சுவாமி சுகபோகானந்தா எழுதிய “மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ்” புத்தகத்தில் உள்ள ஒரு கதை இது. குருக்கள், துறவிகளுக் கென்றே தனியே ஆடைகள், அடையாளங்கள் என்று தனியே பல அலங்காரங்களைக் கொண்டு காட்சி தந்தாலும், அவர்களில் உண்மைத் துறவிகளை, குருக்களைத் தேட வேண்டிய இன்றைய நிலையில் இந்தக் கதை எமக்கு வித்தியாசமாகப் பட்டது. துறவிகள், குருக்கள் என்று தனியே காட்டும் ஆடைகள், அடையாளங்களைத் தூக்கி எறிந்த பலரும் கூட அவர்களிடமுள்ள அதிகாரங்கள், ஆணவங்களைத் தூக்கி எறிய மறந்த காரணத்தினால் அந்த அதிகாரமும் அது தந்த ஆணவமும் துருத்திக் கொண்டு வெளியே தனியே தெரிவதனால் உண்மையான துறவிகளை இங்கும் மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆணவத்தை ஒழித்து அதிகாரத்தை மக்களிடம் வழங்கி, (குறிப்பாக திருச்சபையில் ஓரங்கட்டப்பட்ட மக்களாகிய பொதுநிலையினர் என்றழைக்கப்படும் பாமரர்களிடம் அதிகாரத்தை வழங்கி) பணி செய்யும் குருக்கள், துறவிகள் உண்டா என ஏங்கி தேடிக் கொண்டிருந்த வேளையில் பொது நிலையினரைத் தலைவர்களாக உருவாக்கு வதிலும் திருச்சபையை மக்களிடமே திருப்பி கொடுப்பதிலும் தன் முழுக்கவனத்தையும் செலுத்தி உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு குருவை பொதுநிலையினர் பலர் மனதிலும் இடம் பெற்ற ஒரு குருவை இம்மாதம் யாமறிந்த குருக்கள் வரிசையிலே அறிமுகப்படுத்திட ஆசிக்கின்றேன்.
அந்தக் குருவானரைச் சந்தித்து கட்டுரையின் நோக்கம் பற்றி விளக்கி பேட்டியை ஆரம்பிக்க முயன்ற அந்த கணமே அவர் வைத்த முதல் வேண்டுகோள் . . . எனது பெயரையோ, முகவரியையோ குறிப்பிட்டு என்னை அடையாளப் படுத்த வேண்டாம் என்பதுதான். ஏன்? என்றேன். என் பெயர் அடையாளங்களைவிட நான் நம்பும் இறைவனின் பெயரும், அவர் வாழும் இடமான பாமரர்களின் (பொதுநிலையினரின்) முகவரியுமே முக்கியமாக வெளிப்பட வேண்டுமென்பதால் என் பெயருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்றார்.
“குரு” என்கிற அதிகாரத்தை, கூடவே அதனை ஒட்டிப் பிறக்கும் ஆணவத்தைத் துறந்தும், அடையாளங்களை இழந்தும் நிற்க முயல்வதால் மக்கள் பலரின் மனதில் சிறந்த குருவாக இடம் பெற்றுள்ள இவரின் இந்த வேண்டுகோளே எனக்கு மேலே உள்ள சென் துறவியின் கதையை ஞாபகப் படுத்தியது. அவரின் வேண்டுகோளுக் கேற்ப நான் அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லப் போவதில்லை. ஆனாலும் அவர் யார்? என நீங்கள் கண்டு கொண்டால் அது அவரது செயலின் அடிப்படையில் அடையாளம் கண்டதே அன்றி என்னுடைய தவறல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இனி பேட்டிக்குள் போவோம்.
நான் : தந்தையே உங்கள் தேவ அழைத்தல் பற்றியும் அதற்கான காரணிகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
தந்தை : கும்பகோணம் மறைமாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண வேதியர் குடும்பத்தில் பிறந்தேன். எனது தேவ அழைப்புக்குக் காரணமான முதல் குருக்கள் என் பெற்றோர்களே. என் அப்பாவிடமிருந்து நீதியுணர்வையும் என் அம்மாவிடமிருந்து தாராள மனதையும் நான் பெற்றேன். எனது கிராமத்தில் பணி செய்த திருச்சி புனித அன்னாள் சபையின் அன்றைய கன்னியர்களும், பங்குக் குருக்களுமே “நான் குரு ஆகனும்” என்கிற வித்தை என்னுள் விதைத்தார்கள்.
குருமடத்தில் பயிற்சியாளர்களாய் இருந்த அன்றைய மிசனரி குருக்கள் தங்களின் எடுத்துக்காட்டான எளிமையான பற்றற்ற வாழ்வால் என்னை ஒரு நல்ல குருவாக உரமிட்டு வளர்த்தனர். இப்படியாக எனது பணி வாழ்வில் இவையயல்லாம் எனக்கு ஆதாயமாகவே இருந்தன.
குருவான பின்பு பாண்டி மறை மாவட்டத்தில் ஒரு போர்டிங்கில் மாணவர் களைக் கண்காணிக்கும் பணி என்னிடம் கொடுக்கப்பட்டது. எனது குடும்பத்தில் எனது தாய் தந்தையர் பட்ட கஷ்டங்களை அறிந்திருந்த காரணத்தால் அங்கு படிக்கும் மாணவர்கள், அவர்கள் பெற்றோர் படும் கஷ்டங்கள் இவைகளை அறிந்து நடந்து கொள்ள என்னால் முடிந்தது.
பின்பு நான் கடலூரில் பணி செய்த போது அங்கிருந்த பங்குத் தந்தை (மலையாள நாட்டைச் சேர்ந்தவர்) கொடுத்த பணிச் சுதந்தரம், ஒத்துழைப்பு என்னை வெகுவாய்ப் பக்குவப்படுத்தின. நிறைய குருக்கள் துறவிகளுடன் எனக்கு நல்ல தொடர்பும் நட்பும் இருந்ததால், எனது குருத்துவ வாழ்வு பொறுத்தமுள்ள வகையில் நகர்ந்து கொண்டிருந்தபொழுது மைசூர் - அஞ்சலி ஆசிரம நிறுவனர் தந்தை அமலோற்பவதாஸ் அவர்களின் பயிற்சிக்கு அனுப்பப்பட்டேன்.
அவரது 4 மாத கால பயிற்சி எனது ஏழு ஆண்டு கால செமினெரி வாழ்க்கையை வகுத்து தொகுத்து வழங்கியதால் எனது குருத்துவ வாழ்வைப் பகுத்துப்பார்த்து அதில் உறுதிப்படுத்த உதவியது. எனது எளிமையான வாழ்வுக்கு அதுவே அச்சாணியாய் விளங்கியது. அதன்பின்பு அவருடன் கொண்டிருந்த தொடர்பும் தேடலும் என்னை செழுமைப்படுத்தின.
நான் : உங்களது அருட்பணி வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக எதைக் கருதுகிறீர்கள்?
தந்தை : பாண்டி மறைமாவட்டத்தின் புண்ணிய பூமியான கோணாங்குப்பம், மூன்று மாவட்டங்களின் வால் பகுதியான அணிலாடி போன்ற பங்குத் தளங்களில் 13 ஆண்டுகளும் 1993 முதல் தந்தை அமலோற்பவதாஸுக்குப் பின்பு மைசூர் அஞ்சலி ஆசிரமத்தின் பொறுப்பாளராய் பணியேற்றி வரும் இந்நாட்களிலும் எவ்வித நிதி கையாளும் வேலைகளிலும் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டதே இல்லை (காசை நான் தொட்டதுமில்லை, வாங்கியதுமில்லை) என்பதைப் பெருமையாக கருதுகிறேன். பங்கிலுள்ள பொதுநிலை யினரே அக்காரியங்களைக் கவனிக்க வழிவிட்டே நான் செயல் பட்டுள்ளேன். வெளிநாட்டு ப்ராஜெக்ட் ஒன்று கூட நான் வாங்கி செயல்படுத்த முனைய வில்லை. இந்தச் செயல்பாடே ஒரு துறவிக்குரிய குறைந்தளவு தேவைகளை மட்டுமே எனக்குள் கொண்டு பணத்தின் மீது பற்றில்லாமல் எளிய வாழ்க்கை வாழ எனக்கு துணை செய்கின்றது. அதுவே ஒரு குருவானவர் Masterஆக இருக்கும் காலச் சூழ்நிலைகளை குறைந்து Pastorஆக வாழ எனக்கு வழி செய்தது. ஆனாலும் அணிலாடி போன்ற பங்கில் பணியாற்றிய போது அங்கிருந்த இயேசு சபை குருக்களோடு இணைந்து அப்பங்கிலிருந்து பூர்வீக குடிகளின் ஆதிக்க செயல்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஏழை எளிய தலித் மக்களும் கோவில் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் கிராம குழு (Village Committee) அமைத்தும், கல்வி நிலை உயரவும் முயற்சிகள் செய்தேன். அதுவும் எனக்கு நிறைவை தந்த பணிகள்தான்.
நான் : தங்களின் தற்போயை பணி குறித்து ...
தந்தை : தந்தை அமலோர் அவர்களின் திடீர் மறைவுக்குப் பிறகு அஞ்சலி ஆசிரம நிர்வாகிகளின் அழைப்பின் பேரிலும், மைசூர் ஆயர் அவர்களின் வேண்டுகோளின் படியும் 1993 முதல் ஆசிரம பொறுப்பாளராய் எனது பணியை செய்து வருகிறேன்.
இந்த ஆசிரமத்திற்கு வரும் பல்வேறு மறைமாவட்ட குருக்கள், துறவிகள், பொதுமக்கள் எல்லோருக்கும் ஆறுதலும் தேறுதலும் வழங்கி பக்குவப் படுத்தும் மையமாக,பண்படுத்தும் இடமாக அஞ்சலி ஆசிரமத்தினை தந்தை அமலோற் அடிகளார் காட்டிய வழியில் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
இதன் மூலம் என் குடும்பம், என் பங்கு, என் மறைமாவட்டம், எனது மாநிலம், எனது நாடு என அனைவரையும் இணைத்து இறையாட்சியை நோக்கி அழைத்தும் செல்லும் கடமை எனக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன். தந்தை அமலோற் அவர்கள் பெரிதும் விரும்பி தொடர்ந்து உழைத்த “பொது நிலையினரைக் கட்டி எழுப்பிட” அவரால் உருவாக்கப்பட்ட இந்திய கிறித்தவர் மறுமலர்ச்சி இயக்கத்தினை தொடர்ந்து வழிநடத்துவதில் தனிப்பட்ட ஆர்வத்தையும் அக்கறையையும் செலுத்தி வருகிறேன். அந்த வகையில், அடுத்த மாநிலத்திலுள்ள மைசூர் அஞ்சலி ஆசிரமத்திற்கு சாதாரண, பாமர மக்கள் வருவது கடினமானது, காஸ்ட்லியானது என்பதால், தமிழகத்தின் நடுநாயகமான திருச்சி அளுந்தூரில் ஒரு மையத்தை அமைத்து பொதுநிலையினர், துறவிகள், குருக்கள் போன்றோரை இவ்வியக்கத்தின் வழியாக கட்டி எழுப்பி வருகின்றோம்.
குருக்கள் ஆண்டை முன்னிட்டு கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் தமிழக திரு அவையின் சங்மத்தைக் கூட்டி அதில் தமிழக திருச்சபை கொண்டுள்ள விசுவாத்தின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய தீர்மானங்களை அடையாளம் காண ஏற்பாடு செய்தோம். இதில் பொதுநிலையினர். குருக்கள். துறவிகள். ஆயர் என பலரும் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கைப் பயணத்தை உரசிப் பார்த்து, உரமேற்றிட உறுதி எடுத்தனர். இதற்கான ஏற்பாடுகள், செலவுகள் எல்லாவற்றையும் பொதுநிலையினரே முன்னெடுத்து செல்ல வழிகாட்டி வாய்ப்பு கொடுத்தபோது அது சிறப்பாக் நடைபெற்றதும் எனக்கு நிறைவையும் புது தெம்பையும் கொடுத்தது.
இப்படியாக தம் பணிகளை விவரித்துக் கொண்டிருந்த தந்தை அவர்களை வாழ்த்தினேன். பங்குப் பேரவை போன்ற அமைப்புகளில் வெறும் ஆலோசனை கூறும் ஆட்களாக மட்டும் பொதுநிலையினர் அமர்த்தப் படுவதற்குப் பதிலாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக பங்குப் பேரவை, மறைமாவட்டப் பேரவை போன்ற அவர்களின் அமைப்புகள் ஆக்கப்பட வேண்டும் என்கின்ற அவர்களின் உரிமைக் குரலின் நீதியைப் புரிந்து ஏற்றுக் கொண்டு வழிகாட்டும் நாயகனாய் மட்டுமல்லாது தம்மோடு நல்லுறவில் இருக்கும் ஆயர்கள், குருக்கள், துறவிகள் போன்ற அதிகாரம் படைத்தவர்களிடம் மக்களின் உரிமைக் குரலை பக்குவமாய் எடுத்து வைத்து புரிந்து கொள்ள உதவியும் செய்யும் தந்தை அவர்களின் பணி மகத்தான பணியாக பல பொதுமக்களாலும் ஏற்று கொள்ளப்பட்டு நிற்கிறது.
எங்கோ இருக்கும் உழைக்கும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதைக் காட்டிலும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இவர்தம் பணி போற்றி பாராட்டப்பட வேண்டியது மட்டுமல்ல பல பணியாளர்களும் தம் வாழ்வில் பழக்கப்படுத்தப்பட வேண்டியது. வெள்ளையர்களிடமிருந்து இந்தியர்கள் சுதந்திரம் பெற உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸில் பல இந்திய தலைவர்கள் இணைந்து பங்களிப்பு செய்ததைக் காட்டிலும் அதில் அண்ணி பெசன்ட் என்கிற வெள்ளைக்காரப் பெண்மணி தன்னை இணைத்துக் கொண்டு பங்களிப்பு செய்ததே மிகச் சிறப்பான பணி. அதைப் போலவே பொதுநிலையினரின் உரிமைக்காக குரல் கொடுப்பதில் ஒரு குருவே முனைப்பாக செயல்படுவது முகாந்திரமான பணியே. அதிலும், குரலில் மட்டுமல்ல செயலிலும் அதனை காட்டி பலருக்கும் முன்மாதிரியாய் காசைத் தொடாத குருவாய் அதனால் கசடுகள் சூழ முடியாத துறவியாய் தொடர்ந்து நடைபோடும் அவரை வணங்கி விடைபெற்றோம். பொருட்களின் மீது பற்றற்று புது இலக்கணம் தந்த அந்த காவிக்காரருக்கு கணக்கோடி வாழ்த்துக்கள்.
எஸ். எரோணிமுஸ், “ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி