நாம் அழைக்கப்பட்டதால் பேறுபெற்ற மக்களாய் இருக்கிறோம் (கிறிஸ்தவர்கள் ஆனதால்). கோழைகளாய் இருந்து இறை மதிப்பீடுகளை மறந்து, நீதியை நிர்வாணமாக்கி, நேர்மையை நிர்மூலமாக்கி, மனிதத்தை மண்ணில் புதைத்து கோடி முறை சாவதைவிட, அன்பு வாசலை அகலத் திறந்து, மன்னிப்பு என்னும் மாளிகைக்குள், மனிதத்துக்கு வாழ்வளித்து ஒரே ஒரு முறை வீர மரணம் அடைய இக்காலம் நமக்குக் கற்றுத் தருவதாய் இருந்தால் நாம் பெற்றுள்ள கிறிஸ்தவப் பேற்றினைப் பெரும் மகிழ்வோடு வாழ்பவராவோம்.
இந்த உலகக் கடலில் வாழ்க்கைக் கப்பலில் பயணம் செய்யும் நாம் சுனாமி போல் எழுந்து நிற்கும் சோதனைப் பேரலைகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் அழிந்து போகாமல் இருக்க இயேசு என்னும் நங்கூரச் சொந்தம் நமக்குத் தேவை என்பதை உணர்வோம். சமூகச் சீரழிவுச் சீற்றங்களால் சீர்குலையாமல் இருக்க இயேசு என்னும் வசந்தத்தை வாழ்வாக்குவோம். ஒலித்துக் கொண்டிருக்கும் இறை குரலை இயற்கையிலிருந்து இனம் பிரித்துப் பார்த்து இதயம் நிறைந்த நன்றியை நம் வார்த்தையாலும் வாழ்க்கையாலும் அள்ளிக் கொடுப்போம். நமது ஒவ்வொரு வார்த்தையையும் பிறரின் நல்வாழ்வுக்கு உரமாக்கும் வரம் பெறுவோம். அப்போது எல்லாக் காலமும் இறையருளின் காலமாகும்; எல்லார் முகமும் இறையவனின் சாயலாகும்; எல்லா இடமும் இறையரசின் சாட்சியாகும்; எல்லா வேளையும் நாம் உடலோடு உயிர்ப்பவராவோம்.
0 comments:
Post a Comment