புனித அந்தோனியாரின் பக்திமிகு மறையுரைகளைக் கேட்டு மனம் திரும்பினார் ஒரு கொள்ளைக்காரர். மனம் திரும்பியதோடு மட்டுமல்லாமல், புனித அந்தோனியாரிடம் பாவ அறிக்கையும் செய்தார். புனித அந்தோனியார் பாவத்திற்குப் பரிகாரமாய் உரோமையிலுள்ள புனித இராயப்பர் கல்லறையை 12 முறை தரிசித்து ஜெபிக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.
பன்னிரெண்டு முறை கால்நடையாய் சென்றுவர அநேக ஆண்டுகள் எடுத்தது. முதிர்வயதை அடைந்த நிலையில், 12-வது முறை கல்லறையைத் தரிசித்து கால்நடையாய் திரும்பி வரும்போது கல்லறை அருகில் முதியவர் ஒருவரையும் கண்டு அவரிடம் தான் கல்லறை தரிசிப்பதன் நோக்கத்தைக் குறிப்பிட்டார். முதியவரோ ஆச்சரியமடைந்து நானும் இப்போது தான் 12-வது முறையை முடித்திருக் கிறேன் என்றார்.
பாவத்திற்குரிப் பரிகாரமாக சில ஜெபங்களை மட்டும் சொல்லச் சொல்வது, புனித அந்தோனியாரின் வழக்கமல்ல. மாறாக, உடல் ஒறுத்தல், பரித்தியாகம், சிலுவைப்பாடுகளில் சேர்ந்துகொள்ளும் சில தியாகங்களையே பாவத்திற்குப் பரிகாரமாகக் கொடுத்து வந்தார்.
நம்மையே அடிமையாக்கி பாவத்தின் சிறைக் கைதியாய் வைத்திருக்கும் சாத்தானின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்க கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளில் பங்கு பெற வேண்டும்.
புனித பவுல் தன் இறைப்பணி அனுபவ வாழ்வைக் குறித்துச் சொல்லும் பொழுது, “உங்களுக்காக நான் படும் வேதனைகளில் மகிழ்ச்சிகொள்கிறேன். கிறிஸ்து பட வேண்டிய வேதனைகளில் இன்னும் குறைவாய் இருப்பதை என் உடலில் நிறைவாக்குகிறேன்” (கொலோ 1:24) என்கிறார்.
புனித லூக்கா நற்செய்தியில் புனித திருமுழுக்கு யோவானைக் குறித்துச் சொல்லும்பொழுது, “அவர் ஆண்டவர் முன்னிலையில் மேலானவராய் இருப்பார். திராட்சை ரசமோ மதுவோ குடிக்க மாட்டார்” (லூக் 1:15) என்று கபிரியேல் வானதூதர் கூறுவதைக் குறிப்பிடுகிறார்.
மத்தேயு 3-ஆம் அதிகாரத்தில் இறைப்பணிக்குச் செல்லும் முன் 30 ஆண்டுகள் புனித திருமுழுக்கு யோவான் காடுகளில் தவ முனிவராய் வாழும் நிலையைக் காண்கிறோம். காட்டுத் தேனையும் வெட்டுக்கிளியையும் உணவாகக் கொண்டும், ஒட்டக மயிராடையை உடையாகக் கொண்டும் தவ வாழ்வு வாழும் புனித அருளப்பரைப் பற்றி வாசிக்கிறோம். புனித யோவான் தம்மையே நெறிப்படுத்துவதற்காகவே இத்தவ வாழ்வை மேற்கொள்கிறார். “அவர் தாய் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பெறுவார். எலியாசை ஆட்கொண்டிருந்த தேவ ஆவியும் வல்லமையும் உடையவராய் அவர் ஆண்டவருக்கு முன்பே செல்வார்” எனக் கூறுகிறார் லூக்கா (1:15-17).
இத்தகைய நிலையில் இருப்பினும், தம்மையே ஒடுக்கி பரிசுத்த வாழ்வில் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து இயேசுவுக்கு முன்னோடியாய் இறைப்பணி செய்ய வருகிறார்.
“இரத்தம் சிந்துதல் அன்றி மீட்பு இல்லை” எனக் கூறும் வேதாகம வசனத்தின்படி நாம் நம்மையே நெறிப்படுத்தவும், பரிசுத்த வாழ்வில் கடந்து செல்லவும், நம்மை அடிமையாக்கும் பாவ உணர்விலிருந்து விடுபடவும் நம்மையே ஒறுத்துக்கொள்வது அவசியம். உபவாச வாழ்விலும், நோன்பு நிலையிலும் கடந்து செல்வது கட்டாயம். புனித பவுல் தன் வாழ்வைக் குறித்து சொல்லும் பொழுது, “பிறருக்கு நற்செய்தி அறிவித்த பின் நானே தகுதியற்றவன் என நீக்கப் படாதவாறு என் உடலை ஒறுத்து அடிமையாக்குகிறேன்” (1 கொரி 9:27) என்கிறார்.
ஸ்காட்லாந்து நாட்டின் புனிதை புனித மார்க்ரேட் (1045 - 1093) மால்கோம் என்ற அரசரைத் திருமணம் செய்தார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மால்கோம் இழந்த தம் கோட்டையைப் பிடிப்பதற்காக நார்மண்டி நாட்டினரோடு போராடத் தொடங்கினார்.
அச்சமயத்தில் மார்க்ரேட் மரணப் படுக்கையில் இருந்தார்கள். அவரின் கணவரும், ஒரு மகனும் போரில் அகால மரணமடைந்தார்கள். இச்செய்தியோடு தன் தாயாரைப் பார்க்க ஓடி வந்தார் இன்னொரு மகன். அவரது முகக் கலவரத்தைப் பார்த்தே தன் கணவரும் மகனும் மரித்து விட்டார்கள் என்பதை அறிந்து ஆற்ற முடியா துயரில் ஆழ்ந்தார்கள் புனித மார்க்ரேட். இருப்பினும் இவ்வாறு இறைவனிடம் ஜெபித்தார்கள் : “இறைவா, உமக்கு நன்றி. இனியும் என் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பிறர் பாவங்களுக்காகவும் இக்கொடிய சிலுவைப்பாடுகளை எனக்குத் தருவதற்காக மிகவும் நன்றி” எனக் கூறி உயிர் துறந்தார்கள்.
தன் வாழ்வு முழுவதும் கடவுளுக்குப் பிரியமாய், மனிதர்களிடம் நேசமாய், குற்றமில்லா உள்ளத்துடனும் இறைப் பணியாற்றிய குருவானவர் ஒருவரை அறிவேன்.
அவர் முதிர் வயதில் மரணப் படுக்கையில் இருந்தார். புற்றுநோயின் கொடுமையில் வாடினார். மிகுதியான துன்பத்திற்கும் உள்ளானார். அவரின் பங்குப் பிள்ளைகளும், அவரால் உயர்த்தப்பட்ட வர்களும் அவரிடம் வந்து அவரின் துன்பம் கண்டு கண்ணீர் வடித்தார்கள்.
அவரோ அவர்களிடம், “நாம் மரணம் அடைவதற்கு இறைவன் ஏதாவது ஒரு வியாதியை நமக்குத் தர வேண்டும். எனக்கு இந்த வியாதி. அதனாலென்ன? உத்தரிக்கும் ஸ்தல வேதனையை இவ்வுலகிலேயே அனுபவிப்பது பாக்கியமல்லவா?” என்றார்.
நாமும் நம் வாழ்வில் நம்மைக் கடவுளின் பிள்ளைகளாய் வாழ துன்பங்கள் வழியே செல்வோம். ஆமென்.
-Fr. ச. ஜெகநாதன்,
அய்யம்பாளையம்,
திண்டுக்கல்
0 comments:
Post a Comment