உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் நூலக மேஜையின் மேலேயே இருந்தது. சின்ன புத்தகம்தான். மங்கலான அட்டைதான். பழுப்பு நிற தாள்கள்தான். கைகளால் வரையப்பட்ட தலைவர்களின் படங்கள்தான். ஆனால் முதல் பக்கத்தில் பார்க்கையில் பலபேர் எடுத்துப் படித்ததற்கான அடையாளம் ஏகமாய் இருந்தது. நல்ல புத்தகம்தான் போலும். அதனால்தான் பலபேர் படித்திருக் கிறார்கள். நாமும்தான் படித்துப் பார்ப்போமே. தீர்மானித்த தினேஷ் அந்த புத்தகத்தையே எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.
களைப்பு தீர நீராடிவிட்டு, உணவை முடித்துக் கொண்டு ஆயாசமாக கட்டிலில் சாய்ந்தான். ஒவ்வொரு தலைவரின் வாழ்க்கை வரலாறும் படிக்க நன்றாகவும், சுவாரசியமாகவும் இருந்தது. தொலைக் காட்சி பெட்டிமுன் அமரும் விருப்பம்கூட இல்லாமல் புத்தகத்தில் மூழ்கிப் போனான் தினேஷ். நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு வந்தது. படிக்க ஆரம்பித்தான். அவருடை இளமைக் காலம், இலட்சியங்கள், போராட்டங்கள், வெற்றி-தோல்விகள், நாடு கடத்தப்பட்டது எல்லாமே அதில் இருந்தது. இடையில் அவர் தன் காதலியிடம் கொண்ட அன்பு பற்றி எழுதப்பட்டிருந்தது. வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்று பெரிய வெற்றி வேந்தராய் திகழ்ந்தவர் எப்படி தான் கொண்ட அன்பில் தோற்றுப்போய், மனமுடைந்து, கண்ணீர் விட்டு கசிந்துருகினார் என்று எழுதப்பட்டிருந்தது. “அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கெல்லாம் ஏமாற்றமும் கண்ணீரும்தான் பரிசாக கிடைக்குமோ?” நெப்போலியன் நெஞ்சுருகி எழுதி இருந்தார். பிரியம் கொண்ட தன் இதயம் தன்னிடம் பிரியம் காட்டாதது, உண்மையாய் இராதது அவருக்கு மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது. ஆனாலும் தான் கொண்ட அன்பில் அவர் பின்வாங்கவே இல்லை. தன் பலத்தால், பராக்கிரமத்தால் பல வெற்றிகளைக் கண்டார். பல வெற்றி வீரர்களை உருவாக்கினார். கோழைக்கும் வீரம் வரும்படி வாழ்ந்து காட்டினார். பல மாபெரும் சாதனைகளைக் கண்டவர் இதயத்தில் குத்திய வலி காரணமாக சோர்ந்து போயிருந்த வேளையில் எதிரிகளால் கைது செய்யப்பட்டார். நாடு விட்டு நாடு கடத்தப்பட்டார். அங்கே அவரது வாழ்வு தனிமைப்படுத்தப்பட்டது. துக்கமும் வேதனையும் தலைதூக்கியது. எங்கே தன் அன்பில் களங்கம் ஏற்பட்டது. எப்படி தன் நேர்மை தடம் புரண்டது. கட்டிய கனவுக் கோட்டை ஏன் இடிந்து விழுந்தது, யோசித்து யோசித்து குழம்பிப் போனவர் இதுதான் உண்மையான அன்புக்கு கிடைக்கும் பரிசு என்றால் அதையும் ஏற்றுக் கொள்வதுதான் முறை என தீர்மானித்துக் கொண்டார். தன் டைரியில் “ஒருவேளை தான் இறந்துவிட்டால், தன்னை அடக்கம் செய்யும் முன் தன் இதயத்தை கிழித்தெடுத்து, மதுரசத்தில் ஊறவைத்து, தன் அன்பை வெளிப்படுத்தும் முகமாக அதைத் தன் மனம் கவர்ந்த காதலி ஜோஸ்பினிடம் சேர்த்துவிட வேண்டும்” என எழுதி வைத்துக் கொண்டார். பல சிறந்த வீரர்களை தனது அனுபவத்தால் உருவாக்கினார்.
ஏக்கத்திலும் துக்கத்திலும் மூழ்கி மூழ்கியே அவர் வாழ்நாட்களும் முடிந்துப் போயின. அவர் அடக்கம் செய்யப்பட்டார். எந்த காதலிக்காக தன் இதயத்தை கிழித்தெடுத்து அவளிடம் சேர்க்க வேண்டும் என விரும்பினாரோ அந்த விருப்பம் நிறைவேற்றப்படாமல் அவருடைய இதயமும் புதைக்கப்பட்டது. காலங்கள் கடந்தன. ஒன்றல்ல இரண்டல்ல பதினெட்டு ஆண்டுகள் கடந்தன. எந்த நாட்டிற்காக பாடுபட்டாரோ எந்த மக்கள் சுதந்தரமும் குடியுரிமையும் பெற்று வாழ வேண்டும் என விரும்பினாரோ அந்த அவருடைய தேசம் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்று குடியுரிமை கொண்டது. அனைவரும் அணியணியாய் ஒன்றுகூடி தங்கள் முன்னாள் தலைவருக்கு வீர வணக்கமும் நன்றியும் தெரிவித்தனர். தங்களுடைய நல்வாழ்விற்காகப் பல பாடுகள்பட்டு, போராடி வாழ்ந்தவர், வேற்று தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டவர், அங்கேயே இறந்து புதைக்கப்பட்டவர் - அவரது உடலைத் தோண்டி எடுத்து சொந்த மண்ணில் கொண்டு வந்து புதைத்து, அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதே தாங்கள் அவருக்குச் செய்யக் கூடிய நன்றிக்கடன் என தீர்மானித்தனர். அவரது உடல் புதைக்கப்பட்ட நாட்டிற்குச் சென்று, தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடலை மீட்டனர். பரிசோதனைக்காக உடலை ஆராய்ந்தபோதே அவருடைய இதயம் மட்டும் எந்தவித சேதாரத்தையும் சந்திக்காமல் அப்படியே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எல்லோருக்கும் ஆச்சரியமான ஆச்சரியம். இது எப்படி சாத்தியம்? என்று பல ஆராய்ச்சிகள் செய்ததில் அது அவருடைய இதயம்தான் என நிரூபிக்கப்பட்டது. அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் புரட்டியபோதே அவருடைய இறுதி ஆசையாக அவர் இதயம் அவர் காதலியிடம் சேர்க்கப்பட வேண்டும் என இருந்தது. அன்பு கொண்ட அந்தத் துரதிர்ஷ்ட இதயத்தின் விருப்பமும் நிறைவேற்றப்பட வழியில்லை. காரணம் அவர் வேறொருவரின் மனைவியாக வாழ்ந்து பிரிந்திருந்தாள். அவருடைய ஆசையை நிறைவேற்ற முயற்சித்தவர்களை அழ மட்டுமே முடிந்ததே ஒழிய வேறொன்றும் செய்ய முடியவில்லை.
தினேச்ன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் வடிந்தது. முகமெங்கும் வியர்வையாறு பெருகியது. அன்பிற்கு இவ்வளவு சக்தியா? அன்பு கொண்டவர்கள் எல்லோரும் அனுபவிப்பது வலியும் வேதனையும்தானா. ஐயோ நிலையில்லாத வாழ்வில் இந்த அன்பு மட்டும்தான் நிஜமா? இதைப் புரிந்து கொள்ளாமல் உயிருக்கு உயிராய் அன்பு செய்த பெண்ணை, அவளுக்கு இதயத்தில் பிரச்சனை என்றதும் பிரிய துணிந்தது எப்படி? சே! பிரச்சனை யாருக்கில்லை, வியாதி யாருக்கில்லை, வருத்தம் யாருக்கில்லை. எல்லாவற்றுடனும் இயைந்து வாழ்வது தானே வாழ்க்கை. புரிந்து கொண்ட தினேஷ் தன் இதயத்தோடு இதயமாகக் கலந்துவிட்டவளைக் கண்டு மன்னிப்புக் கேட்டு, அவள் இழக்க இருந்த வாழ்வை மீண்டும் தர, நம்பிக்கையோடு வாழ வைக்க புறப்பட்டான் வித்யாவின் வீடு நோக்கி.
0 comments:
Post a Comment