புனித கன்னிமரியின் லூர்து மலைக்காட்சி


பிரான்ஸ் நாட்டில் லூர்து நகருக் கருகில் 1858ஆம் ஆண்டு பிப்ரவரி 11இல் பிரனீஸ் மலையடிவாரத்தில் மசபியேல் குன்றுகளுக்கிடையே முதன் முறை யாக பெர்நதத் சுபீருஸ் என்ற நாட்டுப்புறத்து 14 வயதுச் சிறுமிக்கு, விறகு சேகரிக்கச் சென்ற இடத்தில் கன்னிமாமரி காட்சியளிக்கின்றார்.  இளமைத் தோற்றம் என்றும், மிக அழகானவராகக் காணப்பட்டார் என்றும் பெர்நதத் குறிப்பிடுகின்றார்.  கையில் ஒரு ஜெபமாலை இருந்ததையும் பார்க்கின்றார்.  பெர்நதத்திற்கு வாழ்த்துக் கூறி தன்னுடன் ஜெபிக்க அழைக்கின்றார் கன்னிமரி.

பிப்ரவரி 25இல் மீண்டும் காட்சியளித்து மரியன்னை கூறுவார் “அங்கு தெரிகின்ற அருவியில் போய் உன்னைக் கழுவிக் கொண்டு, நீர் பருகு”. அருவியை நோக்கிப் போகும் போது, அங்கு அல்ல என்று சொல்லி குகையின் தரைப் பாகத்தைச் சுட்டிக் காட்டினார்.  பெர்நதத் அங்கே போனாள்.

மார்ச் 25ஆம் நாள் மங்கள வார்த்தைத் திருநாள்.  மரியன்னை மீண்டும் அவ்விடத்தில் காட்சி தருகின்றார்.  இந்த முறை அந்த அம்மாளின் பெயரைக் கேட்கின்றாள் சிறுமி பெர்நதத்.  “நானே அமல உற்பவி” என்ற பதில் கிடைக்கிறது.  4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர் “தேவமாதா அமல உற்பவி, ஜென்ம பாவம்­ இன்றி உற்பவித்தவர்” என்னும் விசுவாசப் பிரமாணத்தை அறுதியிட்டுக் கூறியிருந்தார்.  கடைசியாக, 18-வது முறையாக கார்மேல் மலைக் கன்னியின் திருநாளன்று மரியன்னை பெர்நதத்துக்குக் காட்சியளித்தார்.  காட்சிகளிலெல்லாம் பாவிகளுக்காக மன்றாடப் பணிக்கின்றார்.  ஜெபத்துடன் தவ முயற்சிகள் அத்தியாவசியம் என்று குறிப்பிடுகிறார்.  அந்த இடத்தில் பவனி வரவேண்டும், ஆலயம் எழுப்பப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.  பலரும் கூடினாலும் பரவசமாகிவிட்ட பெர்நதத் மாத்திரமே மரியின் உருவத்தைப் பார்க்க முடிந்தது.

உலகின் எத்திசையிலிருந்தும் இன்று ஆண்டு தோறும் லட்சோபலட்சம் திருப்பயணிகள் அங்கு செல்கின்றனர்.  ஆயிரக்கணக்கான புதுமைகள் நடைபெறுகின்றன.  பலதரப்பட்ட கொடிய வியாதிகள் குணமா கின்றன.  மருத்துவர்களால் முற்றிலும் கைவிடப்பட்டவர்களுக்கு அவர்கள் முன்னாலேயே குணம் கிடைத்து உள்ளது.பல பாவிகள் மனந்திரும்புகின்றனர் என்பது தான் மிக முக்கியம்.  “உனக்கு நான் காட்சி கொடுத்ததினால், நீ இவ்வுலகில் துன்பம் இல்லாமல் வாழ்வாய் என்று நான் கூற மாட்டேன்.  மாறாக உனக்கு கலப்பில்லா மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு மறு உலகில்தான்” என்று லூர்துமேரி பெர்நதத்துக்குக் கூறியிருந்தபடி பல வேதனைகளை அனுபவித்த பிறகு இறைவனடி சென்றார். 

சிந்தனைக்கு : பெர்நதத் என்பவரைப் போல் குழந்தை உள்ளம் கொண்டு தேவ தாயின் மேல் பற்றுதல் கொண்டு ஜெபமாலையை உருக்கமாய் ஜெபிக்கவும் கற்றுக்கொள்வோம்.

எட்வர்டு

இறைவன் மீது நம்பிக்கை


நான் அறியாப் பருவமாகிய முதலிரு பருவங்களில் பெற்றோர்களின் அடக்குமுறை காரணமாக குழம்பி, மூன்றாம் பருவமாகிய இளமைப் பருவமதில் மனம் போன போக்கில் சென்று மென் மேலும் குழப்பத்திற்கு உள்ளானேன்.  பெற்றோர்களும் என் விருப்பத்திற்கு என்னை விட்டு விட்டார்கள்.  நம்பிக்கையின் வாசல்கள் எல்லாம் எனக்கு மட்டும் திறக்கவே திறக்காது என மனம் நொந்து சோர்ந்து போனேன்.  மேலும் இறைவனிடம் மன்றாடிய போதிலும் என் எண்ண அலைகள் வெகுவாக அலைமோதி விரக்தியின் விளிம்பில், வாழ்க்கையின் ஓரத்திற்கு சென்று, தனிமையில் தவித்து நின்றன. 

என் சுவாசம் போல நெருக்கமாய் இருந்த நண்பர்கள் எல்லாம் முகர்ந்து எறிந்துவிட்டனர்.  நம்பிக்கையற்ற நேரங்களில் கூட அவர்கள் என் மதிப்பைத் தாக்கி தரக்குறைவாக எடை போட்டார்கள்.  தனிமை விசும்பலில் இனி அந்தத் துரோகிகளின் நிழல் கூட படிய விடமாட்டேன் என்று நினைத்தேன்.  நான் விதைத்த விதைகளை மட்டும் எந்த மண்ணும் இறுக பற்றிக் கொள்ள வில்லையே என ஏங்கினேன்.  கடின பாறையும், கருவேல முட்களும் என்னைச் சிதைக்க முகவரி அற்றுப்போனேன்.  ஏமாற்றமோ, வலியோ எனக்குப் புதிதல்ல.  வெட்ட வெளியின் இருட்டு அமைதியில் அன்புக்காக ஏங்கிய நேரங்கள் உண்டு.  மனதில் ஓங்காரமிடும் நினைவலைகளாகிய மிருகத்தை வேட்டையாட இயலாமல் என்னையே காவு கொடுக்க நினைத்த தருணங்களும் உண்டு.  ஆழ்மன எண்ணங்கள் மிதந்து நடுமனதினில் கோரத்தாண்டவம் ஆடின. 

இருப்பினும் என் மீது ரோஜாக்களும் விழுந்தது உண்டு.  வாழ்விற்கு இனிமையூட்டும் அந்த இரசத்தைப் பருக விரும்பினேன்.  என்னைத் தேடும் இறைவனைத் தேடலாமா? என்ற பசுமையான கனவுகள் என்னில் மிதக்க ஆரம்பித்தன.  செபத்தில் இணைந்த கரங்கள்  உலகத்தைத் தாங்கும் கரங்கள் என்று எண்ண தொடர்ந்து செபிக்கும் அளவிற்கு எனக்குள் நம்பிக்கைக் காற்று வீசச் செய்தது.    “இறைவன் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாகமாட்டார்.  அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நன்மைகளைச் செய்வார்” (உரோ 10:11-12) என்ற இறைவார்த்தையைச் சிந்தித்தேன்.

வாழ்வில் என்ன இருக்கிறது? என்று சலித்துக் கொண்டாலும் புறங்கையால் அந்த எண்ணத்தைத் தள்ளிவிட்டு என் மனம் சொல்லிற்று அட வாழ்வதற்குத் தான் எவ்வளவோ இருக்கிறது.  எனவே எழுந்து இறைவன் அருளோடு பறக்கும் தட்டினில் விண்வெளியில் பறந்தேன். பல நாள் பயணத்திற்குப் பின் நம்பிக்கை என்ற கோலில் காலூன்றி வாழ்க்கை என்னும் படகை செலுத்தினேன்.

செப வாழ்வு


படைப்பு ஒவ்வொன்றும் அதனதன் நிலைக்கேற்ப வாழ்ந்து தம்மைப் படைத்தவரின் புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு படைப்பும் இறை பிரசன்னத்தின் வெளிப்பாடு. கடவுளின் சாயலாகவும் பாவனையாகவும் படைக்கப்பட்ட மனிதர்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதிலும் சிறப்பாக இறைவனுக்கு நண்பர்களாகவும், இறைமக்களுக்குப் பணியாளர்களாகவும் இருக்கும் துறவிகள், கிறிஸ்துவை முழுமையாகப் பின்பற்றி வாழ மனமுவந்து தம்மை அர்ப்பணித்தவர்கள். இந்த அர்ப்பண வாழ்வு ஆழம் காண செபம் அவர்களுக்கு இன்றியமையாததாய் இருக்கிறது. இயேசு இறைமகனென்று இருந்தாலும், தம் வாழ்வு முழுவதும் செப அனுபவத்தில் வாழ்ந்தார் என்பதை நற்செய்தியில் பல இடங்களில் நாம் காண்கிறோம்.

  • இயேசு விடியற்காலையில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் (மாற் 1:35).
  • ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டி வந்தார்        (லூக் 15:16).
  • அவர் அவர்களை விட்டு கல்லெறி தூரம் விலகிச் சென்று முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டினார் (லூக் 22:41).
  • இயேசுவும் திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது வானம் திறந்தது (லூக் 3:21).
  • இயேசு தனித்திருந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர் (லூக் 9:18).
  • யோவான் 17-ஆம் அதிகாரம் முழுவதுமே இயேசுவின் உருக்கமான செபமாக உள்ளது. 

இவ்வாறு ஒருசில இடங்களை நாம் கோடிட்டுக் காட்டினாலும் இயேசு தந்தையோடு கொண்டிருந்த அனுபவப் பகிர்வினை அவரின் வாழ்வு முழுவதும் இருப்பதைப் பார்க்கிறோம். இந்த அனுபவப் பகிர்வின் கனிகள்தான் அவரது பணியில் நிகழ்ந்த அற்புதங்களும் அருளடையாளங்களும். இவற்றின் மூலம் தந்தையை வெளிப்படுத்தி, மக்களை இறையாட்சிக்கு இட்டுச் செல்கிறார்.

இந்த இறையாட்சிப் பணியைத் தொடர இறைவனால் விரும்பி அழைக்கப்பட்டு, அனுப்பப்பட்டிருக்கும் துறவிகளின் நிலைப்பாட்டை, செப அனுபவப் பகிர்வினைப் புதுப்பிப்பது நன்மை தருவதாக அமையும். 

நற்செய்தி எடுத்துரைக்கும் முறையில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதே துறவற வாழ்வின் அடிப்படை அளவுகோல். நற்செய்தியை ஒவ்வொரு நாளும் வாசிப்பதும், தியானிப்பதும், அதை வாழ்வாக்குவதும்தான் துறவிகளின் மேலான செப அனுபவமாகும். இறைவனை மட்டுமே தேடுபவர்களாய், தம் மனத்தாலும் இதயத்தாலும் செபத்தின் மூலம் அவரோடு ஒன்றித்திருப்பவர்கள், நற்செய்தி அறிவுரைகளைக் கடைப் பிடிப்பவர்கள், அவற்றால் அன்பிற்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள். இவ்வறிவுரைகளை வெளிப்படையாக ஏற்பதால் அதன் வாழ்வோடும் புனிதத்தன்மையோடும் பிரிக்க முடியாத முறையில் கிறிஸ்துவோடு தொடர்பு கொள்பவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாய் இறைவனைத் தேடி அவருக்கு அன்பு செலுத்துபவர்கள் என்று துறவிகளின் மேன்மையையும், செப வாழ்வையும், பணிப்பகிர்வையும் பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கம் தெளிவாகக் கூறுகிறது.

அர்ப்பண வாழ்வை விரும்பி ஏற்றுக்கொண்ட துறவிகள் அனைத்து நிலைகளிலும் தம்மிலே புனிதத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இந்தப் புனிதம் அவர்களின் செப வாழ்வால் பாதுகாக்கப் படுகிறது. துறவிகளின் பணி நேரத்தைப் பகுத்துக் கூறலாம். ஆனால் அவர்களின் செப நேரம் இதுதான் என்று பிரித்துக் கூற இயலாது. தம்மோடு இருப்பதற்கும் நற்செய்தியைப் பறைசாற்றவும் (மாற் 3:14) இயேசு சீடர்களை அழைக்கிறார். அவரோடு இருப்பது என்பது வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவரது பிரசன்னத்தில் வாழ்வது. அவர்கள் எங்கிருந்தாலும், என்ன பணி செய்தாலும் அனைத்துமே செப அனுபவத்தின் வெளிப்பாடுகள். அவர்களின் வாழ்க்கை முறைகளும், வாழ்வும் செபமாக வெளிப்படுகின்றன

இன்று துறவிகளிடம் செபமும், செப அனுபவத்தின் பகிர்வும் குறைந்து வருகின்றன. உலகப் போக்கில் அதிக அளவில் ஈடுபாடு வளர்ந்துள்ளது. எனவே துறவிகளிடம் செபம் என்பதில் இறை மக்களுக்கு அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் நடை, உடை, பாவனைகளும், உறவு முறைகளும் அவர்களின் புனிதத்தைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன. “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” (மத் 5:16).

இறைமக்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் ஒளிச்சுடர்களாக இருக்க வேண்டியவர்கள் துறவிகள். அவர்களின் செப வாழ்வும் அணுகு முறையும் மக்களைச் செபிக்கத் தூண்ட வேண்டும். அவர்களின் சொல், செயல், கண்ணோட்டம், உறவு முறை, உழைப்பு, பங்கெடுப்பு, வளர்ச்சி, சோர்வு அனைத்துமே  செபத்தின் கனிகளாக மிளிர வேண்டும்.

இங்ஙனம் வாழும்போது அவர்களின் வாழ்வும் பணியும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மக்களிடம் இவர்கள் இறைபணியாளர்கள் என்ற மதிப்பு உண்டாகும். செபமும் வாழ்வும் இணைந்து செல்லும்போது அர்ப்பணம் உறுதிப்படுத்தப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் துறவிகள் அதிகமான அளவில் செபத்தில் ஈடுபாடு கொண்டு இறை மக்களை வழிநடத்த வேண்டும்; செபிக்கின்ற துறவிகளாக வாழ வேண்டும். 

சகோ. கிறிஸ்து ராணி FSJ,
சென்னை - 16

விசுவாச விதைகள்


பாவத்திற்கான காரணிகளாக உலகம், பசாசு, சரீரம் என்று நம் அடிப்படை மறைக்கல்வி போதிக்கிறது. இவை மூன்றில் ஏற்படும் பாவங்கள் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கின்றன;  பல சமயங்களில் முற்றிலுமாகப் பிரிக்கின்றன. உலகத்தின் மாயக் கவர்ச்சி பலரின் பாவ எண்ணங்களுக்கு வித்திடுகிறது. உள்ளிருந்தே கொல்லும் வியாதி போல் பசாசு நம்மை ஆண்டவரிடம் அண்டவிடாமல் தொடர் தாக்குதலை நடத்துகிறது. உடல் இச்சை நமது ஜென்ம பாவத்தின் தொடர்ச்சியாக நாளும் இம்சிப்பதை உணரலாம். இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர் புடையவையாதலால், கடைசி வரை பலரால் தம் தவறைத் திருத்திக் கொள்ள முடிவதில்லை. மீள மீளப் பாவச் சேற்றில் வீழ்ந்து ‘இதுதான் வாழ்க்கை’ என்றாக்கிக்கொள்கிறோம். தன்னை வென்றவனே உலகை வெல்கிறான்.

இன்று உலகம் பரந்து விரிந்து காணக்கிடக்கிறது; ஒரு கிராமமாய்ச் சுருங்கிவிட்டது. சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் அன்றாட வாழ்க்கையின் தேவையாகிவிட்டன. இந்த உலகம் பசாசின் கையில் உள்ளதால் அழிந்து போகும் மாயக் கவர்ச்சிகள் சரீரத்திற்கு விருந்தாக வைக்கப்படுகின்றன. உலகை நேசிப்பவன் உலகைச் சார்ந்தவன். கடவுளை நேசிப்பவன் கடவுளைச் சார்ந்தவன். இரண்டுக்கும் ஒருவர் ஊழியம் செய்வது சமரசத்தில் சன்மார்க்கம் தேடுவது ஆகும். மனசாட்சியற்ற மகிழ்ச்சி மருந்துக்கும் உதவாது. பசாசு ஒளியின் தூதனாய் நடிப்பது போல் நாமும் இருந்தால் ‘மீட்பு’ எட்டாக்கனியாகி விடும்.

உலகம், பசாசு, சரீரம் இவற்றால் உலகில் பரவி வரும் நோய்கள் எண்ணிலடங்கா. போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பாலியல் கலவையில் தன்னை இழத்தல், குறுகிய சார்பு எண்ணங்களால் அழுத்தம் பெற்று வெறுப்பு கசப்போடு பிறர் அன்புக்கு எதிராய் வாழ்தல் மன நிறைவான வாழ்வுக்கு வழியாகுமா? பொறாமை மிகக் கொண்டு அடுத்தவரை அழித்து வாழ நினைக்கிறோம். குடும்பத்தில் சமாதானம் இல்லை. குடும்பங்களுக்குள் ஒற்றுமை இல்லை. சுயநலம் பலரையும் ஆட்டிப் படைக்கிறது. அவரவர் தம் பலத்தை, சாதுர்யத்தை, சமத்தை வெளிக்காட்ட முனைகிறார்கள். இதனால் மனித உறவுகள் கொச்சைப்படுத்தப் படுகின்றன. உறவுகளின் விரிசலினால் மனிதநேயம் சிதைக்கப்படுகிறது. கடவுள் மறைந்து உலகம் முன்வைக்கப் படுகிறது.

உடல் சார்ந்த நோய்களைத் தவிர்த்து பல்வேறு சமூக நோய்களான பொறாமை, வெறுப்பு, கசப்பு, பகை, விரக்தி, ஏமாற்றம், போட்டி, கட்சி மனப்பான்மை போன்றவை மனிதனைக் கடவுளுக்கு எதிராகச் செயல்படவைக்கின்றன. உலகுக்கும் கடவுளுக்கும் ஊழியம் செய்வதாகச் சொல்லிக் குழப்பத்தில் இன்றைய மனிதன் வாழ்கிறான். இதன் விளைவாய் உண்மையான இறைப்பற்றுதல் இல்லை, ஜெபம் இல்லை, தபம் இல்லை. பணம் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்ற மிதப்பில் வாழ்கிறான். கூடி ஜெபிக்கும் குடும்பம் கோடி நன்மை பெறும் என்ற காலமெல்லாம் மலையேறி, அவசர கதியில் அல்லோலப்படுகின்றன குடும்பங்கள்.

பல மனிதரில் உலகை வெல்லும் வெறி இருக்கிறதே ஒழிய கடவுளைத் தேடும் ஆர்வம் இல்லை. பெற்றவர்களும் மற்றவர்களும் ‘ரோல் மாடல்களாக’ இல்லாததால் ஒரு வறட்சி, ஒரு தேக்கம் சமூகத்தில் காணப்படுகிறது. இதனால் தேவ அழைத்தல் குடும்பங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை. அப்படி ஒரு எண்ணம் எழுந்தால், ‘அழைப்பு பிழைப்பிற்கே’ என்ற நிலைதான் உள்ளது. இல்லறம் நல்லறமாக, ஒவ்வொரு குடும்பமும் குட்டித் திருச்சபையாக எழும்பி, ‘விசுவாச விதைகளை’ வேரூன்றச் செய்து களை விதைப்பவனை அப்புறப்படுத்த ஜெபத்தை ஆயுதமாக எடுத்தால், ‘விசுவாசம்’ தழைக்கும்; குடும்பங்களில் தேவ அழைத்தலுக்கான வாய்ப்புப் பெருகும். எச்சூழலிலும் இறை இயேசுவைப் பற்றி அன்னையின் துணையோடு வாழ முயற்சிப்போம். உண்மையான அறுவடை காண்போம். ‘இறைவார்த்தையை’ வெளிச்சமாகக்கொள்வோம். தேவ நற்கருணையில் ஆண்டவரைக் காண்போம்.