உயிர்ப்பு

கருமையான மை இருட்டு.  இரவில் அந்தக் கல்லறையை அவன் காவல் காத்துக் கொண்டிருக்கிறான்.  அவனோடு காவலுக்கு இருந்த இரண்டு காவலர் களும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நன்றாக வயிறு முட்ட குடித்துவிட்டு அரைத் தூக்கத்தில் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கின்றனர்.  அவர்களில் ஒருவனுக்கு அன்று கல்லறையில் புதைக்கப்பட்ட மனிதனின் உடை யாருக்கு என்று சீட்டுப் போட்டுக் குலுக்கியதில் அவனுக்கு விழவில்லையாம்.  தன் வருத்தத்தை மற்றவனிடம் சொல்லி பெரியதாக குறைபட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் இவர்களோடு காவலுக்கு இருந்த அந்தக் காவலனுக்கு ஏனோ பசியும், தாகமும் கொஞ்சம்கூட எடுக்க ல்லை, சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் அநியாயமாக சிலுவையில் இறந்த அந்த மனிதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.  பாவம் இந்த மனிதன் எல்லா மக்களுக்கும் நல்லதையே செய்தவர்.  குருடர்களுக்குப் பார்வையைத் தந்தவர், வாய் பேச முடியாத ஊனமகளை பேசவைத்தார்.  நோயாளிகளை குணமாக்கினார்.  விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கல்லால் அடிக்கவிருந்தவர்களிடமிருந்து காப்பாற்றி அவளை மனம் மாறச்செய்தார்.
இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, கடுமையான காய்ச்சலில் சாகக்கிடந்த தன் ஒரே மகனை ஒரே வார்த்தையால் குணமாக்கிய குணவானாயிற்றே . . .  இவரைப் போய் சிலுவையில் அறைந்து கொன்று விட்டனரே . . .  அன்று இவரைப் பிடித்துக் கொண்டு போகும்போதுகூட இந்த மனிதன் எவ்வித மறுப்பும் காட்டாமல் உடன் சென்றாரே . . .  இவர் நினைத்திருந் தால் அவர்கள் பிடியில் இருந்து தப்பித்துச் சென்றிருக்க முடியும்.  ஆனால் இவர் நல்ல மனிதராக இருந்ததால்தான் ஒரு கொலை யாளியாக பலியாகப் போகும் செம்மறி ஆடாக அவர்களின் பின்னால் சென்றார்.
பிலாத்து இவரை வேண்டி வேண்டி கேட்கும்போதுகூட வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூட பேசவில்லையே . . .  இந்த மனிதன், இவர் பேசிய ஒரு சில வார்த்தை கள் கூட யாருக்கும் புரியாமல்தானே இருந்தன.  என்ன சொன்னார் நீ யூதர்களின் அரசனா?  என்று கேட்டதற்கு, நீர்தான் அதைச் சொல்கின்றீர் . . . என்றார்.  நீர் எந்த நாட்டின் அரசன் எனக் கேட்டதற்கு என் அரசு இவ்வுலகைச் சார்ந்தது அன்று என்றாரே ... அப்படியானால் வேறு எந்த உலகத்திற்கு இவர் அரசன் . . . ?
இந்த மனிதனைக் கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முடியவில்லையே!  புரியாத புதிராக அல்லவா இருக்கிறார் . . . ! கடவுளாக இவர் இருந்திருந்தால் உரோமை வீரர் களிடம் மாட்டிக்கொள்ளாமல் வானதூதராய் வானில் பறந்து போய் இருக்கலாமே!  அப்படி செய்யாமல் எத்தனை சாட்டை அடிகள் அவர் உடம்பைப் பதம் பார்த்தன.  எப்படிப்பட்ட அவமான வார்த்தைகள் அவர் மீது அம்புகளாய் வந்து பாய்ந்தன!  சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடந்தாரே, அந்தச் சிலுவையின் கனம் தான் என்ன ... ?  எல்லா வேதனை களையும், அவமானங்களையும் காரித் துப்பிய எச்சிலையும் உடம்பில் தாங்கிக் கொண்டு திட மனதுடன், ஒரு இலட்சிய வீரனாய், கருணையான பார்வையோடு, கரடு முரடான கல்வாரிப் பாதையில் கடமையே கண்ணாக நடந்து வந்தாரே . . . என்ன ஒரு மனத் தெளிவு, என்ன ஒரு திட நம்பிக்கை, எடுத்த காரியத்தை முடிக்கத் துடிக்கும் கடமை உணர்வு . . . என்று திகைத்த அவன் . . .
இத்தகைய இலட்சிய வீரனைப் போய் சிலுவையில் அறைந்தனரே, அய்யகோ, சிலுவையை சுமக்க முடியாமல் தடுமாறி விழுந்த அவரைக் காலால் எட்டி உதைத்து சாட்டையால் அடித்து எழுந்து நடக்கச் சொல்லி மிரட்டி மிருகமாய் நடந்து கொண்டேனே . . . ஆனால் அந்த நல்ல மனிதன் கோபப்படாமல் என்னை ஒரு பார்வை பார்த்தாரே . . . என்ன ஒரு தீர்க்கமான பார்வை . . .  அப்பப்பா . . . அந்தப் பார்வையின் பொருள் இன்றுவரை எனக்கு விளங்கவே இல்லையே.  
கொடுமையிலும் கொடுமையான செயல் ஒன்றை அந்த நல்ல மனிதருக்குச் செய்தேனே . . .  ச்சீ . . . என்ன ஒரு ஈனச் செயல், அந்த மனிதனைச் சிலுவையில் மரமோடு மரமாக கிடத்தி உள்ளங்கையில் ஆணியை அடித்த கொலைகாரன் அல்லவா நான் . . . என்று அந்த கல்வாரித் தோட்டத்தில் காவலுக்கு இருந்த அவன் கைகளைத் தரையின் மீது ஓங்கி ஓங்கி அடித்துக் கொள்கிறான்.
அந்த முகத்தை நினைக்கும்போது, அவன் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவதைப் போல் அவன் உணர்கிறான்.  நல்லதையே நினைத்து நன்மைகளையே செய்த நல்லவனை தன் ஒரே மகனை சாவின் பிடியில் இருந்து காத்த தியாக சீலனை நானும் கூட இருந்து கொன்று விட்டேனே என்று அவன் மனம் கல்லும் உருகும் வண்ணம் கல்லறையில் இருக்கும் இயேசுவிற்காய்க் கழிவிரக்கப் பட்டது.  கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது.
பைத்தியக்காரனைப்போல் அவன் இங்கும் அங்கும் ஓடி அந்தக் கல்லறைத் தோட்டத்தில் மன நிம்மதி இன்றித் தவிக்கின்றான்.  ஒரே ஒரு முறை அந்த உத்தமனின் முகத்தைப் பார்க்க இவன் மனம் ஏங்கியது.  அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தவித்தது.  அவரைப் பார்த்து விட்டால் போதும், இந்த உலகத்தையே கொடுத்தாலும் தூசு என தூக்கி எறிந்து விடலாம்.  ஆனால் கொடுமையிலும் கொடுமையாய் கொலை செய்யப்பட்டு கல்லறையில் புதைக்கப்பட்ட அவரைப் பார்க்க முடியாதே . . . என்று அவன் மனம் ஆற்றா மையால் அழுதுகொண்டிருக்கும் போது
அவனுக்குள்ளே ஒளிக்கீற்றாய் ஒரு நம்பிக்கை மின்னல் தோன்றி மறைகிறது.  இன்று இரவுதானே அந்த இயேசு உயிருடன் கல்லறையைவிட்டு வருவார் என்று சொன்னார்கள்.  அதை நம்பாத உரோமை அதிகாரிகள் அவரைச் சேர்ந்த வர்கள் அவரைத் தூக்கிச் சென்றுவிடு வார்கள் என்பதற்காகத்தானே நம்மைக் காவலுக்கு அனுப்பினார்கள், அப்படி யானால் நிச்சயமாக அந்த இயேசு இன்று இரவு உயிருடன் எழுந்து வருவார் . . .  அப்படி வரும்போது அவர் முகத்தைக் கண்குளிர பார்த்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.
இரவு நீண்டுகொண்டே போனது, விழிப்புடனே அவன் அந்தக் கல்லறையைப் பார்த்துக் கொண்டி ருக்கிறான்.  மயான அமைதியோடு இறுக்கமாக இருந்த அந்த இடத்தில் சில்லென்று குளிர்காற்று வீசுகிறது.  வாசமிக்க நறுமணம் அந்த இடத்தில் பரவுகிறது.  இதை உணர்வதற்குள் திடீரென்று ஒரு மின்னல் பளிச்சென அடித்து அந்த இடமே இரண்டாக பிளந்ததைப் போல் பயங்கர வெடிச் சத்தத்துடன் நிலம் நடுக்கமடைகிறது, அப்போது . . .
மூடிய கல்லறையின் பெரிய பாராங்கல் தானாகத் திறந்து சிதறி ஓடுகிறது.  அந்தக் கல்லறையில் இருந்து இயேசு சூரிய ஒளி பிரகாசமாய் ஆயிர வெண்ணிலவு அழகுப் பொலிவுடன், சாந்தமான பார்வையோடு போர் களத்தில் வெற்றிபெற்ற வீரனாய், வானோர்கள் எக்காளம் முழங்கி, சிலுவையை வெற்றிச் சின்னமாகக் கையில் ஏந்தி வெளியே வருகிறார்.  அங்கு பிரமிப்போடு தன்னையே இமைக்காமல் பக்தியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த காவலனுக்கு அருளாசீர் வழங்கி, கொல்கொத்தா மலையின் கொலை களத்தில் பார்த்த அதே பார்வையைப் பார்த்து புன்னகையுடன் சாவுக்குச் சாவுள மணியடித்து சாவை வென்ற சீலனாய் வெளியே வருகிறார்.  அவனுக்கு மன்னிப்பு வழங்குகிறார், மன்னிக்கும் அந்தப் பார்வையின் பொருளை அவன் அன்றுதான் உணர்கிறான்.
நடந்தவைகளைப் பயத்துடன் பார்த்த இரு காவலர்களும் மிரண்டு பயத்தால் வெடவெடத்து மயங்கி விழுகின்றனர்.  திறந்த மனதுடன் இயேசுவின் திருமுகத்தைப் பார்க்கத் துடித்து, பின்னர் மன்னிப்புப் பெற்று பேருவகைக் கொண்ட அந்தக் காவலன் அன்றலர்ந்த மலராகப் புது மனிதனாய் புனிதன் காட்டிய பாதையில் வாழ அந்தக் கல்லறைத் தோட்டத்திற்கு மனதால் நன்றி சொல்லி வெளியேறு கிறான்.  ஆம் மரணமும் மரணத்தோடு இணைந்த கல்லறையும் வாழும் மனிதருக்குப் புது வழிகாட்டும் புதிய பாதைகள், அதுதான் சுயநலத்தையும், பேராசைகளையும் குழிதோண்டிப் புதைத்து மன்னிப்பு என்ற மாபெரும் மருந்தை வழங்கி மனித நேயத்தை வளரச் செய்யும் புனிதன் காட்டிய புரட்சிப் பாதை!
தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி

0 comments:

Post a Comment