படைப்பு ஒவ்வொன்றும் அதனதன் நிலைக்கேற்ப வாழ்ந்து தம்மைப் படைத்தவரின் புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு படைப்பும் இறை பிரசன்னத்தின் வெளிப்பாடு. கடவுளின் சாயலாகவும் பாவனையாகவும் படைக்கப்பட்ட மனிதர்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதிலும் சிறப்பாக இறைவனுக்கு நண்பர்களாகவும், இறைமக்களுக்குப் பணியாளர்களாகவும் இருக்கும் துறவிகள், கிறிஸ்துவை முழுமையாகப் பின்பற்றி வாழ மனமுவந்து தம்மை அர்ப்பணித்தவர்கள். இந்த அர்ப்பண வாழ்வு ஆழம் காண செபம் அவர்களுக்கு இன்றியமையாததாய் இருக்கிறது. இயேசு இறைமகனென்று இருந்தாலும், தம் வாழ்வு முழுவதும் செப அனுபவத்தில் வாழ்ந்தார் என்பதை நற்செய்தியில் பல இடங்களில் நாம் காண்கிறோம்.
- இயேசு விடியற்காலையில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் (மாற் 1:35).
- ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டி வந்தார் (லூக் 15:16).
- அவர் அவர்களை விட்டு கல்லெறி தூரம் விலகிச் சென்று முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டினார் (லூக் 22:41).
- இயேசுவும் திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது வானம் திறந்தது (லூக் 3:21).
- இயேசு தனித்திருந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர் (லூக் 9:18).
- யோவான் 17-ஆம் அதிகாரம் முழுவதுமே இயேசுவின் உருக்கமான செபமாக உள்ளது.
இவ்வாறு ஒருசில இடங்களை நாம் கோடிட்டுக் காட்டினாலும் இயேசு தந்தையோடு கொண்டிருந்த அனுபவப் பகிர்வினை அவரின் வாழ்வு முழுவதும் இருப்பதைப் பார்க்கிறோம். இந்த அனுபவப் பகிர்வின் கனிகள்தான் அவரது பணியில் நிகழ்ந்த அற்புதங்களும் அருளடையாளங்களும். இவற்றின் மூலம் தந்தையை வெளிப்படுத்தி, மக்களை இறையாட்சிக்கு இட்டுச் செல்கிறார்.
இந்த இறையாட்சிப் பணியைத் தொடர இறைவனால் விரும்பி அழைக்கப்பட்டு, அனுப்பப்பட்டிருக்கும் துறவிகளின் நிலைப்பாட்டை, செப அனுபவப் பகிர்வினைப் புதுப்பிப்பது நன்மை தருவதாக அமையும்.
நற்செய்தி எடுத்துரைக்கும் முறையில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதே துறவற வாழ்வின் அடிப்படை அளவுகோல். நற்செய்தியை ஒவ்வொரு நாளும் வாசிப்பதும், தியானிப்பதும், அதை வாழ்வாக்குவதும்தான் துறவிகளின் மேலான செப அனுபவமாகும். இறைவனை மட்டுமே தேடுபவர்களாய், தம் மனத்தாலும் இதயத்தாலும் செபத்தின் மூலம் அவரோடு ஒன்றித்திருப்பவர்கள், நற்செய்தி அறிவுரைகளைக் கடைப் பிடிப்பவர்கள், அவற்றால் அன்பிற்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள். இவ்வறிவுரைகளை வெளிப்படையாக ஏற்பதால் அதன் வாழ்வோடும் புனிதத்தன்மையோடும் பிரிக்க முடியாத முறையில் கிறிஸ்துவோடு தொடர்பு கொள்பவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாய் இறைவனைத் தேடி அவருக்கு அன்பு செலுத்துபவர்கள் என்று துறவிகளின் மேன்மையையும், செப வாழ்வையும், பணிப்பகிர்வையும் பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கம் தெளிவாகக் கூறுகிறது.
அர்ப்பண வாழ்வை விரும்பி ஏற்றுக்கொண்ட துறவிகள் அனைத்து நிலைகளிலும் தம்மிலே புனிதத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இந்தப் புனிதம் அவர்களின் செப வாழ்வால் பாதுகாக்கப் படுகிறது. துறவிகளின் பணி நேரத்தைப் பகுத்துக் கூறலாம். ஆனால் அவர்களின் செப நேரம் இதுதான் என்று பிரித்துக் கூற இயலாது. தம்மோடு இருப்பதற்கும் நற்செய்தியைப் பறைசாற்றவும் (மாற் 3:14) இயேசு சீடர்களை அழைக்கிறார். அவரோடு இருப்பது என்பது வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவரது பிரசன்னத்தில் வாழ்வது. அவர்கள் எங்கிருந்தாலும், என்ன பணி செய்தாலும் அனைத்துமே செப அனுபவத்தின் வெளிப்பாடுகள். அவர்களின் வாழ்க்கை முறைகளும், வாழ்வும் செபமாக வெளிப்படுகின்றன
இன்று துறவிகளிடம் செபமும், செப அனுபவத்தின் பகிர்வும் குறைந்து வருகின்றன. உலகப் போக்கில் அதிக அளவில் ஈடுபாடு வளர்ந்துள்ளது. எனவே துறவிகளிடம் செபம் என்பதில் இறை மக்களுக்கு அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் நடை, உடை, பாவனைகளும், உறவு முறைகளும் அவர்களின் புனிதத்தைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன. “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” (மத் 5:16).
இறைமக்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் ஒளிச்சுடர்களாக இருக்க வேண்டியவர்கள் துறவிகள். அவர்களின் செப வாழ்வும் அணுகு முறையும் மக்களைச் செபிக்கத் தூண்ட வேண்டும். அவர்களின் சொல், செயல், கண்ணோட்டம், உறவு முறை, உழைப்பு, பங்கெடுப்பு, வளர்ச்சி, சோர்வு அனைத்துமே செபத்தின் கனிகளாக மிளிர வேண்டும்.
இங்ஙனம் வாழும்போது அவர்களின் வாழ்வும் பணியும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மக்களிடம் இவர்கள் இறைபணியாளர்கள் என்ற மதிப்பு உண்டாகும். செபமும் வாழ்வும் இணைந்து செல்லும்போது அர்ப்பணம் உறுதிப்படுத்தப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் துறவிகள் அதிகமான அளவில் செபத்தில் ஈடுபாடு கொண்டு இறை மக்களை வழிநடத்த வேண்டும்; செபிக்கின்ற துறவிகளாக வாழ வேண்டும்.
சகோ. கிறிஸ்து ராணி FSJ,
சென்னை - 16
0 comments:
Post a Comment