சுதந்திரம் பெற்ற 64 ஆண்டுகளை நினைவுகூரும் இந்தியா மீண்டும் சுதந்திர போராட்ட சூழலுக்குத் தள்ளப்பட்டது போன்ற நினைவைப் பல்வேறு நிகழ்வுகள் உருவாக்குகின்றன. கடந்த மாதங்களில் நடைபெறும் நிகழ்வுகள் கறுப்புப் பணத்திற்கு எதிராக, லஞ்சம் ஊழலுக்கு எதிராக, கல்வி நிறுவனங்கள் மீண்டும் பணம் உருவாக்கும் கருவிகளாக மாறாமல் இருக்க எடுக்கப்படும் முன்னெடுப்புகள், வன்முறைகளும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும் நீதிக்காகக் காத்திருக்கும் சூழல்கள் எல்லாம் மீண்டும் நிறை சுதந்திரத்தை எதிர்பார்க்கும் மனநிலையை உணர்த்துகின்றன.
பணம், பதவி, அதன் விளைவான செருக்கும் தற்பெருமையும் மட்டுமே தலைதூக்கி நிற்கும் சூழலில், மீண்டும் பொருளுள்ள இந்தியச் சமூகத்தையே எதிர்பார்க்கிறோம்.
கலாச்சார முன்னேற்றம் (?), கண்டுபிடிப்புகளின் முன்னேற்றம், அறிவுப்பூர்வமான வளர்ச்சி, வசதிகளின் பெருக்கம் போன்றவை எல்லாம் வளர்ந்துவிட்ட நாடுகளுக்கு இணையாக நம் நாட்டைத் தூக்கிப் பிடித்தாலும், மக்களின் மனநிலையில் நிறைவும், நிலையான ஒழுங்குமுறையும் இல்லாமல், பண்பு இல்லாத பண்பாடும் தலைதூக்கி நிற்கும் சூழல் நாட்டின் முன்னேற்றத்தை (?) சந்தேகத்திற்கு அழைத்துச் செல்கிறது.
‘தனிமனித வளர்ச்சி சமூக வளர்ச்சி’ என்றாலும் தீமையைச் செய்யும் தனிமனிதர்கள் ஒன்றுகூடி தன்னலத்திற்கான சமூகமாய் மாறிப்போனதால், ஏதோ சில தனிமனிதர்கள் மட்டும் தம் தம் வாழ்க்கையை நல்லவற்றில் நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் தத்தளிக்கிற நிலை. நல்லவர்களாக வாழ்கிறவர்களும், வாழ நினைக்கிறவர்களும் ஒரு காலக்கட்டத்தில் ‘நாம் ஏமாந்து போய் பிழைக்கத் தெரியாமல் வாழ்கிறோமா?’ என்று எண்ணுகிற நிலைக்கு நம் சமூகச் சூழல் உள்ளதை உணர்வோம்.
நம் திருத்தந்தை இவ்வுலகின் போக்கு பற்றிச் சொல்கிறபோது, இறைத்தன்மை இல்லாத ஓர் உலகத்தை இன்று மக்கள் உருவாக்குகிறார்கள் - கடவுளை இவ்வுலகிலிருந்து விரட்டுகிற நிலை உருவாகிறது எனக் குறிப்பிடுகிறார். நம் நாட்டில் இது ஓரளவு உண்மை என்றாலும், மிகுதியான மக்கள் வாழ்க்கையில் இன்னும் பக்திக்கும் பரவசத்திற்கும், கோவிலுக்கும் கொண்டாட்டத்திற்கும் பஞ்சமில்லை. ஆனால் எத்தகைய பக்தியும் கொண்டாட்டமும் மக்களை ஆட்கொண்டுள்ளன என்பதே கேள்வி. கடவுள் பக்தி இருக்கட்டும் என் மனதில் - ஆனால் அது எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நினைப்புதான் அதிகம். கொண்டாட்டம் இருக்கட்டும் - ஆனால் அது நான் நினைக்கிற, விரும்புகிற வாழ்க்கைக்கு மட்டுமே துணை போக வேண்டும் என்ற வாதத்தில் நமது இறைச்சிந்தனைகள் மாற்றம் உருவாக்காத மழுங்கல்தனமாகவே மாறிவிடுகின்றன. என்ன பலன்?
படிப்பும் பட்டமும் நிறையவே வளர்கின்றன. பாராட்டுகின்றோம். இவற்றின் மூலம் வரும் நன்மைத்தனத்தை, ஞானத்தின் மேன்மையை, ஒழுக்கத்தின் உயர்வைப் போற்றி வளர்ப்பவர்கள் எத்தனை பேர்? படிப்பும் பட்டமும் பணம் சம்பாதித்துத் தரும் கருவிகளாக மட்டுமே மாறிப்போவதால், தனிமனித கலாச்சாரம், பண்பாடு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றை வாழும் எண்ணம் இல்லாத ‘படிப்பாளிகள்’ உண்டு. வேலைகள் செய்வதால் பணம் பண்ணும் பெரியோர்கள் சமூகச் சிந்தனையோடு பிறருக்காக வாழும் நிலையைக் காண்பது அரிது. படித்து உயர்ந்தோரின் குடும்பங்களில்தான் எத்தனை தீர்க்க முடியாத பிரச்சனைகள்! ஒருவர் ஒருவருக்காக வாழ வேண்டிய குடும்பங்களில் ஒருவர் மற்றவரைப் ‘பிறர்’ என்று அந்நியப்படுத்திப் பார்க்கும் பார்வை உள்ளவரை ‘சமூகம்’ என்ற பெரிய குடும்பத்தை உருவாக்குவது எப்படி?
ஆகஸ்டு 15 ‘மரியன்னை விண்ணேற்புக் கொண்டாட்டம்’. நம் நாட்டின் விடுதலை நாளில் கொண்டாடும் சிறப்பு நமக்கு உண்டு. அந்த அன்னையின் விழாவில் வரும் சிந்தனைப் பாடல் : செருக்கும் செல்வமும் மறைக்கப்படும் நிலையே இறையரசின் உண்மை வளர்ச்சி நிலை. செருக்குற்றோரைச் சிதறடித்து, செல்வரை வெறுங்கையராய் மாற்றி, தமது உடன்படிக்கையில் உண்டாகும் உலகைக் கடவுள் நிலைநிறுத்தும்போது அடிமைத்தனம் என்பது இருக்காது. இந்த உயரிய மாற்றமும் மனதுமே ஒரு சுதந்திர நாட்டின் வாழ்வாதாரமாக அமையும்.
ஒரு தனிப்பட்ட மரியாள் என்னும் பெண்ணால் இச்சமூகம் பற்றிய மாற்றுச் சிந்தனையைப் பாட முடிந்தது என்றால், சமூக மாற்றம் வேண்டும் என்று போராடும் எத்தனையோ மனிதர்களின் ஒருமைப்பாட்டால் ஏன் புதிய சமூகம் உருவாக்க முடியாது? சிந்திப்போர் ஒன்றுபடவும், ஏமாற்றம் அடையாமல் உறுதிப்படவும் சுதந்திர நாள் வலு தரட்டும்! நம் வலு இழத்தலே மீண்டும் அடிமையை உருவாக்கும். திறம் பெற்ற வலுவோடு உருவாகுவோம். சுதந்திரம் வளர்க!
0 comments:
Post a Comment