செப வாழ்வில், நல்ல மதிப்பீடுகளில் தாங்கள் மட்டும் வளராது மற்ற மக்களையும் வளர வைத்தால்தான் அழைப்பின் மேன்மையைப் பெற முடியும். மேற்கூறிய நற்செய்தியின்படி வாழ்ந்தால் ஏழை எளிய மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடியும். நாம் செய்யும் பல பணிகளில் அர்ப்பண உணர்வும் அன்புச் சேவையும் இணைந்து விடுதலை உணர்வுகளைக் கொடுத்தால் அழைப்பின் சிறப்பைப் பெற முடியும்.
நாம் சாதி, மதம் கடந்து மனிதர்கள் ஒற்றுமையுடன், அமைதியுடன் வாழ அனைத்து சமுதாய இணைப்பு, பல்சமயக் கூட்டமைப்பு மற்றும் மன்றங்கள் மூலம் மக்கள் மனித நேயத்துடன் வாழப் பயிற்சி அளித்து வரும்போது, நம் அழைப்பு சிறப்புத்தன்மை அடையும். எங்கள் மகிழ்ச்சிக்கும் எங்கள் உயர்வுக்கும் நல்வாழ்விற்கும் காரணமாக இருப்பவர்கள் துறவிகள், எங்கள் இல்லத்தின் ஒளியேற்றும் விளக்கு என்றும் பிறர் கூறும்போது நாம் பெற்ற அழைப்பு உயர்வு அடைகிறது. நாம் பார்வையாளராக இருக்கக்கூடாது. மக்கள் சமூகத்தின் பிரச்சனைகளில் பங்கேற்பாளராக இருக்க வேண்டும். அப்போது நாமே நற்செய்தி. நாம்தான் பிறருக்காக உடைக்கப்படும் அப்பம். நாம் நல்ல மதிப்பீடுகளில் வாழ்ந்து, அவற்றைப் பிறரோடு பகிர வேண்டும். அப்போதுதான் அழைப்பின் மேன்மை சிறக்கும்.
மேலும், அல்லும் பகலும் அயராது உழைத்தாலும், வாழ்வின் அடிப்படைத் தேவைகள் இன்றித் தாழ்வுறும் சமுதாயம் ஏற்றம் பெற ஆர்வமும் ஆக்கமும் கொண்டு உழைத்து உதவுவதே அழைப்பின் சிறப்பாகும். மூலையில் முடங்கிக் கிடக்கின்ற எண்ணற்ற மக்கள் இனத்தைத் தட்டி எழுப்பி, எழுச்சி பெற்று, ஏற்றங்கள் பல பெற்று நாளும் மகிழ்வுடன் வாழச் செய்ய உதவுவதே அழைப்பின் சிறப்பாகும்.
அனைவருக்கும் அன்பு காட்டும் ஆண்டவனின் அன்புப் பிள்ளைகளாய்ப் பிறந்தும், சாதி, மதம், இனம், மொழி வேற்றுமையால் வாடும் சகோதர, சகோதரிகள் நல்வாழ்வின் உயர்வு காண உதவுவதே அழைப்பின் சிறப்பாகும். நாம் வாழும் பகுதியில் உள்ள இளையோரை இனம்கண்டு, இறையழைத்தலை ஊக்குவிப்போம்.
நந்தவன நாதம் வாசகர் பெருமக்களுக்கு எனது உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்!
0 comments:
Post a Comment