ஆசிரியர் பக்கம்

உயிர்ப்புப் பெருவிழா கொண்டாடி வாரங்கள் கடந்தாலும் தொடர்ந்து பாஸ்கா கொண்டாட்ட காலத்தில் இருக்கும் உங்களுக்கு கிறிஸ்துவின் வெற்றி விழா வாழ்த்துக்கள்!

‘வெற்றி’ என்பதைப் பலவற்றில் எதிர்நோக்கியுள்ள நாட்கள் இவை :

2011-இல் சட்ட மன்றத் தேர்தல் வெற்றி (ஒருவேளை இச்செய்தியை வாசிக்குமுன் தேர்தல் முடிவுகள் அறிந் திருப்பீர்கள்) +2 மற்றும் 10-ஆம் நிலைப் பிள்ளைகள் எதிர்நோக்கியிருக்கும் தேர்வுகளின் வெற்றி கடந்த ஆண்டு முழுவதுமாக அல்லது சில மாதங்களாக கடினப்பட்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று இறையழைத்தலுக்காக உழைத்து இறுதியாக இறை யழைத்தல் முகாம்கள் வெற்றி யோடு நடத்தியும் தொடர் செயல்கள் வெற்றியும் அடைய விரும்பும் நிலை  அனைத்தும் இறைவன் விரும்பும் வெற்றியாய் அமைந்திட வாழ்த்துக்கள்!

பல்வேறு இறையழைத்தல் முகாம்களுக்குச் சென்று வந்தேன். அனைவருடைய கடின உழைப்பையும் பார்க்க முடிந்தது. சவால்கள் அதிகரித்துள்ள பணியில் இறை உறுதிப்பாடு நிறைந்திருந்த நிலை காண முடிந்தது. எத்தனை பேர் வருவோர்களோ என்ற அங்கலாய்ப்போடே பல முகாம்கள் தொடங்கப்பட்டாலும், தொடர்ந்து ஏற்பட்ட மனநிறைவில் எத்தனை பேர் என்கிற எண்ணிக்கையை விட, உறுதிப்பட்ட மனநிலையோடு உள்ள வர்களை (குறைந்த எண்ணிக்கையிலும்) இனம் காணும் பணியே தலைசிறந்து இருப்பதைக் காண முடிந்தது. இருப்பினும் அந்த அங்கலாய்ப்பு, புது உள்ளங்களைத் தேர்ந்தெடுத்து முடியும் வரை தொடர்ந்தே இருக்கும். எல்லாம் நல்லதாய் நடக்கும் என்ற உறுதிப்பாட்டோடு வாழ்த்துச் சொல்வோம்.

சில நினைவுறுத்தல்கள் : சில சபைகள் / மறைமாவட்டங்களில் நல்ல எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் முகாம்களில் கலந்து கொண்டதாகச் செய்தி. ஒருவேளை உங்களது தேர்ந்தெடுப்புக்குப் பின் நீங்களே இன்னும் சிலரை ஆர்வ முள்ள நல்லவர்களாகக் கண்டால் பிற சகோதர சகோதரிகளிடம் கூறி வழிநடத்தி விடலாம். ஏற்கெனவே நமது கருத்தரங்குகளில் பேசியவற்றை நினைவுபடுத்திக்கொள்வோம். நமது பணிகளில் ஒருவருக்கொருவர் உதவியும் ஊக்கப்படுத்தலும் தேவை. யாரும் மனந்தளர்ந்து போகாதபடி உறுதிப்படட்டும். கடவுள் தாம் விரும்பியதை நம் மூலம் செயல்படுத்துவார். அவரின் கருவிகளாவோம்.

சில நாட்களுக்கு முன், வயதில் மூத்த சகோதரி அவர்கள் என் பணி பற்றி விசாரித்த பின், “நிறைய பேரைப் பிடிச்சுப் போடுங்க சாமி, கூட்டம் நல்லா கூடட்டும். நிறைய சாமிமார்கள், சிஸ்டர்ஸ் தேவை” என்றார்கள். வயதில் முதிர்ந்தவர்களிடம் நிறைய விளக்கங்களைச் சொல்ல முடியாமல் சிரித்துக்கொண்டேன்.
எப்படிப்பட்டவர்களைப் ‘பிடித்துப் போடப்போகிறோம்?’ ‘கூட்டம் காட்டுவது நமது குறிக்கோள் இல்லை’ என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அதே வேளையில் எல்லா ஆன்மீகமும், பண்புகளும், திறமைகளும் நிறைந்தே உள்ள நபர்கள்தான் கிடைப்பார்கள்... அவர்களையே தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்றல்ல. பண்புகளும் திறமைகளும் ஆன்மீகமும் வளர்ப்பதற்காகவே பயிற்சிக் காலம் உண்டு. என்றாலும் இளைய வயதில் உள்ளோரிடம் ஊன்றப்பட வேண்டிய சில அடிப்படைப் பண்புகள் அமைந்தே இருக்க வேண்டும் என விழைகிறோம்.
தேர்ந்தெடுக்கும்போது தேவையான சில மனநிலைகள் :  
  • ஆன்மீக ஆர்வம் உள்ள மனநிலை. கத்தோலிக்கக் குடும்பங்களில் வளர்ந்து, சில ஆன்மீகப் பயிற்சியும் அறிவும் பெற்றிருத்தல் நலம். கடவுளைத் தேடும் ஆர்வம் அடிப்படையில் இருத்தல் தேவையே.
  • மனித பண்புகள் (Human Qualities) உள்ள மனநிலை. இளையோருக் கென்று தனிப்பட்ட சில பண்புகள் இருந்தாலும், நல்ல மனித நிலையில் பிறரை மதித்து உறவோடு வாழும் மனப்பக்குவம், நல்ல பழக்க வழக்கங்களோடு உள்ள உறுதி நிலை முக்கியமானதே.
  • இறைப்பணிக்கான ஆர்வம் கொண்ட மனநிலை. இறையழைத்தலைக் கட்டாயத்தினால் அல்ல, மாறாக பிறருடைய வழிநடத்துதலில் தாமே விரும்பி ஏற்று வருகிற நபராக இருத்தல் மிகத் தேவை.  ‘ஏதோ படிப்போம், பிறகு பார்ப்போம்’ என்ற மனநிலையில் உள்ளோரைவிட ‘போகிறேன்... கடவுள் விரும்புவது போல் ஆகட்டும்’ என்னும் அடிப்படை உறுதிப்பாடு தேவை.
  • சமுக ஈடுபாடுள்ள மனநிலை தேவை. எல்லோரையும் ஏற்பதும், கடவுளின் சமூகமாக உலகை மாற்றுவதும், அதற்காக உழைப்பதும் என் பணி என்ற உயர் சிந்தனை தேவை. இறையழைத்தலால் நாம் பத்திர மான, சவாலற்ற உலகத்திற்குள் போகிறேன் என்ற சூழலும் மன நிலையும் பொருந்தாதவையே.
தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் மேற்கூறிய சில அடிப்படை மனநிலைகள் தாங்கியவர்களாக இருத்தலே நலம். இளைய மனந்தினருக்கென்று குறிக்கோள் உண்டு. அது உயரியதாய், சிறப்பானதாய் அமைவதே நல்லது. இவ்வடிப்படைகள் இருந்தால் மட்டுமே பயிற்சியும், பயிற்சி பெற்றுக்கொள்ளும் மனநிலையும் வளர்ச்சி பெறும்.

நலமான புது உள்ளங்களை இனம் காணும் பணியில் நலம்பெற  மீண்டும் வாழ்த்துக்கள்!
- சே. சகாய ஜாண்

0 comments:

Post a Comment