப்பட்ட இறைப்பணியாளரின் முதன்மையான ஆன்மீகத் தேடல் இயேசுவாக மட்டுமே இருக்க முடியும். வாரத்தின் முதல் நாளில், அதிகாலையில் கருக்கலோடு தைரியமாக தன்னந்தனியாக கல்லறையருகே சென்று இயேசுவைத் தேடும் மகதலா மரியாவின் தணியாத தாகம் இறைப்பணி வாழ்வில் நமக்கும் என்றும் குன்றாமல் குறையாமல் இருக்க வேண்டும் என்பதையே காட்டுகின்றது. உயிர்த்த இயேசுவைத் தேடுதலில் சிறிது சிறிதாக விசுவாசத்தின் முழுமையைப் பெற்ற மகதலா மரியா தான் பெற்ற உயிர்ப்பு அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் முதல் சாட்சியாகத் திகழ்கிறார். மகதலா மரியா பெற்ற அதே உயிர்ப்பு அனுபவம் நேற்றும் இன்றும் என்றும் மாறாத அனுபவமாக, ஒரு தொடர் அனுபவமாக நம் வாழ்வில் நிகழ்கிறது. இறைப்பணியாளர் என்ற நிலையில் உயிர்த்த இயேசு அனுபவத்தால் தூண்டப்பட்டு, உயிர்ப்பின் சாட்சிகளாய் என்றும் வாழ இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நமக்கு உதவட்டும்!
பணி. அந்தோணி மதலைமுத்து,
0 comments:
Post a Comment