நற்செய்தி அறிவிப்பவரின் மலரடிகள் எத்துணை அழகானவை!

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் காலையிலும் மாலையிலும் செபத்தில் ஈடுபட்டு, தங்களது பணியைத் துவங்கினார்கள். தங்கள் வாழ்வைச் செபத்தால் இறைவனைச் சுற்றியே அமைந்த வாழ்வாக மாற்றிக் கொண்டனர். இப்பழக்கத்தின்படியே இயேசுவும் செயல்படுகிறார். இந்த செப உறவே இயேசுவைப் பணிபுரியச் செய்து, அனைத்து மக்களையும் வாழச் செய்தது. திருச்சபையை நிறுவவும் வளரவும் செய்தார். தனது பணியைத் தொடர்ந்து செய்ய முடிவு எடுக்கவும், செபித்து தன் விரும்பியபடி பன்னிரு சீடர்களை அமைத்து (மாற் 3:13) திருத்தூதர் எனப் பெயரிட்டார். அந்தச் சீடர்கள் பலதரப்பட்டவர்களாக இருந்தார்கள். வரி தண்டுபவரான மத்தேயு, தீவிரவாதி சீமோன் என்று பலதரப்பட்டவர்கள். ஏன், பாவியான மரிய மதலேனாளையும் முதல் சீடத்தியாக அழைக்கவில்லையா? அனைவரும் நற்செய்தியின் பொருட்டு தங்கள் உயிரை இழக்கத் தயாராக இருந்தார்கள. எனவே திருச்சபை வளர்ந்து நிலைபெற்றது.
நம்முடைய விருப்பமின்றி கடவுள் செயல்பட மாட்டார். ஒருபோதும் வற்புறுத்தவும் மாட்டார். ஏனெனில் நமக்குக் கடவுள் முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். கொடுத்த சுதந்திரத்தை மதிப்பவர்தான் நம் கடவுள். அவரது மீட்புப் பணியைத் தொடர்ந்து செய்ய இறைவனின் மதிப்பீடுகளைத் தொடர்ந்து வழங்கவும் தொடர் ஓட்டக்காரர்களை இறைவனே தேர்வு செய்கிறார். உலகத்தில் பல அலுவலகங்களில் வேலை செய்யப் பலரைத் தேர்வு செய்கிறார்கள். அவர்களின் தேர்வு எப்படிப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் கடவுள் தேர்ந்தெடுக்கும் பொழுது வயது, ஆளுமை, குணம், கொள்கை போன்றவைகளில் வேறுபட்ட வர்களையும், இனம், மதம், தீவிரவாத குணம் உள்ளவர்களையும் வேறுபாடின்றி அழைக்கின்றார். இந்தத் தேர்வு (அழைத்தல்) வேறுபட்டது, வித்தியாச மானது. இவ்வாறு பலரையும் அழைத்தது ஒரே குரல், ஒரே ஆள். அவர்தான் நம் தலைவர் இயேசு. இந்தத் தலைவராகிய இயேசுவின் குரலை ஏற்று, அவரது பணியைச் செய்வதில்தான் அழைத்தலின் சிறப்பு வெளிப்படுகிறது. இத்தகைய இறை அழைத்தல் மனித மனங்களை மாற்றி, புதிய சமுதாயத்தை உருவாக்கி, புதிய உலகைப் படைத்திட வித்திடுகிறது.
“நான் கடவுளின் கையிலுள்ள பென்சில். அவரது விருப்பம்போல் செய்ய விட்டுவிட்டேன். சில நேரங்களில் உடைந்ததாகக்கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் கடவுள் எதிர்பார்ப்பது,‘இதோ வருகின்றேன் இறைவா’  என்ற  பதிலைத்தான்” என்று அருளாளர் அன்னை தெரசா கூறினார்கள். எனவே கட்டாயத்தினால் அல்ல, சுதந்திரமாக இயேசுவின் பணிக்கு அர்ப்பணம் செய்யும் வாழ்வு மிகச் சிறந்தது, உன்னதமானது. கடவுளுக்காக வாழ்வதில்தான் வாழ்க்கையின் பொருள் உள்ளது என்பதை உணர்ந்தவர்களாய், இயேசுவின் குரலை ஏற்று வாழும் குருக்கள், துறவியர்களின் வாழ்வு சிறந்தது எனலாம்.
ஆகவே, இறை அழைத்தல் என்பது வெற்றிக்கு உழைப்பை விலையாகக் கொடுப்பது, முயற்சிக்கு நம்பிக்கையை விலையாகக் கொடுப்பது, மகிழ்ச்சிக்கு அன்பை விலையாகக் கொடுப்பது. மேலும் திறமைக்குப் பயிற்சியை விலையாகக் கொடுத்து வாழும் தியாக வாழ்வு. எனவே இறை அழைத்தலுக்கு உன் இதயத்தையும், மனித நேயத்திற்கு அனைத்தையும், இறையரசுக்காக நம்மையே விலையாக இயேசுவைப் போன்று கொடுப்பதே இந்த அழைப்பு. இத்தகைய மேன்மையான அழைப்பு ஒரு சவாலாக இருந்தாலும், அன்பின் அதிசயமாக விளங்குகிறது;  வேறுபட்ட துருவங்களை இணைக்கிறது. உள்ளங்கள் ஒன்றாகின்றன, பகை உணர்வு மாறி உறவாகின்றது. இறை அழைத்தலுக்காய் இறைஞ்சுவோம், உழைப்போம்.
“நற்செய்தி அறிவிப்பவரின் மலரடிகள் எத்துணை அழகானவை!” 
Sr. Theresita, FSM

0 comments:

Post a Comment