முன்னுரை
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்றார் திருநாவுக்கரசர். ஒவ்வொரு வருக்கும் உரிய கடமைகள் உள்ளன. நமது சமுதாயத்திற்காக இளைஞர் ஆற்ற வேண்டிய கடமைகளும் உள்ளன. இன்றைய இளைஞர் நாளைய தலைவர் என்பதற்கேற்ப ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதியார். எனவே ஒவ்வோர் இளைஞனும் விழித்து ஒளி வீச வேண்டும்.

சமூகத் தொண்டு
ஓர் உயிர் படும் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தி அதனைத் தாங்க முடியாமல் உதவுதலே தொண்டு. அவ்வாறு நம் நாட்டு மக்களுக்கு இளைஞர் ஆற்ற வேண்டிய தொண்டு பலவாகும். தீண்டாமை, அறியாமை, சாதி மத வேறுபாடுகள், மணக் கொடை, மூடப் பழக்கம் போன்றவற்றில் சிக்குண்டு பலர் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கிராமப்புற மக்களில் பெரும்பாலானோர் இன்னலுற்று வருகின்றனர். அவர்களைக் காப்பதே இளைஞர்களின் கடமையாகும்.
சாரணர் இயக்கம்
சாரணர் என்ற சொல்லுக்குத் ‘தயாராக இரு’ என்பது பொருள். எப்போதும் தம் மனத்தாலும் உள்ளத்தாலும் செய்கையாலும் தயாராக இருத்தலே சாரணரின் குறிக்கோளாகும்.
சாரணர் இயக்கத்தின் உறுதிமொழி
  1. நான் எப்பொழுதும் கடவுளுக்கும், என் நாட்டிற்கும் தொண்டு செய்வேன்.
  2. பிறருக்காக உதவி செய்வேன்
  3. சாரணர் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பேன்.
என்பது சாரணரின் உறுதிமொழியாகும்.
நாட்டு நலப்பணி இயக்கம்
கல்லூரி மாணவர்கள் ஓய்வு நேரங்களில் நாட்டு நலப் பணிகளில் ஈடுபட இவ்வியக்கம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தற்போது இவ்வியக்கம்  வளர்ச்சி அடைந்து மேனிலைப் பள்ளிகளுக்கும் பரவியுள்ளது. இதன் மூலம் சில தொண்டுகளான சுகாதாரத்தை ஏற்படுத்துதல், சாலைகள் அமைத்தல், தெருக்களைத் தூய்மை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செஞ்சிலுவைச் சங்கம்
1920-ஆம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்கம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த ஹன்றி டியூனாண்டு என்பவரால் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் முதலுதவி அளித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பயிற்சிகள் இளைஞர்களுக்காக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இளைஞர்கள் சேரி மற்றும் நகர்ப்புற மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இளைஞரும் அரசியலும்
இளைஞர் வரலாறுகளையும், அறிவியல், கணிதம் போன்றவற்றைக் கற்ற பின்னர் அரசியலையும் கற்றுக் கொள்வது கடமையாகும். படித்த இளைஞர் அரசியலில் நுழைந்தால்தான் நாடு நலம் பெறும். இளைஞன் செய்துகாட்டுவான் என்பது அனுபவ மொழி. அஸ்ஸாமில் நடந்த தேர்தலில் இளைஞர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது இம்மண்ணில் நடந்ததே. காந்தியடிகளின் அறைகூவலை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் ஆங்கில மொழியைப் புறக்கணித்து சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர்.
தொழில் வளர்ச்சியில்...
தொழில் வளர்ச்சியில் பாரதி கண்ட கனவு, இரும்பை உருக்கிடுவீரே, இயந்திரங்கள் வகுத்திடுவீரே அரும்பும் வியர்வை தெளித்து ஆயிரம் தொழில் செய்திடுவீரே, பட்டினியில் ஆடையும் வறுமையில் உடையும் கொண்டு 
ஆலைகள் செய்வோம், கல்விச் சாலைகள் செய்வோம்.
ஞாலம் வியக்கும் கப்பல் செய்வோம்
என்று பாரதி அன்று கண்ட கனவு இன்று நனவாக வேண்டும்.
இளைஞர் ஆற்ற வேண்டிய தொண்டுதெருக்களைத் தூய்மை செய்தல், குடிநீர் நிலைகளைச் சுத்தம் செய்தல், சுகாதார அமைப்புகளை ஏற்படுத்துதல், விழாக் காலங்களில் கூட்டங்களை நெறிப் படுத்துதல், களவு போன பொருட்களைக் கண்டுபிடித்துக்கொடுத்தல், எழுத்தறி வித்தவன் இறைவன் என்னும் சான்றோர் வாக்குக்கேற்ப எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுத்தல், செய்தித் தாள்களை வாசித்துக்காட்டுதல், நூலகங்கள் அமைக்க ஏற்பாடு செய்தல், பூகம்பம் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடை, பணம் போன்றவற்றை திரட்டி உதவி செய்தல், ஆண்டு முடிந்ததும் தமது புத்தகங்களைப் பிற மாணவர்களுக்குக் கொடுத்து உதவுதல் போன்றவற்றையும் செய்யலாம்.
ஒற்றுமையைக் காத்தல்
நமது இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு விளங்குவதைக் காணும் அந்நிய சக்திகள் நம் மீது பொறாமை கொண்டு நம் நாட்டு இளைஞர்களைத் திசைதிருப்பிவிடுகின்றன. எனவே இளைஞர் பாரதியின் வாக்கிற்கிணங்க
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் எண்ணம் வளர்த்து முடிந்ததும் இந்நாடே”
என நாட்டுப்பற்று கொண்டு விளங்க வேண்டும்.
அறிஞர்களின் இளமைக் காலம்
  • அப்துல் கலாம் : இந்தியாவின் தென் கோடியில் ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்து, நாட்டின் உயர் பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்குச் சென்றவர். அவர் செய்தித்தாள்களை விற்று வரும் வருவாயைக் கொண்டும், மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் படித்துத்தான் வந்தாராம்.
  • கொலம்பஸ் : உலகமே தன்னைத் திரும்பிப் பார்த்து வியக்க வைத்தவர். அவர் ஓர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் மண்வெட்டியில் கரிக்கட்டையால் எழுதித்தான் கல்வி பயின்றாராம்.
  • கலிலியோ இருபுறமாகக் குவிக்கும் தன்மை கொண்ட ஒரு கண்ணாடியைக் கொண்டுதான் தொலைநோக்கியை உருவாக்கினார். 
  • மேலும் அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், கரோலஸ், லின்னேயஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் வாழ்விலும் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
ஆனால் இன்று உண்ண உணவு, உடை, நல்ல இருப்பிடம், கணினிக் கல்வியயனச் சிறப்புற்று விளங்கும் 21-ஆம் நூற்றாண்டை நாம் நன்றாகப் பயன்படுத்துதல் வேண்டும். எனவேதான் “இன்றைய இளைஞர் நாளைய தலைவர்” என்பர்.
முடிவுரை
ஒவ்வொருவரும் நம் நாடு, நம் மக்கள் எனக் கொண்டு விளங்க வேண்டும். புறக்கண் இல்லாவிட்டாலும், அகக் கண்ணாலே கல்வியைப் பெற வேண்டும்.  “தொண்டர் சொல்லவும் பெரிதே” என்றார் ஒளவையார். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பத்கேற்ப இளமையிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். 
“தமிழ்மொழி அவர் மூச்சு - அதன்
தனிச்சிறப்பே அவர் பேச்சு” 
பாவேந்தர் பாரதிதாசரின் வாக்கிற்கிணங்க மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்டு “இளைஞனே! விழித்தெழு!! ஒளிவீசு!!!”
ஆ. மஞ்சுளா,
புனித பேட்ரிக் மே.நி.பள்ளி, அளுந்தூர்

0 comments:

Post a Comment