உயிர்ப்பு அது இரண்டு வகைப்படும்

இம்மாதத்தில் ‘உயிர்ப்பு' என்கிற தலைப்பில் கட்டுரை வரையப் பணிக்கப் பட்டிருந்தேன். அதையயாட்டி சிந்தித்தேன்.

உயிர்ப்பு அது இரண்டு வகைப்படும் எனப் பளிச்சென எனக்குள் தோன்றியது.

ஒருவர் இறந்த பின்பு மீண்டும் உயிர் பெறுவது முதல் வகை.

வழக்கமாக உயிர்ப்பு விழா என்றதும், இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்தார் - என்கிற இந்த முதல் வகை உயிர்ப்பையே நாம் நினைவு கொள்கிறோம்.

இறந்த பின் உயிர் பெறுவது என்பது மனித சக்தியால் இயலாதது. இயற்கைக்குப் புறம்பானது. எனவே அது அதிசயமானதாக, அற்புதமானதாகப் பார்க்கப்படுகிறது. இறைவனால் அல்லது இறைசக்தி யால் மட்டுமே இயலக் கூடியது.

எனவேதான் அது இயேசுவின் வாழ்க்கையில் மட்டும் நடந்தேறியது.

இறந்த லாசர் உயிர் பெற்றதும், 12 வயது சிறுமி மீண்டும் உயிர் பெற்றதும் இறைமகன் இயேசுவின் இறை ஆற்றலால் மட்டுமே நடந்தேறியது.

இந்த இறை சக்தியே இயேசுவை இறைமகனாக அடையாளப்படுத்தியது. உயிர்த்த இயேசுவின் இறைசக்தியைத் தன் வாழ்க்கையில் அனுபவமாகப் பெற்ற புனித பவுல், இறந்த இயேசு உயிர்த்து எழவில்லை என்றால் நமது விசுவாசம் வீண் என்று தெளிவுபடுத்துகின்றார்.

ஆனால் நமது இறைமகன் இயேசு இறை சக்தியால் அற்புதங்கள் மட்டும் நிகழ்த்திட்ட ஆண்டவர் அல்லர்.
           
மாறாக, மனித அவதாரம் எடுத்து மனிதருக்குள்ளும் மாணிக்கமாய் வாழ்ந்து காண்பித்த ‘மாதிரி மனிதன்'. அவருடைய அந்த மனித வாழ்க்கையிலும் அவர் உயிர்ப்புடன் இருந்தார். மூச்சு நின்று விடுவதால் மட்டுமே ஒருவருக்கு மரணம் ஏற்படுவதில்லை. மாறாக முயற்சிகளை நிறுத்திவிடுவதும் மரணத்திற்குரியதே என்பதை உணர்ந்து உலகிற்கு உணர்த்தி தாம் உயிருடன் வாழும்போதே உயிர்ப்புடன் வாழ்ந்து காண்பித்தவர் அவர்.

அதுவே நாம் சுட்டும் இரண்டாம் வகை உயிர்ப்பு. நமக்குத் தெரிந்த இயேசுவின் மூன்றாண்டு கால பொது வாழ்க்கையைச் சற்று கூர்ந்து கவனித்தால் அவர் வெறுமனே உயிருடன் வாழவில்லை. மாறாக ஒவ்வொரு வினாடியும் உயிர்ப்புடன் வாழ்ந்தார் என்பதை உணரலாம். சமூகம் வகுத்த எந்தக் கட்டுக்குள்ளும், வரையறைக்குள்ளும் கண்மூடித் தனமாய்ச் சிக்குண்டு வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் செக்கு மாட்டு வாழ்க்கையில் சிக்கிட வில்லை அவர்.

மாறாக தான் வாழ்ந்த சமூகத்தை, அது விதித்த விழுமியங்களை, விதிகளைக் கேள்விக்குட்படுத்தி விமர்சனப்பூர்வமாய்ப் பார்த்தார். அந்த விமர்சனப் பார்வையிலும்கூட தன்னுடைய விருப்பு, வெறுப்புகள் கலந்து நிற்கக் கூடாது என்று தன்னையும் சுய விமர்சனத்திற் குட்படுத்தினார்.

தனிமையில் சென்று தனது அன்றாட பணியைத் தன்னளவில் சீர்தூக்கிப் பார்த்து சுய விமர்சனத்திற்குட்படுத்தியும், மக்கள் என்னை யாரெனக் கருதுகிறார்கள்? நீங்கள் என்னைக் குறித்து என்ன எண்ணுகிறீர்கள்? எனத் தம்மோடு இருந்தவர்களிடம் வினா எழுப்பி விடை தேடியும் பிறர் விமர்சனத்திற்கும் தன்னை உட்படுத்தினார்.

இப்படியாக எந்தவொரு க(வ)ட்டத்திலும் முடங்கிவிடாது உயிர்ப்புடன், துடிப்புடன் அவரின் வாழ்க்கைப் பயணம் நகர்ந்தது.

இந்த உயிர்த்துடிப்புடன் கூடிய வாழ்க்கை முறையே அவரது வாழ்க்கைக்கு ஒரு பரிணாம வளர்ச்சியை - பக்குவத்தைக் கொடுத்தது.

"என் தந்தையின் இல்லத்தைக் (ஜெருசலேம் தேவாலயத்தை) கள்வர் குகையாக்காதீர்கள்" எனச் சாட்டை எடுத்தவர் பின்பு அதே கள்வர்கள் கையில் தன்னையே (தன் உடலாகிய ஆலயத்தை) கையளித்தார்.

கோபத்தால் அல்ல குணத்தால், வன்முறையால் அல்ல அகிம்சையால் அந்தக் கள்வர்களை வென்றெடுக்கும் வழி முறையை அவர் தெரிந்தெடுக்கிறார் இப்படியாக அவர் உயிருடன் வாழும் போதே ஒவ்வொரு நொடியும் உயிர்ப்புடன் வாழ்ந்ததால்தான் இறந்த பின்பும் உயிர்த்து எழுந்து இன்றளவும் இவ்வுலகோர் மனங்களில் இறைவனாய் இருக்கின்றார்.

ஆக இயேசு காட்டிய உயிருடன் வாழும்போதே உயிர்ப்புடன் வாழ்வது என்கிற இரண்டாம் வகை உயிர்ப்பு வாழ்வில் மனிதர்கள் எல்லோரும் வாழ வேண்டும் என அவர் விரும்புகின்றார். இதற்கு இறைத்துணை தேவைப்படலாம்.

ஆனால் அற்புதங்கள்,ஆச்சரியங்கள் வேண்டியதில்லை. நாம் வாழும் சூழலில் நாமாகவே சில வட்டங்களுக்குள், சடங்குகளுக்குள், சம்பிரதாயங்களுக்குள் மாட்டிக் கொண்டு செத்த மனிதர்கள் போல் "தேமே"ன்னு வாழாமல் ஒவ்வொன்றையும் உற்று நோக்கி உரசிப் பார்த்து, உய்த்துணர்ந்து உயிரோட்டத் துடன் வாழ்ந்தால்,

அந்த உற்றுப் பார்ப்பதும் உரசிப் பார்ப்பதும் நமது சுயநல நோக்கில் இல்லாமல் பிறர் நல நோக்கில் குறிப்பாக ஏழைகள் நோக்கில் இருந்தால்

அதற்காகவே நமது வாழ்க்கை உயிர்ப்புடன் துடித்தால்,

நாமும் இறந்த பின்பும் வாழ்வோம். உயிர்த்து எழுவோம்.

எனவே இறந்த பின்பு உயிர்க்க விரும்பும் ஒவ்வொருவரும் உயிரோடு வாழ்வதல்ல வாழ்க்கை. மாறாக உயிர்ப்போடு வாழ்வதே வாழ்க்கை என வாழும் போதே உயிர்ப்போடு வாழ்வோம். அதன் மூலம் நாம் இறந்த பின்பும் நமது வாழ்க்கைப் பதிவுகளால் பிறர் மனங்களில் தொடர்ந்து உயிர்த்தெழுந்து வீற்றிருப்போம். அதுவே இயேசுவின் உயிர்ப்பு விழா நமக்கு கொடுக்கும் அழைப்பு . . .

எஸ். எரோணிமுஸ்,
"ஊற்றுக்கண் " ஆசிரியர், திருச்சி

0 comments:

Post a Comment