உண்மையாய்க் காதலிப்போம்


காதலர் தினத்தில் இன்றைய இளைஞர்கள் மேற்கொள்ளும் அநாகரீகச் செயல்களைக் கண்டு சமுதாய அமைப்பினரும் கல்வியாளர்களும் பெற்றோர்களும் முகம் சுளிக்கின்றனர். காவல் துறையினர் அன்று சிறப்பு ரோந்துப் பணியில் அமர்த்தப்படுகின்றனர். ஏதோ சுனாமி வருவதைப் போல எல்லாரும் பயப்படுகின்றனர்; அருவருப்பு அடைகின்றனர்.

ஏன் இந்தப் பதட்டமும் பயமும் வெறுப்பும்? நட்பு என்ற போர்வையில், காதல் என்ற பெயராலே நாகரீகத்தையும் பண்பாட்டையும் குழி தோண்டிப் புதைக்கும் செயல்பாட்டில் தங்களை இளைஞர்கள் இழப்பதால்தான் இத்தகைய பயமும் பதட்டமும். போதைக்கும் தீய பழக்கத்திற்கும் அடிமையான சில இளைஞர்கள் இளம் பெண்களைக் காதல் என்ற போர்வையில் மயக்கி, அவர்களுக்கும் போதைப் பொருட்களைப் பழக்கப்படுத்தி, கற்பைச் சூறையாடி அவர்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி விடுகின்றனர். இவர்களின் இத்தகைய செயல்பாட்டால் இளைஞர்களை நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய பாரதம் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது.

காதலர்களே காதல் தினத்தைக் கொண்டாடுங்கள். உங்கள் கொண்டாட்டங்கள் மற்றவர்களின் மனத்தைப் புண்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட வரைமுறைக்குள் இருக்கட்டும். நாம் ஆடை உடுத்துவது நம் மானத்தைக் காக்கத்தான். அதைப் போல நம் கொண்டாட்டங்களும் இருக்க வேண்டும். காதல் என்பது என்ன? ஆணும் பெண்ணும் இரண்டு இரண்டு பேராகச் சேர்ந்து கொண்டு பொது இடங்களான கடற்கரையிலும், பொழுதுபோக்குப் பூங்காக்களிலும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் இருப்பதற்குப் பெயர்தான் காதலா?

இருவர் ஒருவரை ஒருவர் விரும்பி ஒத்த அன்பு உடையவராக இருப்பதே காதல். காதலுக்கு இலக்கணமாகச் சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி காணப்படுகிறது. கொடும் கானகத்தில் இரண்டு பிணை மான்கள் கடும் கோடைக் காலத்தில் சென்று கொண்டிருக்கின்றன. இடையே இரண்டிற்கும் கடும் தாகமெடுக்கிறது. தாகத்தைத் தணித்துக்கொள்ள தண்ணீரைத் தேடி அலைகின்றன. அலைந்த அலைச்சலில் வெப்பத்தின் கொடுமையைத் தாங்க முடியாமல் பெண் மான் தவிக்கிறது. எங்காவது ஒண்டிக்கொள்ள சிறு நிழல் கிடைக்குமா என்று தவிக்கிறது. அதன் தவிப்பை உணர்ந்த ஆண் மான் கொளுத்தும் அந்த வெயிலில் தன் கால்களை அகற்றி இடைப்பட்ட நிழலில்  தன் இணைக்கு நிழலாக நிற்கிறது. 

பின் தன் பயணத்தைத் தொடர்ந்த அவ்விரண்டு மான்களும் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள தண்ணீரைத் தேடி அலைகின்றன. ஓர் இடத்தில் கொஞ்சமாக இருக்கும் கலங்கிய நீரைப் பார்த்து இரண்டும் வேகமாக ஓடுகின்றன. சிறிதளவே இருக்கும் தண்ணீர் இரண்டு பேரின் தாகத்தைத் தீர்க்காது என்பதை உணர்ந்த ஆண் மான், பெண் மான் குடிக்கட்டும் என ஒதுங்கிக் கொள்கிறது. அதைப் போலவே ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மான் விட்டுக்கொடுக்கிறது. பெண் மான் தனக்கு விட்டுக்கொடுத்ததை உணர்ந்துகொண்ட ஆண் மான், தான் குடிக்காமல் போனால் பெண் மானும் குடிக்காது வருந்தும் என்பதை உணர்ந்து தண்ணீரைக் குடித்துவிட்டதாகப் பாவனை காட்டி தாகத்தில் தவிக்கும் பெண் மான் குடிக்க வழிவிடுகிறது.

ஆம், அதுதான் காதல் என்பது. காதலின் பரிமாணத்தை அன்பு என்ற வார்த்தையின் குணங்களில் புரிய முடியும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரின் நலனில் மற்றவர் அக்கறையோடு விட்டுக்கொடுத்து, தியாகம் செய்வது, இரக்கப்படுவது, கருணை கொள்வதே அன்பு. அவ்வன்பு என்றும் பொறாமை கொள்ளாது, சகிப்புத் தன்மை மிக்கது, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டது. அது எப்பொழுதும் கோபப்படாது, வன்மம் கொள்ளாது.

உடல் தேவைக்காக ஒருவரை ஒருவர் காதலிப்பது காதல் இல்லை. மழலையின் மீது தாய் கொண்ட பாசத்திற்குப் பெயர் தாயன்பு. நண்பர்களிடையே உள்ள உண்மையான நட்பு, பக்தன் கடவுளின் மீது கொண்ட ஒப்பற்ற பக்தி, அழகான பொருட்களின் மீது மனிதர்கள் கொள்ளும் பற்று, மனிதன் இயற்கை மீது கொண்ட அக்கறை, வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் மனம் வாடினேன் பராபரமே என்று வடலூர் வள்ளலார் உயிர்களின் மீது கொண்ட இரக்கம், அடிமைப்பட்ட பாரத தேசத்தில் சுதந்திர உணர்வு கொண்டு அகிம்சை வழியில் போராடி வெற்றி பெற்ற மகாத்மா காந்திஜி அவர்கள் நாட்டின் மீது கொண்ட பற்று, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று சுதந்திர முழக்கமிட்ட முண்டாசுக் கவிஞர் பாரதி தமிழ்க் கவிதையாலே வீர முழக்கமிட்டாரே அந்த உணர்வு என்று பல்வேறு நேசப் பண்புகள் மிளிர்ந்து விளங்கட்டும். இவ்வழியாத காவிய உணர்வுகளைக் கொண்ட உண்மையான காதல் என்றும் வற்றாது, வாடியும் போகாது.

மானிட உருக்கொண்டு மரியின் மடியில் மகனாகப் பிறந்த இயேசுபிரான் பரிதாபத்திற்குரிய, சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பாவிகளான மக்களுக்காகப் பரிந்து பேசி, அவர்களின் உரிமைக்காகப் போராடி மனிதத்தின் உன்னத உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, தலைகுனிந்து வாழ்ந்திருந்த ஏழைகளைத் தலைநிமிரச் செய்து, அவர்களின் இருண்ட வாழ்வில் உண்மை ஒளியை ஏற்றி வைத்து வையகத்து மாந்தர் எல்லாம் ஏற்றம் பெற வாழ வழிகாட்டினாரே அந்த உன்னத அன்பின் வடிவம் போற்றுதற்குரியது; வாழ வேண்டியது.

எனவே காதல் என்பது எல்லாருக்கும் பொதுவானதே. நண்பர்களே, தங்களின் நலனே பெரியது என எண்ணி, பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்த பிள்ளைகளே, இந்தக் காதலர் தினத்தில் உங்களைப் பெற்றவர்களை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து உங்களோடு வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள். மனமுறிவுக்காய் நீதி மன்றத்தை நாடிய கணவன் மனைவிகளே, இந்தக் காதலர் தினத்தில் போட்ட வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டு உங்கள் காதலைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். மாமியார் மருமகள்களே, இந்தக் காதலர் தினத்தில் ஒற்றுமையாய் இருங்கள். அதனால்தான் பாரதியும் காதல் காதல் காதல் காதல் பேயின் சாதல் என்றார். கவி கண்ணதாசனும் இளமையில் காதல் வரும், எதுவரையில் கூட வரும் என்ற கேள்விக்கு முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை கூட வரும் என்று பாடியிருக்கிறார். எனவே உயிர் உள்ளவரை காதலிப்போம், உண்மையாய்க் காதலிப்போம். வாழ்க காதலர்! வாழ்க காதலர் தினம்!

0 comments:

Post a Comment