கல்லூரி தொடங்கிய சில நாட்களிலேயே முதலாமாண்டு வகுப்பறைகள் சிலவற்றில் கலகம் எனக் கேள்விப்பட்டு, கல்லூரி முதல்வர் பூர்ணிமா கலங்கிப் போனார். அவர் பொறுப்பேற்ற இத்தனை ஆண்டுகளில் இப்படி மாணவர்கள் எதற்கும் வெகுண்டெழுந்தது இல்லை. கலாட்டா செய்ததும் இல்லை. எந்தப் பிரச்சனை என்றாலும் பேச்சுவார்த்தை மூலமே, அகிம்சை முறையிலேயே தீர்க்கப்படும். கல்லூரியில் அதற்கென்றே ஒரு குழுவும் இருந்தது. யாருடைய பிரச்சனை, எதுவாக இருந்தாலும் அவர்களிடம் முறையிட்டால் போதும். விசாரணை நடந்து சில நாட்களிலேயே நல்ல முடிவு, எல்லோருக்கும் சாதகமான முடிவு வழங்கப்பட்டு சமாதானம் நிலவும்.
நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே அப்படி ஓர் அருமையான புரிந்துணர்வு இருந்து வந்தது. ஊருக்கு மட்டுமல்ல, கல்லூரி வரலாற்றி லேயே அது ஒரு வித்தியானச மான கல்லூரியாக இருந்தது. ஒரு பெண் நிர்வகிப்பதால் இவ்வளவு புதுமையான முறையா என்று புரியவில்லை. பல வார்த்தைகள் சொல்ல முடியாத விளக்கங்களை, ஒரு சின்ன முன்மாதிரிகையான செயல் எப்படி சாதித்துக் காட்டுமோ, அப்படி ஒரு வித்தியாசத்தை அக்கல்லூரியில் காண முடியும்.
நவநாகரீக உடைகள் இல்லாமல், முதன்மை ஆசிரியர் முதல் கடைநிலை ஊழியர் வரை நமது பாரம்பரியம் மாறாத ஆடை அலங்காரத்தில் இருப்பார்கள். மாணவிகளும் தங்கள் ஆசிரியைகளையே முன்மாதிரிகையாகக் கொண்டு அழகழகான பாவாடை தாவணிகளில், மடிப்பு மாறா புடவைகளில், அழுந்த வாரிப் பின்னிய கூந்தலில், மலர்ச்சரங்களில், வளை குலுங்க, தமிழகத்தின் பாரம்பரியம் குறையாமல் வந்து சென்றார்கள். மாணவர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. அவர்களே சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நாகரிகமாக ஆடை அணிந்து வருவார்கள். படிப்பிலோ, வேறு எந்தத் துறையிலுமோ அவர்கள் சோடை போகவில்லை. அந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோரும் போட்டி போடும் அளவுக்குக் கல்லூரி முன்னிலையில் நின்றது; முன்மாதிரி கையாக இருந்தது.
சக ஆசிரியர் குழுவுடன் முதலாமாண்டு வகுப்புகள் இருக்கும் பகுதிக்கு விரைந்தார் முதல்வர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்கள் இரத்தத்தையே உறைய வைப்பதைப் போலிருந்தது. கண்கள் சட்டெனக் கலங்கின. அரசின் ஆணைக்கு உட்பட்டு இவ்வாண்டு அவர்கள் கல்லூரியின் நான்கைந்து மூன்றாம் பாலின மாணவர்களைச் சேர்த்திருந்தார்கள். அவர்களை ஓரங்கட்டி, அவமானப்படுத்தி, தங்களுடன் சேர்த்துப் படிக்க வைக்கக்கூடாது என்று கூறித்தான் மாணவர்கள் கலவரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களோ கண் கலங்கி அவமானத்தால் குறுகிப்போய் நின்றுகொண்டிருந்தார்கள். தங்கள் முதல்வர் நிச்சயம் தங்களுக்குத் தான் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களும், தங்களுக்கு ஆதரவு காட்ட மாட்டார்கள் என்ற ஏக்கத்தில் இவர்களும் இருந்தார்கள்.
சில நிமிடங்கள் ஆழச் சிந்தித்த கல்லூரி முதல்வர், மாணவர்களிடமே காகிதம், பேனா வாங்கி எதையோ எழுதினார்கள். பின் அங்குக் கூடியிருந்த மாணவச் செல்வங்களை நோக்கிப் பேச ஆரம்பித்தார். “மாணவ, மாணவிகளே, என்னுடைய பிள்ளைகளே, நீங்கள் இவ்வளவு கல்நெஞ்சக்காரர்களாக இருப்பீர்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் உங்களுடனான வாழ்வு அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்றாண்டுகள்தான். அவர்கள் உங்கள் நண்பர்களாக ஏற்கும் தைரியம் ஏன் உங்களுக்கு இல்லாமல் போனது? நீங்கள் எல்லோரும் உடல் அளவில் ஆரோக்கிய மானவர்கள். அவ்வளவுதானே? அவர்களால் உங்களுக்கு என்ன தீங்கு வரும் என நினைக்கிறீர்கள்? உங்களின் மன ஊனத்தைப் பார்க்கிலும் அவர்களின் ஊனம் பெரிதல்ல. உங்களைப் போன்ற மன ஊனர்களின் முதல்வராய் நான் இருப்பதைவிட, இவர்களைப் போன்றவர்களுக்குத் தொண்டாற்றும் ஒரு சேவகியாக இருக்கவே நான் விருப்பப்படுகிறேன். அவர்கள் வலி எனக்குப் புரியும். இதோ என் ராஜினாமா கடிதம். விடைபெறுகிறேன். விடைகொடுங்கள்.”
அந்த இளம் திருநங்கைகளை அழைத்துக்கொண்டு வீரமாய் வெளியேறும் அவர்களின் மனிதாபிமானம் எல்லோரையும் மனம் மாற வைத்தது. ஒரே நிமிடத்தில் ஓடிச் சென்றவர்கள் அவர்களை முற்றுகையிட்டு வெளியே விட மறுத்தனர். அன்பு எனும் ஈர அலைகளால்தான் அகிலம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது நன்கு விளங்கிற்று. முதல்வர் மிடுக்கோடு தன் அறைக்குச் செல்ல, தங்கள் நண்பர்களான அவர்களுடன் மாணவர்கள் வகுப்பிற்குச் சென்றனர். நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே!!!
- சாந்தி ராபர்ட்ஸ், உதகை
0 comments:
Post a Comment