எல்லாருக்கும் மறைக்கல்வி
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் பேரன்புக்குரிய அருள்பணியாளர்களே, துறவியரே, பொதுநிலையினரே, உங்கள் அனைவருக்கும் தமிழக ஆயர்களாகிய எங்களுடைய நல்வாழ்த்துக்கள்!
தமிழக இறைமக்கள் வாழ்வில் நம் ஆண்டவர் இயேசுவின் அருளும் ஆசீரும் தொடர்ந்து செயல்படுவதைப் பார்த்துப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். குறிப்பாகக் குழந்தைகள், இளைஞர்கள், முதிர்நிலையினர் ஆகியோர் நம்பிக்கை வாழ்விலும் நற்செய்தி மதிப்பீடுகளிலும் வளர்ந்திட மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். இந்த வகையில் நம் திருச்சபையில் மறைக்கல்வி சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. தமிழகத் திருச்சபை மறைக்கல்விப் பணியில் பல முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பது நாம் அறிந்ததே. எனினும் மாறிவரும் சமூக கலாச்சாரச் சூழ்நிலையில் நமது நம்பிக்கை வாழ்வை மேலும் ஆழப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் 2011 சூலை முதல் 2012 சூன் முடிய உள்ள காலம் மறைக்கல்வி ஆண்டாகக் கொண்டாடப்பட வேண்டுமென 2011 பிப்ரவரி 6 - 7 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தமிழக ஆயர் பேரவைக் கூட்டத்தில் நாங்கள் அறிவித்தோம். அதற்கேற்ப மறைக்கல்வி ஆண்டாக “எல்லாருக்கும் மறைக்கல்வி” என்ற விருது வாக்குடன் இந்த ஆண்டு கொண்டாடப்படும். மறைக்கல்வி சார்ந்த புரிதலிலும் நடைமுறையிலும் முக்கிய ஒரு மாற்றத்தை இது கொண்டுவரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மறைக்கல்வி என்பது நம் சமய உண்மைகளையும் கோட்பாடுகளையும் அறிவுபூர்வமாக நாம் கற்றுக்கொள்ளும் ஒரு படிப்பு மட்டுமல்ல. நமது வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்திலும் நிகழ்விலும் சிறப்பாகக் காலத்தின் அறிகுறிகளிலும் கடவுள் நம்மைச் சந்திக்கின்றார். அவருடைய அன்பு மக்களுக்குரிய உறவோடும் உரிமையோடும் மாண்போடும் மகிழ்வோடும் நாம் வாழவும் வளரவும் நமக்கு அழைப்பையும் அருளையும் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றார். இந்த இறையனுபவத்தை நாம் இனம் கண்டு வாழ்க்கை அனுபவமாக மாற்றி, இறையாட்சியின் மனிதர்களாகவும் குழுமங்களாகவும் நாம் உருவாகி, உலக சமூகத்தையே அன்பிலும் நீதியிலும் செயல்படும் இறையாட்சியாக உருமாற்ற வேண்டும். இத்தகைய நம்பிக்கையின் உருவாக்கமே மறைக்கல்வி. அதாவது இயேசுவின் மனநிலையுடன் நாம் வாழவும் உறவாடவும் சமூகத்தில் செயல்படவும் வேண்டிய நம்பிக்கையின் புரிதலையும் உறுதிப்பாட்டையும் மறைக்கல்வி நமக்குத் தர வேண்டும்.
இந்த கல்வி ஆண்டை மறைக்கல்வி ஆண்டு என நாங்கள் அறிக்கையிட மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
- தமிழகத் திருச்சபையில் மறைக்கல்வியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் அருள்பணியாளர் தாமஸ் கவான் டஃபி. இவர் பாரீசு வெளிநாட்டு மறைபரப்புச் சபையைச் சார்ந்தவர். இவர் மறைக்கல்வியில் வல்லுநர்; திண்டிவனம் வேதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவியவர். தமிழக மறைக்கல்வியில் புதிய பாடத்திட்டத்தையும் புதிய போதனா முறையையும் செயல் படுத்தியவர். இவர் நம் தாயகத்தில் காலடி வைத்து இப்பொழுது நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றன (1911-2011).
- இவ்வாண்டு தமிழக மறைக்கல்வி நடுநிலையத்தின் பொன்விழா ஆண்டு ஆகும். 1961 சனவரி 24-26 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தமிழக ஆயர் பேரவை, திண்டிவனத்தில் தமிழக மறைக்கல்வி நடுநிலையத்தையும் வேதியர் பயிற்சிப் பள்ளியையும் உருவாக்குவது என்று தீர்மானித்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. பாரீசு வெளிநாட்டு மறைபரப்புச் சபையைச் சார்ந்த அருள்பணியாளர் எட்மண்ட் பெக்கர் அவற்றின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் சமூகத் தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்துவது முதலான புதிய உத்திகளைப் புகுத்தி மறைக்கல்வியைக் கற்றுத்தருவதில் முன்னோடியாக விளங்கினார்.
- மேலும் இவ்வாண்டு அனைத்து இந்திய அளவில் மறைக்கல்வியை நெறிப்படுத்தி ஊக்குவித்து வழிநடத்தவும் கத்தோலிக்க ஆயர் பேரவை புதிய தேசிய மறைக்கல்வியின் வழிகாட்டி நூலை (National Catechetical Directory) வெளியிடுகிறது. இந்த நூல் தமிழகத் திருச்சபையின் மறைக்கல்வி மறுமலர்ச்சிக்கு ஊற்றாகவும் ஆக்கபூர்வமான செயல் பாடுகளுக்குத் தூண்டுகோலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைக்கல்வி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை தொடர வேண்டிய ஒரு முயற்சியும் பயிற்சியுமாகும். இது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து நடைபெற்று நமது நம்பிக்கை வாழ்வில் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் அளிக்க வேண்டும். எனவே, இது வகுப்பறைக்கோ, சிறார்களுக்கோ மட்டுமே உரியது என்னும் புரிதல் தவறானது. இது கிறிஸ்தவ வாழ்வின் எல்லா நிலைகளிலும் சூழமைவிலும் தொடர்ந்து நடைபெற வேண்டியது. ஒவ்வொரு பருவத்தினருக்கும் அவர்தம் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் தேடல்களுக்கும் ஏற்பத் தழுவியமைத்து இது தரப்பட வேண்டும். திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் நம்பிக்கையை ஆய்ந்து அறியவும் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவோடு உள்ள உறவில் வளரவும் நம்பிக்கையின் சாட்சிகளாகத் திகழவும் இறையாட்சி சமூக உருவாக்கப் பணியில் ஈடுபாடும் கடமையும் உரிமையும் கொண்டவர்கள் என்பதை உணர்ந்து வாழவும் அவர்களுக்கு உதவவேண்டும்.
நம் மறைமாவட்டங்களிலும் பங்குகளிலும் சிறப்புற நடைபெற்றுவரும் மறைக்கல்விப் பணிகளைப் பாராட்டுகிறோம். குறிப்பாக மறைக்கல்விப் பணி சிறப்பாக நடைபெற அக்கறை காட்டுகிற அருள்பணியாளர்கள், ஆர்வத்துடன் உதவும் துறவிகள், ஆசிரியர்கள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எனினும் எல்லாக் குடும்பங்களிலும் அன்பியங்களிலும் நிறுவனங்களிலும் மறைக்கல்வி சிறப்பாக நடைபெறுகிறது என நாம் கூற இயலாது. எனவே நாம் அனைவரும் அதில் அதிக ஆர்வத்துடனும் அக்கறையுடனும் ஈடுபட அழைக்கிறோம். குறிப்பாக அனைத்து இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை புதிய தேசிய மறைக்கல்வி வழிகாட்டி நூலை வெளியிட இருப்பதால் இவ்வாண்டு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நூல் அனைத்து இந்திய அளவில் மறைக்கல்வியை நெறிப்படுத்தவும் ஊக்குவிக்கவும் பல வழிமுறைகளை நமக்குத் தருகிறது. அவற்றின் அடிப்படையில் நம் பங்குகள், குடும்பங்கள், அன்பியங்கள், பொதுநிலையினருக்கான அமைப்புகள், இயக்கங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் மறைக்கல்விப் பணியைப் புதிய நற்செய்திப் பணியாக விரைந்து செயல்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
மறைக்கல்வி கற்பதும் கற்பிப்பதும் திருமுழுக்குப் பெற்ற எல்லாருடைய கடமையும் உரிமையும் ஆகும். ஆயர், அருள்பணியாளர், துறவியர், ஆசிரியர், வேதியர், பெற்றோர் ஆகிய அனைவரையும் இது சார்ந்தது. எனினும் இப்பணியில் கிறிஸ்தவப் பெற்றோர்களின் பங்கு முதன்மையானதும் மிக முக்கியமானதுமாகும். சிறப்பாக குடும்ப செபம், குடும்ப மறைக்கல்வி வாயிலாக அவர்கள் தம் பிள்ளைகளை நம்பிக்கையில் உருவாக்குவதில் முனைப்போடு செயல்பட வேண்டும். அடுத்து ஒவ்வொரு பங்கும் மறைக்கல்வியின் அடிப்படைத் தளமாக விளங்குகிறது. ஞாயிறு மறைக்கல்வி, அருளடையாள மறைக்கல்வி, சிறப்புப் பயிற்சிகள் என்பவை ஒவ்வொரு பங்கிலும் வழங்கப்பட வேண்டும். நம் கல்வி நிறுவனங்களும் முக்கிய மறைக்கல்வித் தளங்களாக உள்ளன. இவற்றில் தரப்படும் மறைக்கல்வி மாணவர்களை அதிகம் ஈர்ப்பதாகவும் ஈடுபடுத்துவதாகவும் அமைய வேண்டும். இதற்கு ஊடகங்கள் முதலான புதிய உத்திகளைப் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
“எல்லாருக்கும் மறைக்கல்வி” என்னும் விருதுவாக்குடன் தொடங்கப்படும் இந்த மறைக்கல்வி ஆண்டின் பணிகள் அனைத்தும் தமிழகத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு மிகவும் உதவும் என நம்புகிறோம். இந்நோக்குடன் இந்த மறைக்கல்வி ஆண்டில் நமது தமிழகத்தின் அனைத்து மறைமாவட்டங்களிலும் பங்குகளிலும் கல்வி நிறுவனங்களிலும் பின்வருவனவற்றைச் செயல்படுத்த வேண்டும் எனப் பெரிதும் விரும்புகின்றோம்.
- மறைமாவட்டம், மறைவட்டம், மறை மண்டலம் ஆகியவற்றில் தொலை நோக்குப் பார்வையுடன் மறைக்கல்விப் பணிக்குழுக்களை அமைத்தல்.
- பங்குகள்தோறும் மறைக்கல்வி மன்றங்கள் அமைத்து அவற்றைச் சிறப்பாக நடத்தி அனைவரையும் ஈடுபடுத்தி மறைக்கல்விப் பணியை ஒரு மக்கள் இயக்கமாக்குதல்.
- நமது பங்குகளிலும் கிளைப் பங்குகளிலும் நடைபெறும் விழாக்களின் போதும் சிறப்பாகப் பங்குப் பாதுகாவலரின் விழாக்களின்போதும் மறைக்கல்வி சார்ந்த தலைப்புகளை மைய சிந்தனையாகக் கொண்டு திட்டமிட்டுக் கொண்டாடி இறைமக்களின் நம்பிக்கை வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துதல்.
- அனைத்துப் பங்குகளிலும் மறைக்கல்வி நூலகங்களை உருவாக்குதல்.
- குடும்ப விழாக்கள் முதலான பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை முறைசாரா மறைக்கல்வித் தளங்களாக மாற்றுதல்.
- மறைக்கல்வியின் பல்வேறு பிரிவுகளைப் பள்ளி மறைக்கல்வி, ஞாயிறு மறைக்கல்வி, அருள்அடையாள மறைக்கல்வி, மழலையர்-சிறார்-இளைஞர்- முதிர் நிலையினர் மறைக்கல்வி, குடும்ப மறைக்கல்வி ஆகிய அனைத்தும் தத்தம் நிலையில் வளர்ச்சி காண மேற்கொள்ளப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
- இந்த மறைகல்வி ஆண்டில் பல்வேறு நூல்கள், குறுந்தகடுகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்தி இறைமக்களின் நம்பிக்கை வாழ்வில் வளர்ச்சி காணச் செய்தல்.
- மறைமாவட்ட அளவில் மறைக்கல்வி மாநாடுகள், பெருந்திரள் பேரணிகள், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிகளுடன் பல்வேறு மையங்களில் கண்காட்சிகள் நடத்தி மறைக்கல்வி பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்குதல்.
- தேவைக்கும் சூழலுக்கும் ஏற்பத் தமிழகக் கருத்தாளர் குழுவின் உதவியுடன் பங்கு, மறைவட்ட, மண்டல, மறைமாவட்ட அளவில் பயிலரங்குகளை ஏற்பாடு செய்தல்.
- மறைக்கல்வி ஆண்டுக்கான செபம், பாடல், இலச்சினை (Emblem), கொடி ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி தமிழகம் எங்கும் மறைக்கல்வி எழுச்சியை ஏற்படுத்துதல்.
- பள்ளிகளில் மறைக்கல்வி சிறப்பாகவும் செம்மையாகவும் நடைபெறுவதைத் தாளாளர்கள் உறுதி செய்தல். ஒவ்வொரு பங்கிலும் ஞாயிறு மறைக்கல்வி சிறப்பாக நடைபெறப் பங்குப் பணியாளர்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
அன்பார்ந்த இறைமக்களே, நாம் பெற்றுக்கொண்ட நம்பிக்கை வாழ்வின் மேன்மையை உணர்ந்து இந்த மறைக்கல்வி ஆண்டில் சிறப்பாக அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள உறுதி எடுப்போம். இதற்காக மேற்கூறப்பட்ட செயல்பாடுகளைத் தனியாகவும் குழுக்களாகவும் சிறப்பாகச் செய்து மறைக்கல்வி மறுமலர்ச்சி வழியாகத் தமிழக இறை மக்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண வாழ்த்துகின்றோம். இறை அருளை இறைஞ்சுகின்றோம். இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
பேராயர் ஏ.எம். சின்னப்பா
தலைவர்
தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை
ஆயர் அந்தோணி டிவோட்டா
தலைவர்
தமிழக மறைக்கல்விப் பணிக்குழு
0 comments:
Post a Comment