திருச்சபைப் புனிதர்கள் வரிசையில் புனித பசிலியார் (St. Basil) மிகவும் உயர்ந்த புனிதராய்க் கருதப்படுகிறார். புனிதர்களும், வேதசாட்சிகளும் பிறந்த குடும்பத்தில் பிறந்தாலும் புனித பசிலியார் இளமையின் நாட்களில் உலகப் பற்று நிறைந்தவராகவே இருந்தார். புனித பசிலியார் (329-379) இயல்பிலேயே மிகுந்த அறிவுத் திறனும், செல்வச் செழிப்பும் நிறைந்தவராய் இருந்ததால் ரோம் நகர்கடந்து கிரேக்கம், ஏத்தன்ஸ் நாடுகளுக்கும் சென்று உயர்கல்வி பயின்றார்.
உலகியல் சிந்தனை நிறைந்தவராய் இருந்த இவரை இறைவனுக்குள் வழிநடத்தியவர் அவரின் உடன்பிறந்த சகோதரி மார்க்ரீனா (Marcrina) தான். இறைவன் இயேசுவின் இறை வாழ்வில் நுழைந்தபின் மகிழ்வுக்குரிய புதிய வாழ்வைக் கண்டார். இறைவார்த்தைகளை வேதாகமத்தில் படிக்கப் படிக்க உலகத்தின் வெறுமை இவரின் கண்களுக்குத் தெளிவாய் தெரிந்தது. உலகப் பற்றிலிருந்தும் பொருளாசையிலிருந்தும் விடுபட விடுபட இறைமகிழ்வு இவரின் இதயத்தில் நுழைவதை உணர்ந்தார்.
இறைஇயேசுவுக்குத் தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுக்க துறவியர் வாழ்வு வாழ்ந்து தன் 35ஆம் வயதில் குருவானவராய் அருள் பொழிவு பெற்றார். ஆயரான பிறகும் அநேக அன்பு இல்லங்களைத் தோற்றுவித்து மிகப் பெரிய புனிதராய் மரித்தார். “இவ்வுலகில் இருக்கும் பொழுது மட்டுமே நாம் இறைப் பணி செய்ய முடியும், மறு உலகில் அல்ல. எனவே இவ்வுலக வாழ்வு முழுவதிலும் இறை இயேசுவின் பணியைச் செய்வதே மிகப் பெரிய பாக்கியம் என்பதை உணருவோம்” என்றார்.
வேதாகமத்தில் நாகூம் ஆகமத்தில் இவ்வாறு வாசிக்கிறோம் “இதோ சமாதானத்தை அறிவிக்கும் நற்செய்தியைக் கொண்டு வருகிறவனின் கால்கள் மலை மேல்நடந்து வருகின்றன” (நாகூம் 1:15).
“சமாதான நற்செய்தியை அறிவிக்க வருகிறவருடைய மலரடிகள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன” (எசா 52:4) எனவும் வாசிக்கிறோம்.
லூக் 9:1ஐ வாசிக்கும்பொழுது ஆண்டவர் இயேசு பன்னிரு அப்போஸ் தலர்களை அழைத்து, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்து அவர்களை “பேய்களை அடக்கவும், நோய்களைக் குணமாக்கவும், இறையரசைப் பற்றிச் செய்தியை அறிவிக்கவும் அவர்களை அனுப்பினார்” எனக் காண்கிறோம்.
லூக் 9:23-26 வரை வாசிக்கும் பொழுது இறைவார்த்தையின் நிமித்தம் இயேசுவைப் பின்பற்றும் ஒரு அப்போஸ் தலன், சீடன் எவ்வாறு இருக்க வேண்டுமென இயேசு குறிப்பிடுகிறார்.
- தன்னையே மறுத்து தன் சிலுவையை நாள்தோறும் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும்.
- என் பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதை மீண்டும் பெற்றுக் கொள்வான்.
- என்னைப் பற்றியும் என் வார்த்தைகளைப் பற்றியும் வெட்கப்படுகிறவன் எவனோ அவனைப் பற்றி மனுமகன் தமக்கும், தந்தைக்கும், பரிசுத்த வானதூதருக்கும் உரிய மாட்சிமையில் வரும்போது வெட்கப்படுவார்” என்கிறார்.
இறை இயேசுவைப் பின்பற்றுபவர் எளிய வாழ்வு, உலக பற்றின்மை, துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் மன வலிமையைக் குறித்தும் (லூக் 9:57-62) ஆண்டவர் இயேசு குறிப்பிடுகிறார்.
இறை அழைப்பின் மகத்துவம், ஆத்தும இரட்சண்ணியப் பணியின் உயர்வு, விண்ணகப் பேரின்ப வாழ்வு இவைகள் எவ்வளவு உன்னதமான தென்றால் இயேசு குறிப்பிடும் தியாகமும் தூய்மை வாழ்வும் இவ்வுலகப் பேற்றுக்கும் மேலாய் தகுதியுடைதாய் இருக்கிறது என்றுதானே பொருள்.
இன்று கிறிஸ்துவின் மறை உண்மைகளைக் “குட்டிக் கதைகள்” மூலம் இருபத்தைந்து புத்தகங்களுக்கும் மேல் எழுதி வெளியிட்ட குருவைச் சந்தித்தேன். இவ்வளவு எழுத்துப் பணி எப்படி உங்களுக்குச் சாத்தியமாகிறது எனக் கேட்டேன்.
அவர் குறிப்பிட்டார் “நான் என் ஜெபத்தில் கருத்தாய் இருக்கிறேன். ஆண்டவர் வெறுக்கும் எப்பழக்கத்தையும் நான் பின்பற்றுவதில்லை. அவருக்கு உத்தமமாய் இருக்க விரும்புவதால் இறைவனும் என்னைப் புதுப் புது அறிவினால் நிரப்புகிறார் என நினைக்கிறேன்” என்றார்.
புனித பெர்னார்ட் (1091-1153) ஒரு சமயத்தில் தன்னுடன் துறவு வாழ்விலிருந்தவர்களுடன் ஆலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது விண்ணகத்தின் சாயல் அங்கு பொழியத் தொடங்கியது. புதியதரிசனக் காட்சி வெளிப் பட்டதை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
துறவியர் ஜெபித்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லாத் துறவியரின் அருகில் ஒரு சம்மனசானவர் நிற்பதைக் கண்டார். அந்த சம்மனசானவர்கள் அனைவரும் அவரவர்களின் காவல் தூதர்களே.
ஒவ்வொரு வானதூதரும் தம் கையில் ஒரு சிறிய எழுது குறிப்பேடு வைத்திருந்தார்கள்; சில சம்மனசானவர்கள் குறிப்பேட்டில் தங்க எழுத்தி னாலும், சிலர் வெள்ளி எழுத்தினாலும், வேறு சிலர் சாதாரண மையினாலும் குறிப்பெழுதிக் கொண்டிருப்பதைக் கண்டார். சில சம்மனசானவர்களோ சாதாரண தண்ணீரால் எழுதிக் கொண்டி ருந்தார்கள். கடைசியில் சில வானதூதர்களோ கலங்கிய முகத்துடன் எதுவும் எழுதாமல் நின்று கொண்டிருந்தார்கள்.
தங்கத்திலும், வெள்ளியிலும் எழுதிய சம்மனசானவர்களின் துறவியர் ஒழுக்க வாழ்விலும், இறைப்பணியிலும், ஜெபத்திலும் இறை அன்புடன் செயல்பட்டவர்களே. சாதாரண மையினால் எழுதப்பட்டவர்கள் இறை அன்பும் ஜெபப் பற்றும், அர்ப்பண உணர்வும் இல்லாதவர்களாயிருந்தார்கள். தண்ணீரில் எழுதப் பட்டவர்கள் இறை அன்போ, ஜெபப் பற்றோ இல்லாமல் உடல் ஆசைகளுக்கு அடிமையானவர்களாய் இருப்பதைக் குறிப்பிட்டார் புனித பெர்னார்ட்.
நமக்கெனக் கொடுக்கப்பட்ட இறை வாழ்வைப் புனிதமாய்ப் பயன்படுத்தும் பொழுது இறைவனும் நம்மை மிகுதியான வரங்களால் ஆசீர்வதித்து நிரப்புவார் என்பதே உண்மை - சிந்திப்போம். 1
Fr. ஜெகநாதன்,
அய்யம்பாளையம், திண்டுக்கல்
0 comments:
Post a Comment