அன்னை மரியாள் நம் தாய்


அன்புச் சகோதரனே, சகோதரியே, இயேசுவின் இணையற்ற நாமத்தில் என் அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் நலமாக இருக்கவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக விளங்கவும் இறைவனை மன்றாடுகிறேன்.

நம் இந்தியத் திருச்சபை இருபெரும் விழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னையின் விண்ணேற்பு மற்றும் நம் நாடு சுதந்திரம் அடைந்த நாள் நினைவாகக் கொண்டாடுகிறது. இவ்விழா, நாம் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நினைவூட்டலே. சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டே, எதையும் செய்கின்ற போக்கு இருக்கும் வரை நமக்கு ஏது சுதந்திரம்? செய்ய வேண்டியதை மட்டுமே செய்தால், இந்த உலகம் சுதந்திரப் பறவையாய் உலா வரலாம்; விழா கொண்டாடலாம் என்று விண்ணேற்படைந்த அன்னை நமக்குத் தெரிவிக்கின்றார்.

ஆம், “அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார். நிலா அவருடைய காலடியில் இருந்தது. அவர் பன்னிரு விண்மீன்களைத் தலையில் சூடியிருந்தார்” (தி.வெ. 12:1). இந்த அருமையான வார்த்தைகள் திருச்சபையைப் பற்றியே என்றாலும், பல காலமாகப் புரிந்தோ புரியாமலோ அன்னை மரியாவுக்கென்றே பயன்படுத்துகிறார்கள். அத்துணை அற்புதமான பெண்மணி அவர்.

வானம் வளைந்து வந்து வணங்கியது. வணக்கம் கூறி உன்னதனுக்குக் கருவில் குடி கேட்டது. தந்தார், அவர் வந்து பிறந்தார். வளர்ந்து நமக்கு வாழ்வு  கொடுக்க உயிர் கொடுத்தார், உயிர்த் தெழுந்தார், விண்ணேறினார். மறுபடியும் வானம் வளைந்து வந்து அன்னை மரியாவை எடுத்துச் சென்றது.

“நான் இருக்குமிடத்தில் என் தொண்டரும் இருப்பார். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” (யோவா 12:26). பொதுத் தீர்வைக்கு முன்னரே, உலக முடிவுக்கு முன்னரே அன்னை எப்படி விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்? இது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? என்று கேட்டால், நானும் உங்களைக் கேட்பேன். கானாவூரில் திராட்சை இரசம் தீர்ந்துபோன நிகழ்வில் இயேசுவின் நேரம் இன்னும வரவில்லை என்ற நிலையில், அதை முன்கூட்டியே வரவைத்தாரே அன்னை மரியா! இது ஓவர்தானே! அன்னை மரியா என்றுமே ஓவர்தான். சீடன் குருவை மிஞ்சி... நன்கு பயிற்சி பெற்ற சீடன் குருவைப் போல இருப்பான். இப்படிப்பட்ட நிலையில் அன்னை மரியாவை ஆண்டவர் உயர்த்தி வைத்திருக்க நம்மில் சிலர் பைபிளை மட்டும் தூக்கிக்கொண்டு மரியா வேண்டாம், திருப்பலி வேண்டாம், இந்தத் திருவிழா வேண்டாம் என்று சொல்லுகின்ற போக்கு இயேசுவுக்குப் பிடித்தமானதாகுமா?

தேரில் வைத்து அழகு பார்க்கவும், தெருத்தெருவாய்ப் பவனி சென்று அன்னை மகிமையையும் அதற்குக் காரணமான ஆண்டவர் மகிமையையும் எடுத்துரைக்கும் உங்களில் பலரும் அந்த அன்னையின் விண்ணேற்பன்று திருப்பலிக்குக்கூட செல்லுவதில்லையே! இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இத்தனை ஆசீர்வாதமான அன்னை யைக் குறித்துப் பேசுபவர்கள் பலர் இறை வார்த்தையைத் தினமும் படிப்பவர்கள்கூட இல்லை. இது என்ன விதமான பக்தி, நம்பிக்கையோ எனக்குத் தெரியவில்லை. நீங்களும் நானும்கூட விண்ணேற்பு அடையும் பொருட்டு இறைவாக்கிற்குச் செவிமடுப்போம். அறிவிப்பதோடு நில்லாமல் ஆர்ப்பரிப்புடன் வாழ்ந்து காட்டுவோம். அப்போது, “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு உங்களைப் பெருகச் செய்வாராக. வாக்களித்தது போல உங்களுக்கு வாரி வழங்குவாராக” (இச 11).

மக்கள் கடவுளை விட்டுத் தடம் புரண்டபோது இறைவாக்கினர் மற்றும் தலைவர்கள் மூலம் மக்கள் மனம் மாறி இறைவனிடம் வரச் செய்தார் எனப் பழைய ஏற்பாட்டில் காண்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து சிலுவையடியில் மனுக் குலத்தைத் தன் தாயிடம் ஒப்படைத்தபின் அன்னையின் தாயுள்ளம் அவ்வப்போது பல இடங்களில் காட்சி கொடுத்து (வேளாங் கண்ணி, லூர்து நகர், மெக்சிகோ), “மனம் மாறுங்கள். செபம் செய்யுங்கள், செபமாலை சொல்லுங்கள்” என்று அறைகூவல் விடுகிறார் அன்னை மரி. நாமும் மரியாளைப் போல் “அவர் உங்களுக்குச் சொல்வ தெல்லாம் செய்யுங்கள்” (யோவா 2:5). நாம் நம் அன்னையின் சொற்படி நடப்போமா? அவர் வழியில் செல்வோமா? 

புhதை தேடும் பயணம்


இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரைச் சந்தித்தேன. மிகக் குறுகிய காலத்தில் தொழிலதிபராக உயர்ந்தவர் அவர். “உங்கள் வளர்ச்சியின் இரகசியமென்ன?” என்று கேட்டதற்கு, “என் வாழ்க்கைக்குப் பாதை காட்டுபவர் கணினி உலகில் முத்திரை பதித்த பில்கேட்ஸ்; அவர்தான் என் தலைவர்; அவர் கடும் உழைப்பினால் உயர்ந்த உன்னத மனிதர்; என் இளமையிலிருந்தே அவரை முன்மாதிரியாக வைத்துச் செயல்படு கிறேன்; அவருடைய நேர்மை, மனந்தளரா உழைப்பு, நேரத்தைத் திட்டமிட்டுச் செயல்படுதல், பிறரை மதிக்கும் மனித நேயம் இவை யாவும் அவரிடம் என்னைக் கவர்ந்த மதிப்பீடுகள்” என்று நண்பர் பகிர்ந்து கொண்டார்.

இளமைக் காலத் தேடல்களில் ஒன்று தலைமைக்கான தேடல். “என்னை வழிநடத்த யாராவது இருந்தால் நன்றாக இருக்குமே” என்று எண்ணும் பருவம் அது. நடிகர்கள், அரசியல்வாதிகள், அறிவியல் மேதைகள், சமூக ஆர்வலர்கள், தேசியவாதிகள், தன்னார்வத் தொண்டர்கள்... இப்படிப் பலரால் ஈர்க்கப்படும் காலம் இளமைக் காலம். இவர்களில் “என் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலைவராக நான் யாரைத் தெரிவு செய்வது?” என்பதே அந்தத் தேடல்.

எல்லாருமே தலைவர்களாக இருக்க நினைக்க இக்காலத்தில், தன்னலம் மறந்து, பிறர்நலம் நாடும் நல்ல தலைவர்களைத் தெரிவு செய்வது சற்று கடினம்தான். குறிப்பாக, ஊடகங்களினால் தலைவர்களாக முன்னிறுத்தப்படுகின்ற ஒருசில போலிகளைக் குறித்து நாம் மிகவே கவனமாக இருக்க வேண்டும். எனவே பொது வாழ்வில் பிடிப்பு, இலக்கு நோக்கிய கவனக் குவிப்பு, கடின உழைப்பு, பிறருக்கு நல்வழி காட்டும் முனைப்பு, நம் இரத்த நாளங்களையும் சுண்டி இழுக்கும் உரை வீச்சு, தளர்ச்சியின்றி நம் வளர்ச்சிக்குப் பாதை காட்டும் விரிந்த பார்வை... இவை யாவும் நல்ல தலைவருக்கான ஒருசில அடை யாளங்கள். இத்தனை தகுதி களையும் சேர்ந்த ஒரு தலைவரை நம் வாழ்வின் முன்மாதிரி யாகத் தேர்ந்து கொள்ளும் போதுதான் நம் சாதனைகள் சாத்தியமாகும்.

நல்ல தலைவர்கள் நம் வாழ்வின் உந்து சக்தியாக அமைகிறார்கள்; இருளைக் கிழித்து, உழைப்பின் வெளிச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள். சாதனை வேட்கையை ஏற்படுத்தி, வெற்றிக் கோட்பாடுகளையும் செயல்முறை களையும் வகுத்து, சாதிக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புகிறார்கள். சுருங்கக் கூறின், நம் வாழ்வின் உச்சிக்குச் செல்ல ஏணிப் படிகளாக இருப்பவர்கள் இவர்கள்.

இளமைக்கால கனவுகளும் கற்பனைகளும் உருப்பெற நல்ல தலைவர்கள், வழிகாட்டிகள் நமக்குப் பலமாக அமைகிறார்கள். நல்ல தலைமையால் நாம் வழிநடத்தப்படும் போது நாமே வழிகாட்டிகளாகவும் மாற முடியும். பணி. 

அந்தோணி மதலைமுத்து
நல்லாயன் குருமடம், கோவை

வேற்றிச் சரித்திரம்


‘அழகிய தீயே’, ‘ மொழி’, ‘அபியும் நானும்’ போன்ற பல வெற்றிப் படங்களை, தத்ரூபமான படங்களை, தமிழ் மொழிக்குத் தந்து பெருமை கலந்த களைப்பில் இருந்தனர் இயக்குநர் ராதா மோகனும், தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜும்.  இப்படங்களின் வெற்றிகளை எல்லாம் வித்தியாச மாக கொண்டாட விரும்பி னார்கள்.  பிரம்மாண்ட அரங்குகள், பளபளக்கும் நட்சத்திரக் கூட்டம், கண்ணை கூச வைக்கும் வண்ண விளக்குகள் இப்படி எதுவும் இல்லாமல் மிகவும் சாதாரண முறையில் வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டும்.  அதுவும் பேசப்படும்படிக்கு இருக்க வேண்டும் என தீர்மானித்து திட்டமிட்டார்கள்.

நிசப்தமான கொண்டாட்டத்திற்காக நீலகிரி மலையைத் தங்களின் விழா மேடையாகக் கொண்டார்கள்.  இப்படங்களில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், உதவியாளர்கள் இப்படி ஒருவரையும் விட்டுவிடாமல் அவர்கள் குடும்பத்தினரோடு ஒரு பெரும் பரிவார மாகக் கிளம்பினார்கள்.  பயணம் ஆனந்தமாக இருந்தது.  அமர்க்கள மாகவும் இருந்தது,  உதகை நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு தற்காலிக ஊரையே அமைத்து அதில் தங்கி சில நாட்களைக் கழித்தார்கள்.  அப்போது தான் அவர்கள் இருந்த இடத்தின் சற்றுத் தொலைவில் ஒரு பெரிய ஆசிரமம் இயற்கை சூழலிலேயே நடப்பதாகக் கேள்விப்பட்டு அந்த இடம் தங்கள் நிகழ்ச்சிக்கு அமைப்பாக இருக்கும் எனத் தீர்மானித்து அவ்விடத்தில் விழா நடத்த முற்பட்டார்கள்.

அங்கே, இருப்பவர்களுக்கும் அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்பினார்கள்.  ஆசிரம நிர்வாகிகளைச் சந்தித்து அனுமதி பெற்றனர்.  ஆசிரம வளாகம் மிகவும் அழகாக ஜோடிக்கப்பட்டது.  வயது வித்தியாசமின்றி மாற்றுத் திறனாளிகள், மனவளர்ச்சி அற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர், வயதானதால் விலக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகள் எனப் பலதரப்பட்ட மக்கள் அங்கு இருந்தனர்.  இவர்களைச் சந்தோ­ப்படுத்துவதே தங்களின் வெற்றிக் கொண்டாட்டமாக இருக்குமென அவர்கள் நம்பினார்கள்.  ஆனால் அவர்களால் இவர்கள் வாழ்வு புரட்டிப் போடப்படும் என்று நினைக்கவில்லை.

விழா நாளன்று அனைவரும் வளாகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.  அவர்களின் சவாலான மனநிலையைக் கண்டு வந்திருந்தவர்கள் வியந்துப் போயினர்.  விளையாட்டுகளும், போட்டிகளும், பட்டிமன்றங்களும், நகைச்சுவை நிகழ்ச்சிகளும் எனப் பல சிறப்பம்சங்கள் இருந்தன.  எல்லோரும் உற்சாகமாக கலந்து கொண்டு பரிசுகள் வென்றனர்.  சென்னையின் பரபரப்பில், உஷ்ணத்தில், ஓய்வு ஒழிசலில்லாத உழைப்பில், கூட்ட நெரிசலில் அலைக்கழிக்கப்பட்டிருந்த படப்பிடிப்புக் குழுவினருக்குக்கூட இவ்வனுபவம் வித்தியாசமாக சந்தோ­ மாக இருந்தது.  

அன்று மதியம் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடனான கலந்துரை யாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  எல்லோர் முன்னிலையில் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்க அவர்களிடம் நேயர்கள் பல கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.  அப்போது அக்கூட்டத்திலிருந்த, முகம் விகாரமான ஒருவர் எழுந்து கேட்டார், “ஐயா, நீங்க திரையில்  அழகா இருக்கிற வர்களை, எந்த உடல் குறைபாடும் இல்லா தவர்களைக் கொண்டு படம் பண்ணி சாதிக்கிறீர்கள்.  ஆனால் இங்கே இருப்பவர் களைப் போல, சாதிக்கத் துடிக்கும் ஆசையுள்ளவர்களை ஏன் பயன்படுத்த மாட்டோம் என்கிறீர்கள்.  இவர்கள் குறை யுள்ள மனிதர்கள் என்பதாலா.  ஆயினும் இவர்களும் மனிதர்கள்தானே.  இவர்களுக்கும் அப்படிப்பட்ட ஆசைகள் இருக்கத்தானே இருக்கும்.  பல சாதனைகளைத் தந்துள்ள நீங்கள் ஏன் இப்படி ஒரு சாதனையைச் செய்யக்கூடாது?  இது உங்கள் உண்மையான சாதனையாக அமையும் தானே. உண்மையிலேயே நீங்கள் உலக மெங்கும் பேசப்படுவீர்களே, செய்வீர்களா?” எனக் கேட்டு அமர்ந்து விட்டார்.   

உடனே பதில் சொல்ல முடிய வில்லை அவர்களால்.  மனதிற்குள் யோசனை குடைய ஆரம்பித்தது.  ‘ஏன்?  செய்தால் என்ன?’ என யோசித்தார்கள்.  தங்களுடைய எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்தார்கள்.  கதைக்களம் உருவாக்கப்பட்டது.  இரவும் பகலும் யோசித்து அழகான கதை உருவானது.  கதைக்கேற்ற இசை உருவெடுத்தது.  அந்த ஆசிரமத்திலிருந்தே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.  ஒப்பனைகளை கட்டின.  ஆடை அலங்காரங்கள் அசத்தின.  பேசப்பட்ட வசனங்கள் உள்ளத்தின் குமுறலாக வெளிப்பட்டன.  இசை உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்தது.  கடின உழைப்பும், உண்மையான திறமையும் ஒன்று கலந்து ஒரு பெரிய வெற்றிப்படம் சரித்திரமாக, சாதனையாக ஒரே மாதத்தில் உருவானது.  வெற்றிவிழா கொண்டாட வந்தவர்கள் ஒரு வெற்றிச் சரித்திரத்தைப் படைத்துவிட்டு ஊருக்குத் திரும்பினார்கள்.  ஆசிரமக்காரர்களும் உள்ளூர்வாசிகளும் கண்ணீருடன் விடைதர, படப்பிடிப்புக் குழுவினர் கண்ணீருடன் விடை பெற்றனர்.

சென்னை சென்ற ஒருசில வாரங்களில் படம் திரையிடப்பட்டது.  திரையிடப் பட்ட அரங்கெல்லாம் உண்மை உணர்வு களைக் காண மக்கள் வெள்ளமென திரண்டனர்.  கண்ணீர் மல்க படம் பார்த்து வந்தனர்.  தன் சக மனிதனை சிநேகிக்கும் உணர்வு ஒவ்வொருவருள்ளும் ஊற்றாக ஊறியது.  மனதாலும் உடலாலும் ஊனப்பட்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட்டன.  அரசின் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.  தமிழக அரசின் பல வெற்றி விருதுகளை வாங்கிக் குவித்தது.  படப்பிடிப்பினருக்குப் பாராட்டு மழை குவிந்தது.  ஒவ்வொரு மாநிலத்திலும் படம் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டது.  உச்சக்கட்டமாக இந்திய அரசின் திரைப்படத் துறைக்கு மகுடமாக விளங்கிய தங்கத்தாமரை விருது அப்படத்திற்குக் கிடைத்தது.  இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் தங்க மகுடத்தில் வைரமாகப் பதிக்கப்பட்டது அப்பட வெற்றி.  ஒரு சின்னக் கேள்வி படைத்த வெற்றிச் சரித்திரம் வியக்க வைத்தது.

விண்ணகத்தின் ஏணி


ஒரு சமயத்தில் மிசனரி குருவானவர் ஒருவர், குறிப்பிட்ட கிராம மக்களுக்குத் திருப்பலி செய்வதற்காக பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றது. குருவானவரும் இறங்கினார். ஆனால் அவர் அப்பகுதிக்குப் புதிதாய் இருந்ததால் சரியான நிறுத்தத்தில் இறங்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார்.

இருப்பினும் அங்கிருந்த குக்கிராமத்தின் வீடுகளை ஏறிட்டுப் பார்த்தார். அவருக்கு எதிர்ப்பட்டவரிடம் தான் தவறாக இறக்கிவிடப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு அவரிடம், “இங்கு ஏதாவது மாதா கோவில் இருக்கிறதா? கிறிஸ்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?” எனக் கேட்டார்.அதற்கு அவர், “இங்கு ஒரு சிறிய ஆலயம் இருக்கிறது. எப்பொழுதாவது திறப்பார்கள். ஆனால் இங்கு இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் முதிர்வயதில் இருக்கிறார். அவர் கிறிஸ்தவரா என்பது தெரியாது. ஆனால் அவர் ஆலயத்தைக் கடந்து போகும்போதெல்லாம் தன் தலைத் தொப்பியை எடுத்துவிட்டு தலைதாழ்த்தி வணங்கிவிட்டு அந்த ஆலயத்தைக் கடந்து போவார். அவரது வீடு ஊருக்குள் குறிப்பிட்ட தெருவில் இருக்கிறது” என்றார்.
குருவானவரும் அங்குச் சென்றார். குறிப்பிட்ட இராணுவ வீரரைப் பற்றிக் கேட்டார். அந்த வீட்டிலிருந்தவர்கள் ஆச்சரியமடைந்து, குருவானவரை வரவேற்று மாடியில் வியாதிப் படுக்கை யிலிருந்த அவரிடம் அழைத்துச் சென்றார்கள். முதியவரும் ஆச்சரியத்தில் மகிழ்ந்து வரவேற்றார் தன் மெல்லிய குரலால் அவர் குருவானவரிடம், “ஃபாதர், நான் ஒரு கிறிஸ்தவன்தான். இராணுவம் சென்ற பிறகு ஆலயம் செல்வதையே நிறுத்திவிட்டேன். திருப்பலிக்குச் சென்றது இல்லை. பாவசங்கீர்த் தனமோ நற்கருணையோ நான் பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் நான் புதுநன்மை பெறும்பொழுது எங்களைப் பயிற்றுவித்த  குருவானவர், ஆலயத்தைக் கடந்து போகும்போதெல்லாம் ஆலயத்தில் உள்ள ஆண்டவர் இயேசுவுக்கு வணக்கம் செலுத்த தலை தொப்பியை எடுத்து விட்டு, தலைகுனிந்த பின் செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மரண நேரத்தில் அன்னை கன்னி மரியாள் உங்களை மோட்சம் சேரச் செய்வார்கள் என்றார். நானும் இந்நாள்வரை செய்து வந்திருக்கிறேன். ஆச்சரியம், என் மரணப் படுக்கையில் மாதா உங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்றார் ஆனந்த கண்ணீர் வடித்த நிலையில்.மரணப் படுக்கையில் இருந்தவரும் திருவருட்சாதனங்களைப் பெற்று சில மணி நேரத்தில் புனிதமாய் மரித்தார்.
குருவானவர் அபிஷேகத்தில் பெற்ற ஆசீர்வாதமான பரிசுத்த ஆவியைக் குறித்து இவ்வாறு வாசிக்கிறோம் : “ஆண்டவரின் ஆவி என்மேலே. ஏனெனில் ஆண்டவர் என்னை அபிஷேகம் செய்துள்ளார். உள்ளம் நொந்தவர்களைக் குணப்படுத்தவும், எளியோர்க்கு நற்செய்தியை அறிவித்து, உள்ளம் நொந்தவர்களைக் குணப் படுத்தவும் ஆண்டவர் என்னை அபிஷேகம் செய்துள்ளார்” (எசா 61:1) எனக் காண்கிறோம்.

லூக் 10:29-37 வரை வாசிக்கும் பொழுது, நல்ல சமாரியருடைய உவமையைக் காண்கிறோம். அடிபட்டுக் கிடக்கும் யூதனுக்குப் பணிவிடை செய்யும் நல்ல சமாரியர்தான் ஒவ்வொரு குருவானவரும். மக்களுக்குச் செய்யும் இறைப்பணியும் அன்புப் பணியும் நல்ல சமாரியனுடைய செயல்களைத்தான் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, 33-34 வசனங்கள் குருவானவரின் இறைப் பணியைக் குறிக்கின்றன.

ஆண்டவர் இயேசுவை விட்டுப் பாவத்தினால் பிரிந்து சென்று நித்திய வாழ்வை இழந்தவர்களைத்தான் அடிபட்டுக் கிடக்கும் யூதனின் நிலை குறிக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்காய் ஜெபித்து இறை ஆசீர் பெற இறைமக்களை அணுகிச் செல்பவர்தான் ஒரு குருவானவர். எல்லா மக்களையும் அணுகி அன்பு செய்பவரும் அவரே.

மனந்திரும்பிய அவர்களுக்கு ஞானஸ்நானத்தின் மூலம் புதிய பிறப்பையும், அபிஷேக எண்ணெய் பூசி பரிசுத்த ஆவியின் வல்லமைப் பொழிவில் அவர்களை இயேசுவில் வாழச் செய்பவர்தான் குருவானவர்.

திருப்பலியில் கல்வாரிப் பலன்களைப் பெற்றுத் தந்து இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்தையும் ஆன்மீக உணவாகவும் பானமாகவும் கொடுப்பவர்தான் இந்த அருட்பணியாளர். ஆன்மீக உணவாய் இயேசுவையே தருகிறார்.
பாவத்திற்காய்க் கண்ணீர் வடித்து பாவசங்கீர்த்தனம் செய்யும் ஒவ்வொரு வரின் உடைந்த உள்ளத்தை நல்ல சமாரியன் போல் கட்டு போடுபவரும் இந்தக் குருவானவரே.

கடைசியில் நோயில்பூசுதல் திருவருட்சாதனம் மூலம் மோட்ச வாழ்வுக்கு இட்டுச் செல்பவரும் இந்தக் குருவானவரே. எனவே, ஒவ்வொரு இறைப்பணி யாளரான குருவானவரும் நல்ல சமாரியனே.

மரணப் படுக்கையில் இருப்பவர்களின் மனநிலை பற்றி உளவியல் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் :
மரிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு நம் சரீரம் செயல்பாடுகள் அற்று உணர்விழந்து விடுகிறது. ஆனால் சிந்தனையாற்றல் மட்டும் செயல்படுகிறது. நமது மூளையின் செயலால் பிறப்பிலிருந்து இந்நாள் வரை நடந்துள்ள முக்கிய காட்சிகளெல்லாம் சில நிமிட திரைப்படம் போல் வெளிப் படுகின்றன. வாழ்வின் தவறுகளும் நிழற்படமாய் நிறுத்தப்படுகின்றன.
.இவ்வாறு பிரான்சிஸ் பியோபோர்ட் (Francis Beaufort) என்பவர் கூறுகிறார். 

மலையேற்றம் செய்யும் S.W. கோசென்ஸ்(Cozzens) என்பவர் மலையேறும்போது தவறி விழுந்தார். சுயநினைவை இழந்து மரணத்தின் பிடியில் இருந்து மீண்டும் சுயநினைவு பெற்று இவ்வாறு கூறியிருக்கிறார் : “நான் இறைவனோடு வாழும் வாழ்வைக் கொண்டிருந்ததால் மரண நினைவு என்னைப் பயமுறுத்தவில்லை. அதிசய விண்ணக காட்சிகளைக் கண்டேன். சில நொடிப் பொழுதிலேயே என் வாழ்வின் அனைத்து நினைவுகளும் வெளிப்பட்டு காட்சியாய்த் தென்பட்டன. இறை மகிமையில் வீற்றிருக்கும் மகிழ்வு என்னை ஆட்கொண்டதை அனுபவித்தேன்.” 

1935-ல் வெளிவந்த “Month” என்ற பத்திரிக்கையில் அருட்தந்தை தாஸ்டன் (Thurston) S.J. என்ற இயேசு சபைக் குருவானவர் இவ்வாறு எழுதுகிறார் : “மனிதனின் கடைசி நிமிடத்திலும் இறைவனின் இரக்கம் வெளிப்படுகிறது. தவறுகளும், பாவச் செயல்களும், செய்த குற்றங் குறைகளும் வெளிப்படுகின்றன. ஆத்துமாவில் இறையருளை இயேசு ஊற்றுகிறார். நல்ல கள்ளனைப் போல் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும் ஆன்மாவுக்குள் விண்ணக மகிழ்வு நிரம்புகிறது.” 

குருவானவர் அளிக்கும் நோயில்பூசுதல் திருவருட்சாதனம் இத்தகைய உளநிலையில் கடந்து செல்பவர்களையும் விண்ணகம் சேர்க்கும் பெருங்கடல் படகாக இருக்கிறது. குருவானவர் இறைப் பணியின் மேன்மைக்காக ஜெபிப்போம். ஆமென்.

Fr.  ச. ஜெகநாதன்,
அய்யம்பாளையம், திண்டுக்கல்