தேவை - மதிப்பீடுகளை மையப்படுத்தும் கல்வி

கடவுளது படைப்புகளிலேயே மனிதப்பண்பு தனித்தன்மை மிக்க அறிவார்ந்த உயிரியாகும்.  மனிதன் குழந்தையாகப் பிறக்கும் போதே பிறரைச் சார்ந்த நிலையில் உள்ளான்.  பின்னர் கல்வியின் மூலம் அறிவு, செயல்திறன்கள், பழக்கவழக்கங்கள், பண்பு நலன்களை வளர்த்துக் கொண்டு முழு மனிதன் ஆகிறான்.  தான் வாழும் சமுதாயத்தின் நெறிமுறை களைக் கற்றறிந்து சிறந்த குடிமகனாக உருவாகிறான்.  நுண்ணறிவும், கற்கும் ஆற்றலும் மிகுந்து இருப்பதால் அவனால் எதையும் விரிவாகக் கற்றுக் கொள்ள முடிகிறது.
கல்வியின் காரணமாக மனிதன் தனது புறச்சூழல், சமூகச்சூழல் மற்றும் ஆன்மீகச் சூழலுக்கு ஏற்ற இணக்கமான நடத்தையைப் பெறுகிறான்.  “குழந்தை மற்றும் மனிதர்களின் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றின் சிறப்பானவற்றை எல்லாம் முழுமையாக வெளியாக்குவதே கல்வி” என்கிறார் மகாத்மா காந்தியடிகள்.    ‘செடிகள் வளர நிலத்தைப் பண்படுத்துவது போல மனிதர்களைப் பண்படுத்த பயன்படுவதே கல்வி’ என்கிறார் ஜான் லாக்(John Lock).  ஆக கல்விதான் மனிதனைக் கடவுளின்; உயர்படைப்பு என்பதற்குத் தகுதி உள்ளவனாக ஆக்குகிறது.
இத்தகைய உன்னதமான கல்வியின் இன்றைய நிலை நல் உள்ளம் கொண்டோரை வேதனையில் ஆழ்த்துகிறது.  இந்நாட்களில் மாறிவரும் சமூகப் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப, கல்வி தனது அணுகுமுறைகளிலும் நடைமுறையிலும் பெருத்த மாற்றங் களை அடைந்து வருகிறது.
கல்வியை ‘உயர்த்துதல்’ ‘மேன்மை யாக்கல்’ என்ற நிலையில் அரசு பல வளர்ச்சி நிலைகளை அறிமுகப்படுத்துகிறது.  எனினும் சமூகத்தில் பல சுயநல சக்திகள் கல்வியை வியாபாரமாக்கி வருவது நாமறிந்த உண்மை.
ஒரு காலத்தில்சேவைமனம் கொண்டு மனிதனை உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு கற்றவர்கள் தாம் பெற்ற அறிவைப் பிறரோடு பகிர்ந்து கொண்டார்கள்.  “ஆயிரம் அன்ன சத்திரங்கள் கட்டுவதை விட ஓர் ஏழைக்கு எழுத்தறிவு கற்பித்தலே மிகச் சிறந்தது” என்பதை உணர்ந்த வசதி படைத்தோர் கல்விக் கூடங்களை நிறுவி மாணவர்கள் கல்வி கற்க உதவினர்.
ஆனால் இன்று பணம் படைத்தோர் கல்விக் கூடங்களைப் பணத்தைப் பெருக்க உதவும் வணிக நிறுவனங்க ளாகவே மாற்றி விட்டனர்.  எண்ணற்ற தொழில் நிறுவனங்களைப்போல கல்வி நிறுவனங்களையும் வணிக மயமாக்கி விட்டனர்.  பணத்தைப் பெருக்குவதே நோக்கமாக இருப்பதால் குறைந்த ஊதியத்திற்கு, தகுதியில்லாத ஆசிரியர் களைக் கொண்டு பல கல்வி நிறுவனங் களை நடத்துகின்றனர்.
கல்வி பெறுகின்ற மாணவர்களின் எண்ண ஓட்டமும்கூட வேதனை தரக் கூடியதாக இருக்கின்றது.  அதிக மதிப் பெண் பெறுவதே தமது இலட்சியமாகக் கொண்டு புரிகிறதோ இல்லையோ அனைத்தையும் மனப்பாடம் செய்து விடைத்தாள்களில் அப்படியே கொட்டிவிட முனைகிறார்கள்.  வாழ்க்கைக்குத் தேவையான மதிப்பீடுகள், நல்லொழுக்கம், சேர்ந்து வாழ்தல், நல்ல பழக்க வழக்கங் களை வளர்த்தல் போன்றவற்றில் கோட்டை விடுகிறார்கள்.
பெற்றோர்களோ, பணத்தைக் கொட்டி இறைத்து, பிள்ளைகளை விடுதிகளில் சேர்த்தும், காலை, மாலை “டியூசன்” வகுப்புகளுக்கு அனுப்பியும், அவர்களின் குழந்தைப் பருவ விளையாட்டுகளை, மகிழ்ச்சியை அழித்து விட்டு, எப்படியாவது தம் பிள்ளைகள் மிக அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என நினைக்கின்றனர்.
இத்தகைய சூழலில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் வித்தியாசமான நிறுவனங்களாக செயல்பட வேண்டும்.  மனிதனின் மாண்பை உயர்த்த வந்தார் இயேசு.  அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றும் நாம், அவரின் மதிப்பீடுகளை உள்வாங்கி வாழும் நாம், சமூக பொருளாதார, கலாச்சார நிலையில் பின்தங்கி வாழும் மாணவர்களிடம் புதைந்து கிடைக்கும் ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்கொண்டு வர முயலவேண்டும்.
குறிப்பிட்ட விளையாட்டில் சிலருக்கு ஈடுபாடு இருந்தால், அவர்களை அந்தத் துறையில் அதிகம் ஈடுபடுத்தலாமே.  மேடைப்பேச்சு, ஓவியம் வரைதல் போன்ற துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்து அந்தத் துறைகளில் வளரச்செய்யலாமே.
பலதரப்பட்ட குணநலன்கள் கொண்ட வகுப்பறை மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்கின்றபோது, சமூகத்தில் சேர்ந்து வாழ்தலின் நன்மைகளையும் அவசியத்தையும் உணரச் செய்து எதிர்கால வாழ்வுக்கு தயார்படுத்தலாமே.
தலைமைப் பண்பை வளர்த் தெடுத்தல், குழுவில் இணைந்து செயல் படுதல், ஒருவர் ஒருவருக்கு உதவி செய்தல், சாதி மத வேறுபாடுகளைக் களைந்து ஒரே சமூகமாக இணைந்து வாழ்தல் போன்ற நற்பண்புகளை எல்லாம் நாம் கற்றுத்தர முடியுமே.
மதிப்பெண்கள் தருகின்ற கல்வி ஒரு வேளை நல்ல வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரலாம், நல்ல மனிதனாக மாற்றாது.  ஆனால் மதிப்பீடுகள் தருகின்ற கல்வியோ நிச்சயம் நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.
மனிதத்தைப் புனிதமாக்க வந்த இயேசுவைப் பின்பற்றும் நாம் நல்ல மதிப் பெண்கள் பெற உழைப்பதைவிட மேலாக நல்ல மதிப்பீடுகளை மையப்படுத்த உழைக்கலாமே.
Fr. A.S. ஜெயக்குமார், பொன்மலைப்பட்டி

0 comments:

Post a Comment