துவக்கக்கால திருச்சபையில் குருத்துவம்

குருத்துவப் பணிகளின் வளர்ச்சி நிலைகளைப் பல்வேறு கோணங்களில் விளக்கலாம்.  வரலாற்று நோக்கில் எவ்வாறெல்லாம் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்தப் பணிகள் செதுக்கப்பட்டன என்று காண்பவர்கள் உண்டு.  ஆன்மீக நோக்கில் எப்படியயல்லாம் இந்த வாழ்க்கை முறை வளர்ந்தது என்று நோக்கியவர்கள் உண்டு.  மானிடவியல் நோக்கில், இத்தகைய வாழ்க்கை முறை சமுதாய வளர்ச்சிக்குத் தேவைதானா?  என்று சிந்திப்பவர்கள் உண்டு.
‘இறையழைத்தல்’ என்ற நோக்கில் இந்தப் பணி எவ்வாறு ஆவியின் உந்துதலுக்கு ஏற்ப இறை வெளிச்சமாக இந்தச் சமுதாயத்தில் பட்டுச் சிதறிப் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்று நோக்க விரும்புகிறேன்.  இறையழைத்தல் குருத்துவத்திற்கு எப்படியயல்லாம் இளைஞர் களைத் தூண்டுகிறது என்பதைக் கால வளர்ச்சியில் கண்ணோக்கியது சுவையான சிந்தனை.
1. பங்குத் தந்தையர்கள் : திருச்சபை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் அரிய பாதிப்புக்களை ஏற்படுத்திய காலகட்டத்தில் அமைப்பு சார்ந்த குருத்துவம் தேவைப் பட்டது.  பங்கு என்ற அமைப்பின் கீழ் பல்வேறு வகைப்பட்ட மக்களை ஒன்றிணைக்கத் திறன் மிக்க  பணியாளர்களை இறைவன் அழைத்தார்.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி, மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டு, எல்லா நிகழ்வுகளிலும் உள்ள இறை வெளிப்பாட்டைச் சுட்டிக்காட்டும் அற்புதமான பணியிது.  இன்றும் இது எத்தனையோ இளநெஞ்சங்களை ஈர்த்து இழுக்கிறது.  வளர்ந்துவிட்ட நாடான அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெருமளவான இளைஞர்களின் கவனம் இந்தப் பணிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.  மறைமாவட்டக் குருக்களாகி, பங்குத் தளங்களில் மக்களோடு இணைந்து பணியாற்றவே இந்த இளைஞர்கள் விரும்புகின்றனர்.
மக்கள் இன்று விரும்புவது தங்களோடு உடன் இருந்து, தங்களின் இன்ப  துன்பங்களில் பங்கு கொண்டு தங்களை இறைவனோடு தொடர்பு படுத்தும் குருத்துவத்தை ஒரு காலத்தில் பங்குத் தந்தையர்களின் பணியை வெறும் சடங்குக் குருத்துவமாக, படிப்பறிவு இல்லாத பாமரக் குருத்துவமாகப் பார்த்த நிலை இருந்தது.  கட்டடங்கள் கட்டுவதும், ஆலயங்களை நிர்வாகம் செய்வதும் அவர்களின் சேவைகளாகவே கருதப் பட்டன.  இன்று அந்த நிலையே மாறி விட்டது.  பங்கு நிர்வாகத்தைப் பார்ப்ப தற்குப் பொதுநிலையினர் மிக ஆர்வமாக முன்வரத் துவங்கிவிட்டனர்.  அவர்களது பணிகளை ஒருங்கிணைத்துச் செல்ல இறையாற்றல் மிக்க நபர்களே இன்று தேவை.  இறைவன் பங்குப் பணியாளர்களைச் சிறப்பாக அழைப்பது இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் உணரப்படுகின்றது.  மக்களோடு மக்களுக்காக வாமும் குருக்கள் உள்ளார்ந்த திருப்தியும், உன்னதமான ஆன்மீகமும், உண்மையான மகிழ்ச்சியும் மிக்கவராக இருந்து வருகின்றனர்.
2.ஆன்மீக வழிகாட்டுதல்
குருக்களின் அழைப்பு பல்வேறு கால கட்டங்களில் ‘பங்குத் தந்தை’ பணியிலிருந்து வேறுபட்டும் இருந்திருக்கின்றது.   மக்களின் ஆன்மீக வாழ்க்கையில் பங்கேற்று சிறப்பாக வழிநடத்தும் அருட்பணியாளர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.  துறவற குருக்களுக்கு இந்த அழைப்பு மிகப் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.
மக்கள் ஆன்மீக வழிகாட்டுதல் தேடி மடாலயங்களுக்கும் சென்றிருக்கின்றனர்.  மக்களின் ஆன்மீக தேவைகளுக்காக அவர்களுக்கு அருளுரைகள் வழங்குவது,  தனியாகச் சந்தித்து வாழ்க்கைச் சிக்கல் களில் வழிகாட்டுவது, ஆற்றுப்படுத்துவது, அருளடையாளங்களை அவர்களின் வாழ்க்கைச் சூழலில் வழங்குவது போன்ற பணிகளைக் குருக்கள் செய்து கொண்டே வருகின்றனர்.
எத்தனையோ பேர் இந்தப் பணிகளைச் செய்தாலும், குருக்களில் இந்தப் பணிகள் தனிப்பெரும் வலிமை பெறுவதாக மக்கள் காலங்காலமாக உணர்ந்து வருகின்றனர்.
எத்தனையோ துறவற சபைக் குருக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இறையாவியின் உந்துதலின் அடிப்படையில் இந்தப் பணிகளைத் தொடர்கின்றனர்.  இயேசு சபையாரின் இஞ்ஞாசியார் ஆன்மீகம், பிரான் சிஸ்கன் ஆன்மீகம், பெனடிக்ட் வழி ஆன்மீகம், தோமினிக்கன் ஆன்மீகம், சலேசியன் ஆன்மீகம் என்று வழிமுறைகள் நீண்டுகொண்டே செல்கின்றன.  இவை குருக்களுக்கு என்ற தனிமுத்திரையைப் பதிக்கும் பணிகளாக இருந்துவருவது கண்கூடு.  
3. மேய்ப்புப் பணியாளர்கள்
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழிகாட்டுதலில் ‘மேய்ப்புப் பணி’ என்ற வார்த்தை தனித்துவம் பெற்றது.  இயேசு நல்லாயனாக இருந்து மக்களை வழி நடத்தியது போன்று மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களோடு சேர்ந்து வழிநடக்கும் அருட்பணி அழைப்பை இந்தக் காலகட்டத்தில் குருக்கள் மிக ஆழமாக உணர்ந்தனர்.
‘பங்குத் தந்தை’ என்ற அமைப்புப் பணிகள் மற்றொரு வளர்ச்சிப் பரிணாம மாக இந்தப் பணிகள் உணரப்பட்டன.  ‘மக்களைத் தேடிச் சென்று’ என்ற வார்த்தை இதன் பண்பை உணர்த்துகிறது.  மக்களுக்கு ‘ஆன்மீக வழிகாட்டுதல்’ என்ற நிலையிலிருந்து ஒரு படி மேலே சென்று மக்களின் வாழ்க்கையில் ‘உடன் செல்லுதல்’ என்பது இதன் தனித்தன்மை யாக உணரப்படுகின்றது.  இளைஞர்கள் குழுக்களில் தோன்றி அவர்களோடு பயணித்த தொன்போஸ்கோ போன்றவர்கள் இந்த அழைப்பின் முன்னோடிகளாக அமைகின்றனர்.  சிறைச் சாலையில் உள்ளவர்கள், மருத்துவமனை களில் உள்ளவர்கள், இராணுவத்தில் உள்ளவர்கள், தொழிலாளர் போன்ற பல்வேறு அமைப்பினரிடையே ஊடுருவி ஒளி காட்டும் இந்தப் பணி ‘குருக்களின் சிறப்பு அழைப்பாக’ இன்றும் உணரப்படுகிறது.
4. விடுதலைப் பணிகள்
மேய்ப்புப் பணியின் வளர்ச்சியாக விடுதலைப் பணியை நாம் இனம் காணவும் மக்களின் வாழ்க்கையில் ஈடுபட்டு உழைத்த குருக்கள், அநீதியான அமைப்பு முறைகளைச் சமுதாயத்தில் கண்டனர்.  சாதாரண மக்கள் பல்வேறு அமைப்புமுறை வன்முறைகளுக்கு உள்ளாவது அவர்களின் கவனத்தை ஈர்த்தது.  பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக சில நிலைப்பாடுகளை எடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.  ஒடுக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து அவர்களின் வாழ்வுக்காக அரசியல் ரீதியாகப் போராடுவது இறை அழைப்பாக அவர்களின் வாழ்க்கையில் தோன்றியது.  இயேசுவைப் புரட்சியாளராக, பாதிக்கப்பட்ட மக்களுக்காக உயிரைத் தந்த உன்னதராகக் கண்ட நேரத்தில் இவர்களின் விடுதலைத் தாகம் வீறு கொண்டு எழுந்தது.  தென் அமெரிக்க நாடுகளில் துவங்கிய இந்த விடுதலை வேள்வி உலகமெங்கும் பரவியது.
விடுதலைக்காக இன்னுயிரையும் இழக்கும் நபர் குருவாகத்தான் இருக்க முடியும் என்ற உறுதிப்பாடு அவர்களின் ஆன்மீகத்தில் வெளிப்பட்டது.  இன்றும் இந்தப் பணிகளுக்காக அழைக்கப்படும் குருக்களின் எண்ணிக்கை அதிகம்.  இவர்களைப் புரட்சியாளர்கள் என்று திருச்சபை முத்திரை குத்த நினைத்த நேரங்களில்கூட, இந்த அழைப்புக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் திருச்சபையில் நின்று நிலைத்தன.  சாதிய அமைப்புக்கள், பன்னாட்டு பொருளாதார அமைப்புக்கள், மேல்தட்டு அரசியல் அமைப்புக்கள் போன்று மேலாதிக்கம் செய்யும் பல்வேறு அமைப்புக்களுக்கு இறைவாக்கினர் பாணியில் சவாலாக இருக்கும் இத்தகைய குருக்கள் திருச்சபைக்குக் கிடைத்திருப்பது இறைவனின் அருங் கொடையே.
5. அனுபூதி அனுபவத்தினர்
விடுதலைப் பணியில் கண்ட அனுபவங்கள் குருத்துவத்தில் புதிய வடிவம் தந்தன.  போராட்ட உணர்வுகள் சில சமயங்களில் வெறுப்புக்கள், வேதனைகள், பிளவுகள் என்று உருமாறிவிடுகின்றன.  உண்மையான போராட்ட உணர்வு இயேசு காட்டிய சிலுவை வழியில் அமைய வேண்டும் என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொள்ளத் துவங்கியது குருத்துவம்.
தீமைகளை எதிர்க்கும் நேரத்தில் தீயவர்களை மன்னிக்கவும் கற்றுக் கொடுத்தது இயேசுவின் வாழ்வு.  பாதிக்கப் பட்டோரை ஒருங்கிணைக்கும் நேரத்தில் முழுமையான சமுதாய விடுதலையையும் முன்நிறுத்திக் கற்றுக் கொடுத்தது இயேசுவின் நம்பிக்கை.  விடுதலை என்பது தவமிருந்து பெற வேண்டிய ‘இறுதிக்கால நிலை’ என்பது கால வெள்ளத்தில் புரிந்தது.  புதிய வானம், புதிய பூமி நோக்கி கிறிஸ்தவ நம்பிக்கைகள் வழிநடத்திய நேரத்தில் உருவான புதிய நிலைதான் அனுபூதி அனுபவ நிலைகள்.  அக விடுதலையையும் புற விடுதலையையும் இணைக்கும் இந்தச் செயல்பாட்டு ஆன்மீகம் குருத்துவத்திற்குப் புதிய முத்திரை தருகின்றது.
வெறுப்புக்களைக் கடந்த, தீர்க் கமான எதிர்காலத்தை நோக்கிய ஆற்றல் மிக்க மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளை முன்நிறுத்தும் வாழ்க்கைமுறை குருத்துவத்தை புதிய ஆற்றலோடு செயல்பட வைக்கிறது.  மக்களை இறைவனோடு இணைத்து வைத்து உயிர்த்த இயேசுவைப் போன்று மறுமையை இம்மையில் படிப்படியாகக் கொணரும் பக்குவமிக்க பணிமுறையில் இறை குருக்கள் அடியயடுத்து வைக்கிறார்கள்.  இவை அழைத்தலின் புதிய பரிணாமம்.    (தொடரும்)
அருள்பணி. வலன்டின் 

தேவன் உயிர்த்தெழுந்தார்



சேசு  தேவன்  உயிர்த்தெழுந்தார் -  நாமும்
     சேசைப்  போல்   உயிர்த்தெழுவோம்
மாசு   இன்றி   உயிர்த்தார்  -  மகிமை
     பாபத்   தோடு   உயிர்பெற்றார்
நீசர்    வாழும்    உலகுதான்  -  இதனை
     எண்ணி    தூயர்   ஆகுவோம்
நாசர்   வாழும்   உலகிற்கு  -  செல்லாது
     நம்மை  நாமே   திருத்துவோம்!
சேசைப்   போன்று   வாழுவோம்  -  இந்த
     செகத்தை  வென்று  நற்கதியில்
ஆசை   யோடு   நுழைந்திடுவோம்  -  வாழும்
     ஆசில்லா   வாழ்விற்குப்    பரிசுதான்
நேசத்    தோடு   சேசுவை   -  பின்பற்றி
     நேர்த்தியாய்   என்றும்    வாழுவோம்
நீசத்   தனங்கள்   விட்டொழித்து  -  என்றும்
     நிறைந்த   புனிதர்   ஆகுவோம்
தூயத்   தோடு உயிர்த்தெழுந்தால் - நமக்கு
     உன்னத   மோட்சம்   கிடைத்துவிடும்
தீய   பாபத்துடன்   உயிர்த்தால்  -  என்றும்
     தீயில்   வெந்து   கருகனும்
மாய   மான  உலகினது  -  இன்பத்தில்
     வாழ்ந்து   மடிந்து   உயிர்பெற்றால்
ஞாய  மான  வழிதவறி  -  வாழின்
     நரகில்  தீயில்   வேகணும்!
பாப  வாழ்க்கை  ஒதுக்கணும்  -  என்றும்
     பரிசுத்த வாழ்வில்  வாழணும்
தீமை  களைந்து  புண்ணியம் - பெற்று
     திறம்பட  வாழ்ந்து  மோட்சத்தில்
சாபம்   நீங்கி   நுழைந்திடுவோம் - தூயர்
     அணியில் இடம்பிடித்து  மகிழ்வோம்
தீபச் சுடராய் ஒளிவிடுவோம்  -  என்றும்
     நிரந்தர  இடத்தைப்  பெற்றிடுவோம்! 
கவிஞர் பெஸ்கிதாசன்

உயிர்ப்பு

கருமையான மை இருட்டு.  இரவில் அந்தக் கல்லறையை அவன் காவல் காத்துக் கொண்டிருக்கிறான்.  அவனோடு காவலுக்கு இருந்த இரண்டு காவலர் களும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நன்றாக வயிறு முட்ட குடித்துவிட்டு அரைத் தூக்கத்தில் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கின்றனர்.  அவர்களில் ஒருவனுக்கு அன்று கல்லறையில் புதைக்கப்பட்ட மனிதனின் உடை யாருக்கு என்று சீட்டுப் போட்டுக் குலுக்கியதில் அவனுக்கு விழவில்லையாம்.  தன் வருத்தத்தை மற்றவனிடம் சொல்லி பெரியதாக குறைபட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் இவர்களோடு காவலுக்கு இருந்த அந்தக் காவலனுக்கு ஏனோ பசியும், தாகமும் கொஞ்சம்கூட எடுக்க ல்லை, சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் அநியாயமாக சிலுவையில் இறந்த அந்த மனிதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.  பாவம் இந்த மனிதன் எல்லா மக்களுக்கும் நல்லதையே செய்தவர்.  குருடர்களுக்குப் பார்வையைத் தந்தவர், வாய் பேச முடியாத ஊனமகளை பேசவைத்தார்.  நோயாளிகளை குணமாக்கினார்.  விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கல்லால் அடிக்கவிருந்தவர்களிடமிருந்து காப்பாற்றி அவளை மனம் மாறச்செய்தார்.
இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, கடுமையான காய்ச்சலில் சாகக்கிடந்த தன் ஒரே மகனை ஒரே வார்த்தையால் குணமாக்கிய குணவானாயிற்றே . . .  இவரைப் போய் சிலுவையில் அறைந்து கொன்று விட்டனரே . . .  அன்று இவரைப் பிடித்துக் கொண்டு போகும்போதுகூட இந்த மனிதன் எவ்வித மறுப்பும் காட்டாமல் உடன் சென்றாரே . . .  இவர் நினைத்திருந் தால் அவர்கள் பிடியில் இருந்து தப்பித்துச் சென்றிருக்க முடியும்.  ஆனால் இவர் நல்ல மனிதராக இருந்ததால்தான் ஒரு கொலை யாளியாக பலியாகப் போகும் செம்மறி ஆடாக அவர்களின் பின்னால் சென்றார்.
பிலாத்து இவரை வேண்டி வேண்டி கேட்கும்போதுகூட வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூட பேசவில்லையே . . .  இந்த மனிதன், இவர் பேசிய ஒரு சில வார்த்தை கள் கூட யாருக்கும் புரியாமல்தானே இருந்தன.  என்ன சொன்னார் நீ யூதர்களின் அரசனா?  என்று கேட்டதற்கு, நீர்தான் அதைச் சொல்கின்றீர் . . . என்றார்.  நீர் எந்த நாட்டின் அரசன் எனக் கேட்டதற்கு என் அரசு இவ்வுலகைச் சார்ந்தது அன்று என்றாரே ... அப்படியானால் வேறு எந்த உலகத்திற்கு இவர் அரசன் . . . ?
இந்த மனிதனைக் கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முடியவில்லையே!  புரியாத புதிராக அல்லவா இருக்கிறார் . . . ! கடவுளாக இவர் இருந்திருந்தால் உரோமை வீரர் களிடம் மாட்டிக்கொள்ளாமல் வானதூதராய் வானில் பறந்து போய் இருக்கலாமே!  அப்படி செய்யாமல் எத்தனை சாட்டை அடிகள் அவர் உடம்பைப் பதம் பார்த்தன.  எப்படிப்பட்ட அவமான வார்த்தைகள் அவர் மீது அம்புகளாய் வந்து பாய்ந்தன!  சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடந்தாரே, அந்தச் சிலுவையின் கனம் தான் என்ன ... ?  எல்லா வேதனை களையும், அவமானங்களையும் காரித் துப்பிய எச்சிலையும் உடம்பில் தாங்கிக் கொண்டு திட மனதுடன், ஒரு இலட்சிய வீரனாய், கருணையான பார்வையோடு, கரடு முரடான கல்வாரிப் பாதையில் கடமையே கண்ணாக நடந்து வந்தாரே . . . என்ன ஒரு மனத் தெளிவு, என்ன ஒரு திட நம்பிக்கை, எடுத்த காரியத்தை முடிக்கத் துடிக்கும் கடமை உணர்வு . . . என்று திகைத்த அவன் . . .
இத்தகைய இலட்சிய வீரனைப் போய் சிலுவையில் அறைந்தனரே, அய்யகோ, சிலுவையை சுமக்க முடியாமல் தடுமாறி விழுந்த அவரைக் காலால் எட்டி உதைத்து சாட்டையால் அடித்து எழுந்து நடக்கச் சொல்லி மிரட்டி மிருகமாய் நடந்து கொண்டேனே . . . ஆனால் அந்த நல்ல மனிதன் கோபப்படாமல் என்னை ஒரு பார்வை பார்த்தாரே . . . என்ன ஒரு தீர்க்கமான பார்வை . . .  அப்பப்பா . . . அந்தப் பார்வையின் பொருள் இன்றுவரை எனக்கு விளங்கவே இல்லையே.  
கொடுமையிலும் கொடுமையான செயல் ஒன்றை அந்த நல்ல மனிதருக்குச் செய்தேனே . . .  ச்சீ . . . என்ன ஒரு ஈனச் செயல், அந்த மனிதனைச் சிலுவையில் மரமோடு மரமாக கிடத்தி உள்ளங்கையில் ஆணியை அடித்த கொலைகாரன் அல்லவா நான் . . . என்று அந்த கல்வாரித் தோட்டத்தில் காவலுக்கு இருந்த அவன் கைகளைத் தரையின் மீது ஓங்கி ஓங்கி அடித்துக் கொள்கிறான்.
அந்த முகத்தை நினைக்கும்போது, அவன் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவதைப் போல் அவன் உணர்கிறான்.  நல்லதையே நினைத்து நன்மைகளையே செய்த நல்லவனை தன் ஒரே மகனை சாவின் பிடியில் இருந்து காத்த தியாக சீலனை நானும் கூட இருந்து கொன்று விட்டேனே என்று அவன் மனம் கல்லும் உருகும் வண்ணம் கல்லறையில் இருக்கும் இயேசுவிற்காய்க் கழிவிரக்கப் பட்டது.  கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது.
பைத்தியக்காரனைப்போல் அவன் இங்கும் அங்கும் ஓடி அந்தக் கல்லறைத் தோட்டத்தில் மன நிம்மதி இன்றித் தவிக்கின்றான்.  ஒரே ஒரு முறை அந்த உத்தமனின் முகத்தைப் பார்க்க இவன் மனம் ஏங்கியது.  அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தவித்தது.  அவரைப் பார்த்து விட்டால் போதும், இந்த உலகத்தையே கொடுத்தாலும் தூசு என தூக்கி எறிந்து விடலாம்.  ஆனால் கொடுமையிலும் கொடுமையாய் கொலை செய்யப்பட்டு கல்லறையில் புதைக்கப்பட்ட அவரைப் பார்க்க முடியாதே . . . என்று அவன் மனம் ஆற்றா மையால் அழுதுகொண்டிருக்கும் போது
அவனுக்குள்ளே ஒளிக்கீற்றாய் ஒரு நம்பிக்கை மின்னல் தோன்றி மறைகிறது.  இன்று இரவுதானே அந்த இயேசு உயிருடன் கல்லறையைவிட்டு வருவார் என்று சொன்னார்கள்.  அதை நம்பாத உரோமை அதிகாரிகள் அவரைச் சேர்ந்த வர்கள் அவரைத் தூக்கிச் சென்றுவிடு வார்கள் என்பதற்காகத்தானே நம்மைக் காவலுக்கு அனுப்பினார்கள், அப்படி யானால் நிச்சயமாக அந்த இயேசு இன்று இரவு உயிருடன் எழுந்து வருவார் . . .  அப்படி வரும்போது அவர் முகத்தைக் கண்குளிர பார்த்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.
இரவு நீண்டுகொண்டே போனது, விழிப்புடனே அவன் அந்தக் கல்லறையைப் பார்த்துக் கொண்டி ருக்கிறான்.  மயான அமைதியோடு இறுக்கமாக இருந்த அந்த இடத்தில் சில்லென்று குளிர்காற்று வீசுகிறது.  வாசமிக்க நறுமணம் அந்த இடத்தில் பரவுகிறது.  இதை உணர்வதற்குள் திடீரென்று ஒரு மின்னல் பளிச்சென அடித்து அந்த இடமே இரண்டாக பிளந்ததைப் போல் பயங்கர வெடிச் சத்தத்துடன் நிலம் நடுக்கமடைகிறது, அப்போது . . .
மூடிய கல்லறையின் பெரிய பாராங்கல் தானாகத் திறந்து சிதறி ஓடுகிறது.  அந்தக் கல்லறையில் இருந்து இயேசு சூரிய ஒளி பிரகாசமாய் ஆயிர வெண்ணிலவு அழகுப் பொலிவுடன், சாந்தமான பார்வையோடு போர் களத்தில் வெற்றிபெற்ற வீரனாய், வானோர்கள் எக்காளம் முழங்கி, சிலுவையை வெற்றிச் சின்னமாகக் கையில் ஏந்தி வெளியே வருகிறார்.  அங்கு பிரமிப்போடு தன்னையே இமைக்காமல் பக்தியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த காவலனுக்கு அருளாசீர் வழங்கி, கொல்கொத்தா மலையின் கொலை களத்தில் பார்த்த அதே பார்வையைப் பார்த்து புன்னகையுடன் சாவுக்குச் சாவுள மணியடித்து சாவை வென்ற சீலனாய் வெளியே வருகிறார்.  அவனுக்கு மன்னிப்பு வழங்குகிறார், மன்னிக்கும் அந்தப் பார்வையின் பொருளை அவன் அன்றுதான் உணர்கிறான்.
நடந்தவைகளைப் பயத்துடன் பார்த்த இரு காவலர்களும் மிரண்டு பயத்தால் வெடவெடத்து மயங்கி விழுகின்றனர்.  திறந்த மனதுடன் இயேசுவின் திருமுகத்தைப் பார்க்கத் துடித்து, பின்னர் மன்னிப்புப் பெற்று பேருவகைக் கொண்ட அந்தக் காவலன் அன்றலர்ந்த மலராகப் புது மனிதனாய் புனிதன் காட்டிய பாதையில் வாழ அந்தக் கல்லறைத் தோட்டத்திற்கு மனதால் நன்றி சொல்லி வெளியேறு கிறான்.  ஆம் மரணமும் மரணத்தோடு இணைந்த கல்லறையும் வாழும் மனிதருக்குப் புது வழிகாட்டும் புதிய பாதைகள், அதுதான் சுயநலத்தையும், பேராசைகளையும் குழிதோண்டிப் புதைத்து மன்னிப்பு என்ற மாபெரும் மருந்தை வழங்கி மனித நேயத்தை வளரச் செய்யும் புனிதன் காட்டிய புரட்சிப் பாதை!
தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி

இறைப்பணி ஓர் அழியா காவியம்

வேதாகமத்தில் “நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையிலுள்ளன.  வேதனை எதுவும் அவர்களைத் தீண்டாது.  கடவுளின் வருகை காலத்தில் அவர்கள் சுடரொளி வீசுவார்கள்.  நாணற் காட்டில் தீப்பொறிகள் எரிவதுபோல் ஒளிர்வார்கள்” (சாஞா 3:1-7) என நாம் வாசிக்கிறோம்.
குருக்கள் ஆண்டாகிய இந்த ஆண்டில் மதுரை உயர் மறைமாவட்ட குருவனவர்கள் அனைவரும் 31.01.2010 முதல் 06.02.2010 வரை கோவா திருப் பயணம் சென்று புனித சவேரியாரின் திருவுடல் வைக்கப்பட்டிருக்கும் புனித இடத்தில் திருப்பலி நிறைவேற்றி ஜெபித்தோம்.
 என் இதயத்தில் எத்துனை சிந்தனைகள் புனிதரின் திருவுடல் இடத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது எழுந்தன.  புனித சவேரியார் (1506 ‡ 1552) இவ்வுலகில் 46 ஆண்டுகள்தான் வாழ்ந்திருக்கிறார்.  1537ல் குருப்பட்டம் பெற்று 1542 முதல் இந்தியாவிலிருந்து தன் தீவிர இறைப் பணியைத் தொடங்கி இருக்கிறார்.
சரியாக 10 ஆண்டுகளே இயேசுவின் மறைப்பணியைச் செய்திருக்கிறார்.  இக்குறுகிய ஆண்டுகளுக்குள் இந்தியா, மலாக்கா, அம்பாய்னாத்தீவு, டொனேத், மோரே தீவுகளிலும், இலங்கையிலும், ஜப்பானின் தென் பகுதியிலும் இறைத் தூதுப்பணி செய்தார்.  1552ல் சீன நாட்டிற்கு இறைப்பணி செய்ய திட்டமிட்டபொழுதுதான் மிகுந்த நோய்வாய்ப்பட்டு கான்சியன் தீவில் மரணமடைந்தார்.  ஏறக்குறைய 50 நாடுகளில் அவர் திருப்பணி செய்திருப்ப தாகக் கருதப்படுகிறது.
“உலகின் எந்த மூலையிலெல்லாம் இயேசு கிறிஸ்து அறிவிக்கப் படவில்லையோ அங்கெல்லாம் நான் செல்வதற்குத் தயாராய் இருக்கிறேன்” எனக் கூறி தீவிர மறைப்பணி செய்தார்.  1552 டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை மரித்தார்.  சீன முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார்.  மூன்று மாதங்களுக்குப்பின் அவரின் எலும்புகளையாவது எடுத்து கோவா விற்குக் கொண்டு செல்ல கல்லறையைத் தோண்டியபோது அவரின் சரீரம் அழியாமல் இருப்பது கண்டு வியப்படைந்தனர்.  450 ஆண்டுகளாய் அச்சரீரம் இன்றும் மக்களின் வணக்கத்திற்கு வைக்கப் பட்டிருக்கிறது எத்துணை அதிசயம்!
தன் வாழ்வில் உத்தமமாய் பணி செய்த இறை ஊழியருக்கு ஆண்டவர் இயேசு கொடுக்கும் மிகப் பெரிய பரிசு அவர்களின் உடல் அழியாமல் காப்பதே.
நான்கு நற்செய்தியாளர்கள் மத்தேயு, மாற்கு, லூக்காஸ், யோவான் ஆகியவர் களில் புனித யோவானுக்குத்தான் “கழுகு”  ஓர் அடையாளச் சின்னமாய் தரப் பட்டிருக்கிறது.
கழுகைப்போல் அவரின் இறையியல் உயர்ந்து காணப்படுகிறது.  அன்பின் வெளிப்பாடுகளும், உயரிய இறை அறிவுச் சிந்தனையும் நம்மை வியக்க வைக்கின்றன.  இதற்குக் காரணமே புனித யோவான் இறுதி இராவுணவின் போது மட்டும் இயேசுவின் நெஞ்சில் சாய்ந்திருக்க வில்லை.  மாறாக வாழ்வு முழுவதிலுமே இயேசுவின் இதயத்துடன் தலைசாய்ந்து இருந்ததால் இதயத்தின் இரகசியங்கள் அவருக்கு மட்டும் அதிகமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
தன் நற்செய்திப் பணியை நிறை வேற்றிய குறுகிய காலத்திலேயே பத்மோஸ் தீவுக்கு “தொமிசியன்” என்ற மன்னனால் நாடு கடத்தப்பட்டார்.  பத்மோஸ் தீவில் இறைபணியாற்ற மக்கள் இல்லையே என வருந்தியபோது ஆண்டவர் இயேசுவின் தரிசனம் அவருக்கு அதிகமாய்த் தோன்றி திடப்படுத்தியது.
(பரம தந்தை அவரை வெளிப்பாடு களால் நிரப்ப ஆரம்பித்தார்.  “இந்நாள்வரை உலகம் கண்டிராத காட்சிகளையும் மோட்சத்தின் மகிமைப் பிரகாசத்தையும் உனக்குக் காண்பிப்போம்.  நீ அவைகளை ஒன்றும் விடாமல் எழுதுவாய்.)  அதற்காகவே பத்மோஸ் தீவிற்கு உன்னை அழைத்து வந்தோம்” என்றார்.
புனித யோவான் இயல்பிலேயே மிகவும் பரிசுத்தமானவர்.  இறை அன்பு நிறைந்தவர்.  தாழ்ச்சியான உள்ளம் நிறைந்தவர்.  இயேசுவின் சிலுவையடி யிலும் நின்று தம் இறையன்பை நிரூபித்தார்.  எனவேதான் நற்செய்தியாளர் நால்வரில் புனித யோவான் நற்செய்தியில் மட்டும் இறையியல் நிறைவாய்க் காணப்படுகிறது.  அவரின் நற்செய்தி நம்மை விண்ணகத்திற்கு இட்டுச் செல்கிறது என்பது வெளிப்படை.
புனித சவேரியார் “புனிதமும் இறையன்பும் தீவிர வேட்கையும் உடைய இறைப்பணியாளர்கள் மட்டும் இருந்து விட்டால் உலகம் முழுவதிலுமே இயேசுவின் அன்பைக் கொண்டு செல்வது மிக எளிது” என்கிறார்.
இன்று இறைப்பணியாளர்களிடம் இவர்களின் அர்ப்பண உணர்வும், இறை மகிமை தாகமும், விண்ணக வாழ்வின் பேரின்ப உணர்வும் இருந்துவிட்டால் நம் இறைப்பணிக்கும் இறைவன் இயேசு அழியாத முத்திரையைப் பதிப்பார் என்பது உண்மை.   சிந்திப்போமா!         (மலரும்)
Fr. ச. ஜெகநாதன், அருப்புக்கோட்டை