Christmas Message from the Chairman

God wants every family to be a cradle of vocation, primarily Christian vocation. For each Christian is called to witness the kingdom values. Based on this call only, a woman or man is called to live with an undivided heart serving God and His people and not herself or himself.


The Babe of Bethlahem, Jesus, “increased in wisdom, in stature, and in favour with God and men”. There were his parents who helped him to grow both in body and in wisdom, and to gain favour with God and people. They had a sense of reverence, deep insight into the unseen world and total surrender to the Divine. Jesus as a young man picked up these graceful qualities. Consequently he was strengthened to abide by the will of the Father and to perform his ministry to his peole in such a way that the Father proclaimed, “You are my son, the beloved; my favour rests on you.”


It was not easy for our Mother Mary and St. Joseph to understand their own vocation as we listen to them in the Gospels. Yet they believed in every step of the Way. Hence we need to pray for all the families that the parents and the elders discern the Way through Scripture reading, prayer and awareness of God and neighbours. Also a thirst for service with a heart of love will develop a vocational environment for children.


May all of us - Priests and Religious - give the best gift to Jesus in the form of becoming another Jesus and continuing Jesus’ ministry this Christmas and 2011.


May we pray to his and our Mother Mary to behold him in all people irrespective of community and religion and listen to his voice and to live his values. God bless you!
With love and prayers,


+ Jude Paulraj
Bishop of Palayamkottai

கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தன்னுடைய வயது எத்தனை என்றுகூட சரியாகச் சொல்லத் தெரியாத நம் தாத்தா, பாட்டி, முன்னோர்கள் வாழ்ந்து வந்த காலம் சற்றே மாறி, “என் பிள்ளை இந்த மாதத்தில்தான் பிறந்தது” என்று தமிழ் மாதத்தின் ஒரு நாளைக் குறிப்பிட்டுச் சொல்லி, அதன்பின் ஆங்கில மாதத் தேதியைக் கண்டுபிடிக்கும் நிலை வந்தது. இந்த நிலை இன்றும் பல இடங்களில் தொடர்ந்தாலும், இன்றைய கலாச்சார மாற்றத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் வெகு சிறப்பாய், ஏன், சில ‘பெரியவர்களுக்கு’, வாரக்கணக்கில்கூட பல்வேறு நிகழ்வுகள் மூலமாய்க் கொண்டாடப்படுகிற நிகழ்வாய் மாறிப்போனது பெரும் மாற்றமே. சிறு நகர்களில்கூட பள்ளிப் பருவத்தை எட்டியுள்ள நம் பிள்ளைகள் தமது நண்பர்கள் குழாமையே ஒன்றாகத் தம் வீட்டிற்கு வரவழைத்து அல்லது இனிப்புகளையாவது தம் வகுப்புக்கு எடுத்து வந்து தோழர்களோடு பகிர்ந்துகொண்டு பிறந்த நாள் கொண்டாடும் முன்னேற்றம் காண முடிகிறது.

‘பிறப்பு’  ஒரு பெரும் கொடையே. ஓர் புதிய உயிர் தோன்றியுள்ளதால் இரு பெரும் உயிர்கள் அளவில்லா மகிழ்ச்சியில் திளைக்க, அவர்களோடு தொடர்புள்ள அனைவரும்தான் பூரித்துப்போகின்றனர். இப்பிறப்பு ஏனோதானோ என்று தற்செயலாக நடைபெறும் ஒன்று அல்ல. மாறாக, பிறந்தவர்க்கு வாழ்நாள் முழுவதும் பொருளுள்ள வாழ்வு அமைய வேண்டும் என்பதே கடவுளின் கொடையும் மனித விருப்பமும்.

பின் ஏன் இன்று பிறந்தவர்களில் சிலர் ‘ஏன்தான் பிறந்தேனோ?’ ‘ஏன் வாழனும், இவ்வுலகிலிருந்து போய்ச் சேர்ந்து விட்டால் நல்லதுதானே?’ என்று நினைக்கின்றனர்? இத்தகைய எண்ண உருவாக்கத்திற்கும், மனித மகிழ்வில்லாத சூழலுக்கும் ‘நானா’ அல்லது ‘பிறர்’ காரணமா? ‘நான்’தான் என யாரும் ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக, ‘பிறர்’தான் காரணம் என்று பல்வேறு வாதங்களை முன்னெடுப்பது இயற்கை.

  • ‘என் நண்பர்கள் என்னை ஏமாற்றி னார்கள்’
  • ‘இக்கலாச்சாரத்திற்கு ஈடு கொடுத்து வாழும் அளவிற்குப் பொருளாதாரம்             என்னிடம் இல்லை’ 
  • ‘நான் இருப்பது போல பிறர் என்னை ஏற்றுக்கொள்ளாமல் என்னைத்           தண்டித்தார்கள்’ 
  • ‘என் வேலையில் / படிப்பில் தோல்வி’ 
  • ‘என் எதிர்கால வாழ்வு பற்றிய என் கனவு கருகிவிட்டது’ 
  • ‘என் குடும்ப உறவே எனக்குச் சலித்துப் போயிற்று’ 
  • ‘பல தீமைகளுக்கு என்னைப் பலர் ஈடுபடுத்தினர்’ 
இப்படி பல பல காரணங்கள்.

இயேசுவின் பிறப்பு . . .
பிறந்தது ‘மெசியா’தான் என்று பலரும் புரியாத, ஏற்க முடியாத நிலையில், மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, ஏழை களுக்கு மட்டுமே நற்செய்தியாக இப்பிறப்பு அறிவிக்கப் பட்டது. பிறர் ஏற்றுக் கொண்டால் தான் தன் பிறப்பிற்குப் பொருளுள்ளது என்று நினைக்காத இயேசு, ‘எதற்காக என் பிறப்பு’ என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, தன் பிறப்புக்குப் பொருள் தரும் வாழ்வையே வாழ்ந்தார். அவருடைய சமூகம் அவரை ஏற்கவில்லைதான்... பைத்தியக்காரன், பேய் பிடித்தவன் என்று தன் சொந்தத்தாலேயே பெயரிடப்பட்டவர் தான்... சட்டத்தைப் புறக்கணித்தவன் என்று சொந்த மதத்தால் தீர்ப்பிடப்பட்டவர்தான். ‘சமூகத்தால்’ ‘பிறரால்’  ஏற்கப்படாத நான் வாழ்ந்து என்ன பயன்? யாருக்காக வந்தேனோ அவர்களே எதிராகிப் போயினர். நான் ஏன் பிறந்தேன்? என்றவர் அல்லர் இவர். தம் பிறப்புக்குப் பொருள் தந்தார். இளம் வயதிலேயே பொருள் கொண்டவர். 33 ஆண்டுகளிலேயே பிறப்புக்கு முழுமை தந்தவர் - அதனால் தான் அவரின் பிறப்பு விழாவை 2010லும் உலகம் நினைத்துக் கொண்டாடுகிறது.

‘உன் பிறப்பு கடவுளின் கொடை’ என்றால் பிறப்புக்கு ஒரு பொருள் உண்டு தானே! போராடி உன் பிறப்புக்குப் பொருள் தர மறுத்து பிறரால்தான் என் பிறப்பு பொருளில்லாமல் போனது என நினைப்பவர்கள் இக்கிறிஸ்து பிறப்பு விழாவின் செய்தி ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பிறப்புக்குப் பொருள் தரும்படி வாழ்வை உன் கையில் எடு. சமூகம் தரும் சவாலைச் சந்தித்து பிறருக்கான பொருளுள்ள வாழ்வை முன்னிலைப்படுத்து. ஒருவேளை, உன் வாழ்வில் நல்லது செய்து, அதனால் துன்பம் சந்தித்தால் உன் பிறப்பு முழுமை பெறுகிறது என்பதே நிறைவான பிறப்பு விழா. 
“பிறப்பு தரித்திரமானாலும்
  இறப்பு சரித்திரமாகட்டும்” 
பிறப்பு விழா சிறக்கட்டும்!


சே. சகாய ஜாண்

நம்பிக்கை கொண்டோர்

நான் அறியாப் பருவமாகிய முதலிரு பருவங்களில் பெற்றோர்களின் அடக்குமுறை காரணமாக குழம்பி, மூன்றாம் பருவமாகிய இளமைப் பருவமதில் மனம் போன போக்கில் சென்று மென் மேலும் குழப்பத்திற்கு உள்ளானேன்.  பெற்றோர்களும் என் விருப்பத்திற்கு என்னை விட்டு விட்டார்கள்.  நம்பிக்கையின் வாசல்கள் எல்லாம் எனக்கு மட்டும் திறக்கவே திறக்காது என மனம் நொந்து சோர்ந்து போனேன்.  மேலும் இறைவனிடம் மன்றாடியபோதிலும் என் எண்ண அலைகள் வெகுவாக அலைமோதி விரக்தியின் விளிம்பில், வாழ்க்கையின் ஓரத்திற்கு சென்று, தனிமையில் தவித்து நின்றது.
என் சுவாசம் போல நெருக்கமாய் இருந்த நண்பர்கள் எல்லாம் முகர்ந்து எறிந்துவிட்டனர்.  நம்பிக்கையற்ற நேரங்களில் கூட அவர்கள் என் மதிப்பை தாக்கி தரக்குறைவாக எடை போட்டார்கள்.  தனிமை விசும்பலில் இனி அந்த துரோகிகளின் நிழல் கூட படியவிடமாட்டேன் என்று நினைத்தேன்.  நான் விதைத்த விதைகளை மட்டும் எந்த மண்ணும் இறுக பற்றிக் கொள்ள வில்லையே என ஏங்கினேன்.  கடின பாறையும், கருவேல முட்களும் என்னை சிதைக்க முகவரி அற்றுப் போனேன்.  ஏமாற்றமோ, வலியோ எனக்கு புதிதல்ல.  வெட்ட வெளியின் இருட்டு அமைதியில் அன்புக்காக ஏங்கிய நேரங்கள் உண்டு.  மனதில் ஓங்காரமிடும் நினைவலை களாகிய மிருகத்தை வேட்டையாட இயலாமல் என்னையே காவு கொடுக்க நினைத்த தருணங்களும் உண்டு.  ஆழ்மன எண்ணங்கள் மிதந்து நடுமனதினில் கோரத்தாண்டவம் ஆடியது.
இருப்பினும் என் மீது ரோஜாக்களும் விழுந்தது உணடு.  வாழ்விற்கு இனிமையூட்டும் அந்த இரசத்தை பருக விரும்பினேன்.  என்னை தேடும் இறைவனை தேடலாமா? என்ற பசுமையான கனவுகள் என்னில் மிதக்க ஆரம்பித்தன.  செபத்தில் இணைந்த கரங்கள்  உலகத்தை தாங்கும் கரங்கள் என்று எண்ண தொடர்ந்து செபிக்கும் அளவிற்கு எனக்குள் நம்பிக்கை காற்று வீசச் செய்தது.
இறைவன் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்.  அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நன்மைகளை செய்வார் (உரோ 10:11-12) 
என்ற இறைவார்த்தையை சிந்தித்தேன்.
வாழ்வில் என்ன இருக்கிறது? என்று சலித்துக் கொண்டாலும் புறங்கையால் அந்த எண்ணத்தை தள்ளிவிட்டு என் மனம் சொல்லிற்று அட வாழ்வதற்குத் தான் எவ்வளவோ இருக்கிறது.  எனவே எழுந்து இறைவன் அருளோடு பறக்கும் தட்டினில் விண்வெளியில் பறந்தேன். பல நாள் பயணத்திற்குப் பின் நம்பிக்கை என்ற கோலில் காலூன்றி வாழ்க்கை என்னும் படகை செலுத்தினேன்.


Sr. Theresita FSM

மனிதம் சிறந்தால் மட்டுமே பிறப்பார்

மக்களின்
மேட்டுக்குடித் தனத்தால்
மாட்டுக் கொட்டிலில்
மனிதம் பிறந்தது
மக்களிடமிருந்து
இடம் பெயர்ந்தது . . .
படாபடமும் பகட்டும்
பரமனுக்கும்
பாமரனுக்கும்
பாரமானதும்
தூரமானதும் என்று
வரலாறு படைத்தது . . .
ஆடம்பர ஆரவாரத்தை
அணிந்து கொண்ட
நாகரீக உலகம்
மாட்டுக் கொட்டிலை
மாடி வீட்டுப் பகட்டில்
ஜோடித்து வைத்து
வரலாறு மறக்கிறது . . .
கோவில்களில் . . .
குடும்பங்களில் . . .
இல்லங்களில் . . .
உள்ளங்களில் . . .
ஆடம்பரம் ஒழித்து
எளிமையை நிறைத்தால்
இயேசு பிறப்பார்
வலிமை குன்றியோர் வாழ
வழியைச் செய்து
மனிதம் சிறந்தால் மட்டுமே
மனுமகன் பிறப்பார்

திரு. எஸ். எரோணிமுஸ்,

மனிதம் சிறந்தால் மட்டுமே பிறப்பார்

மக்களின்
மேட்டுக்குடித் தனத்தால்
மாட்டுக் கொட்டிலில்
மனிதம் பிறந்தது
மக்களிடமிருந்து
இடம் பெயர்ந்தது . . .
படாபடமும் பகட்டும்
பரமனுக்கும்
பாமரனுக்கும்
பாரமானதும்
தூரமானதும் என்று
வரலாறு படைத்தது . . .
ஆடம்பர ஆரவாரத்தை
அணிந்து கொண்ட
நாகரீக உலகம்
மாட்டுக் கொட்டிலை
மாடி வீட்டுப் பகட்டில்
ஜோடித்து வைத்து
வரலாறு மறக்கிறது . . .
கோவில்களில் . . .
குடும்பங்களில் . . .
இல்லங்களில் . . .
உள்ளங்களில் . . .
ஆடம்பரம் ஒழித்து
எளிமையை நிறைத்தால்
இயேசு பிறப்பார்
வலிமை குன்றியோர் வாழ
வழியைச் செய்து
மனிதம் சிறந்தால் மட்டுமே
மனுமகன் பிறப்பார்

திரு. எஸ். எரோணிமுஸ்,

அழைத்தது யாரோ?

பெண்ணாய்ப் பிறந்ததால் யாருக்கும் அடிமையில்லை. படித்துப் பட்டம் பெற்று, ஆணுக்கு பெண் நிகர் என்னும் அகந்தையில் இணையாய் சம்பாதித்து, சந்தோ­மாய் வாழ்ந்து, தனக்குள் கடவுள் தந்துள்ள பெண் மையை, தாய்மையை, மென்மையை மதியாமல் வாழ்வதில்தான் எவ்வளவு சவால்! பூரித்துப் போயிருந்தாள் சுப மங்களா. அது அன்னை மரியாளின் பெயர்களுள் ஒன்று என்றுகூட எண்ணாமல் சுபா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, அழகிய கூந்தலைக் கத்தரித்துக்கொண்டு, ஆணுடைகளை அணிந்துகொண்டு, பேச்சிலும் செயலிலும் ஒருவித கர்வத்தைக் காட்டிக்கொண்டு, தனக்குக் கீழ் வேலைசெய்யும் எத்தனையே பேரை அலட்சியமாய் எண்ணிக்கொண்டு...
உலகமே தன் காலடியில் என்பது போல, எல்லோரும் தனக்குக் கீழ் என்பது போல, கணினியில் மேதையான தன்னிடம் எவருமே நெருங்க முடியாது என்பது போல வாழ்ந்தாள் சுபா. அவள் தட்டிய தட்டுக்கு எல்லாக் கணினிகளும் அடங்கி நடந்தன. அவள் கைப்பட்ட எல்லா நிகழ்வு களும் அவளுக்கு வெற்றியாய் மாறின. பணமும் பகட்டும் அவளைத் தேடி வந்து, அவள் நடவடிக்கையை மிகைப் படுத்தின. அவளுடைய இயல்பை மாற்ற எவராலும் முடியவில்லை. கடவுள் என்பது கூட அவளுக்குக் கட்டுப்படும் கணினி போல ஆயிற்று.
புகழின் உச்சியிருந்தாள் சுபமங்களா. அரசின் பாராட்டுகளும் பரிசுகளும் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்துது வந்து குவிந்த வாழ்த்துகளும் பரிசுகளும் வாய்ப்புகளும் அவளை மேலும் மேலும் கர்வமடைய வைத்தன. அன்றும் அப்படித்தான். வெளிநாட்டிலிருந்து அவளுக்கு ஒரு வாய்ப்பு வந்திருந்தது. வீட்டிற்குத் திரும்பியவள், தன் அறைக்குள் சென்று அமர்ந்து அந்த வேலை வாய்ப்பைப் பற்றிய எல்லா விபரங்களையும் தேடித் தேடிச் சேகரித்தாள். ஒவ்வொன்றையும் தன்னுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த வாய்ப்பை மட்டும் தான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், உலகின் சிறந்த பெண்ணாக விளங்கும் வாய்ப்புக் கிடைக்கும் எனப் பூரித்துப் போனாள். வெகுநேரம் கணினி முன்பு அமர்ந்து விட்டதன் பலனாக கண்களும் மனமும், கணினியை இயக்கிய கரங்களும் ஓய்ந்துவிட கொஞ்சம் மாற்றம் தேவைப் பட்டது சுபமங்களாவுக்கு. வேறு திசை நோக்கிக் கணினியை இயக்கினாள். தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய பகுதி அது.
கணினியைத் தட்டி ஒவ்வொரு படமாகப் பார்த்து வந்தவளை, அசர வைத்தது புன்னகை தழுவிய, சுருக்கம் விழுந்த ஒரு பெண்ணின் ஒளிமுகம். ‘Peace to the World’ என்னும் வசனங்களுடன் அன்னை தெரசாவைப் பற்றிய பகுதி அது. மனதிற்குக் கொஞ்சம் லேசாக இருப்பதைப் போல உணர்ந்தவள், மெல்ல அவர்களின் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
சின்ன வயதிலேயே கடவுள் மேல் கொண்ட பக்தி, பெற்றோர் மேல் கொண்ட மதிப்பு, சேவை செய்யும் மனப்பான்மை, போர்க்களத்தில் இந்திய வீரர்கள் படும் துன்பம் கண்டு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற மனக்கிளர்ச்சி, அதற்கான முயற்சிகள், போராட்டங்கள், விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இந்தியாவுக்குப் பயணப்படுதல், ஆசிரியராகப் பணி துவக்கம், கல்கத்தா தெருக்களில் வலம் வந்தது, உயிரோடு இருக்கும் மனிதர்களை எலிகளும் புழுக்களும் திண்ணும் கொடூரம், சாலையோரங்களிலும் சாக்கடைகளிலும் கவனிப்பார் இல்லாமல் மனிதர்கள்.
மனம் நொந்த அன்னை தெரசா தன் பணியைத் தொடங்க நடத்திய போராட்டங்கள், மோத்திஜில் என்னும் சேரிப்பகுதியைத் தேர்ந்தெடுத்தது, ஒரு துப்புரவுத் தொழிலாளியாக நீல கரைபோட்ட வெள்ளைச் சேலை உடுத்தி வெளியேறியது, சேவை மனப்பான்மை மிக்கவர்களைச் சேர்த்து, ‘நிர்மல் இருதயம்’ என்னும் அமைப்பை உருவாக்கியது, இறந்து கொண்டிருப்பவர்களை இன்முகத்துடன் உணவிட்டு, மருந்திட்டு, புண்களைத் தானே கழுவி சுத்தம் செய்தது, மருத்துவர்களைக் கொண்டு வைத்தியம் செய்தது, சாகும் வேளையில் நமக்கும் சகமனிதன் உண்டு என்கிற மனநிறைவுடன் அவர்களை நிம்மதிப்படுத்துவது, இது எப்படி சாத்தியம் என வினவுகையில் சேவை செய்யப்படும் ஒவ்வொருவரிலும் இறை இயேசுவைக் காண்பதாகக் கூறியது, எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் மனித சமுதாயத்திற்கு அவசியம் எது என்கிற கேள்விக்கு “ஜெபிக்கும் உதடுகளைவிட உதவும் கரங்களே” எனப் பதிலளித்தது.
ஏதோ பாதிப்புடன் கண்ணீருடனும் வெளிறிய முகத்துடனும் வெளிவந்தவள், பெற்றோரைத் தேடிச்சென்று வீழ்ந்து வணங்கினாள். இறை இயேசு முன் மண்டியிட்டுக் கர்வமெல்லாம் கரையுமட்டும் கண்ணீர் சிந்தினாள். மரியாள் முன் சுபமங்களமாய்த் தன்னை அர்ப்பணித்தாள். ஒரு குரல் அவள் இதயத்திலிருந்து அவளை இறைவன் சேவைக்கு அழைத்ததை உணர்ந்தாள். தன் பெண்மை, மென்மை, தாய்மை உயிர் பெற்றதை உணர்ந்தாள். தான் படைக்கப்பட்டது ஆண்டவன் சேவை செய்ய என உணர்ந்தவள், எளிய உடைக்கும், மென்நடைக்கும், சேவை புரியும் கரங்களுக்கும் தயாரானாள். அழைத்தது யாரோ நீதானா தேவா எனத் தன்னையே ஆண்டவனிடம் அர்ப்பணித்தாள் சுபா என்கிற சுபமங்களா.


சாந்தி ராபர்ட்ஸ், உதகை

பிறந்த நாள் வாழ்த்து

2010-ஆம் பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும்
குழந்தை இயேசுவே, இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்! சீரிளமை குன்றாத உன்
அன்பும் அறிவும் எழிலும் வாழ்க!
உலகமெல்லாம் கொண்டாடப்படும் பிறந்த நாள்
இன, மன, ஜாதி, மொழி, நிற பேதமின்றி
உன் அன்பர்கள் யாவரும் ஒருமனப்பட்டு
மகிழ்ச்சி கொண்டாடும் அந்நாள் ஒரு திருநாள்
கன்னியான அன்னையை, கண்ணியமான தந்தையை,
எளிய இடையரை, சிறந்த அரசர்களை
மரத்தை, குடிலை, ஆடு மாடுகளை, நட்சத்திரத்தை
வேறுபாடில்லாமல் பார்க்குமே உன் பிறந்த நாள்.
தேவதூதர்கள் முன்னுரைத்த உன் பிறப்பு
மாந்தரெல்லாம் கொண்டாடும் உன் பிறப்பு
நீ பிறந்த சந்தோ­த்திலேயே தொடரும்
புதிய வருடத்தின் புத்தாண்டுப் பிறப்பு
மாதத்தில் கடைசி மகா ஆசீரின் ஆரம்பம்
முதல் மாதம் மகிழ்ச்சியின் ஆரம்பம்
உன் அன்பில் ஆசீரில் வாழத் தயார்
உலகத்தார் யாவருக்கும் வாழ்த்துச் சொல்லி!

சாந்தி ராபர்ட்ஸ், உதகை

கிறிஸ்து பிறப்பு விழா

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமிற்கு வந்து, யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக் கிறோம் என்றார்கள். (மத் 2:1-2).
இவ்வுலகைத் தனது பிறப்பாலும் உயிர்ப்பாலும் மீட்டுக்கொண்ட இயேசுவாகிய கடவுளுடைய மகனுக்குப் பிறப்பிடம் மாட்டுத்தொழுவம். மனிதர்கள் இடம் கொடுக்க மறுத்துவிட்டார்கள். மாடாவது இடம் கொடுத்ததே இறைமகன் இயேசுவுக்கு! எனவே விண்ணுலக வேந்தன் மண்ணுலகில் பிறந்தார். தாவீது குலத்தின் தவப்புதல்வன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவாகிய கிறிஸ்துமஸ் விழா எல்லோருக்கும் மகிழ்வூட்டும் பெருநாளாகும். இக் கொண்டாட்டத்தில் பிரிக்க முடியாத அடையாளமாக இருக்கும் நட்சத் திரங்களைத் (ஸ்டார்களை) தொங்க விடுவது விழா கொண்டாட்டத்தின் துவக்கமாக அமைந்துள்ளது. சில இடங்களில் இக்காலத்தில் பிற மத்தினரும் ஸ்டார்களைத் தங்கள் வீடுகளின் முன்பு தொங்கவிடும் பழக்கத்தைக் கொண் டுள்ளார்கள். எனவே கிறிஸ்துமஸுக்கும் நட்சத்திரங்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு.
இன்றோ உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் பல நட்சத்திரங்கள் தோன்றியுள்ளார்கள். முக்கியமாக சினிமா நட்சத்திரங்கள், அரசியல் நட்சத்திரங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், கலை நட்சத்திரங்கள் எனப் பல நட்சத்திரங்கள் மின்னுகின்றன. இவர்களின் மாயக் கவர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டு, தொண்டர்களாகவும் ரசிகர்களாகவும் மாறி அவர்கள் பின்னால் சென்று வாழ்க்கையை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நட்சத்திரங்களாக ஜொலித்திட பகட்டான ஆடம்பர வாழ்க்கையில் தங்களையே ஈடுபடுத்தி நிற்கின்றனர். இவர்கள் மத்தியில்தான் கிறிஸ்துமஸ் நட்சத்திரமும் ஜொலிக்கிறது. ஆனால் இவ்விரண்டிற்கும் சில வித்தியாசங்கள் உண்டு.
இவ்வுலக நட்சத்திரங்கள் தங்களையே மையப்படுத்தி மக்களைத் தம்பால் ஈர்ப்பதிலேயே கருத்தாக உள்ளனர். எல்லோரையும்விட உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்; தாங்கள் செய்யும் பணிகள் அனைத்தும் பிறர் கண்டு பாராட்ட வேண்டும் என்பதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் வெறும் விளம்பரச் செயல்களே ஆகும்.
ஆனால் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஞானிகள் குழந்தை இயேசுவிடம் வந்துசேர வழிகாட்டியாக அமைந் திருந்தது. மேலும் மக்களைத் தன்னை நோக்கி ஈர்க்காமல், கடவுளை நோக்கியும், பிறரும் ஆண்டவரிடம சென்றடையவும் வழிகாட்டியாக அமைந்தது என்பதை உணர வேண்டும். எனவே இவ்வுலக வாழ்க்கையில் கவர்ச்சிகளைக் கண்டு மயங்காமலும், தங்களுக்கு நலம் தரும் மக்களுக்கு மட்டும் நன்மைகளைச் செய்யும் மனநிலையை மாற்றி வாழ வேண்டும். அப்பொழுதுதான் நம் நிறுவனங்களிலும், வீதிகளிலும், வீடுகளிலும் தொங்க விடப்படும் நட்சத்திரங்களுக்கு ஓர் அர்த்தம் உண்டு.
சிறப்பாக வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்டு வளமையாக வாழ அருட்பணியாளர்கள், துறவிகள் செய்ய வேண்டிய பணிகள் எல்லாம் வீதியில் விடியலுக்காய்க் காத்திருப்பவர் களுக்காகச் செய்து ஒளிவீசும் நட்சத்திரங்களாக மாற வேண்டும். மேலும் கிறிஸ்துவை அடையாளம் காட்டி அவரை அடைய வழிகாட்டுவதுதான் முக்கியமானது என எண்ணி செயல்பட வேண்டும். வார்த்தைகளால் மட்டும் அல்ல, நமது ஒவ்வொருவரின் எடுத்துக் காட்டான வாழ்க்கையில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களாக மாறுவோமாக!
தீண்டாமை அகற்றிடவே
தீய சக்திகளை அழித்திடவே
அன்பை விதைத்துமே
அறத்தை வளர்த்துமே
உறவை வலுப்படுத்தியுமே
உதவும் கரங்களாகிட
இருண்ட உலகினிலே
இனிதாக உழைத்திடவே
மாந்தரை மாற்றிடவே
மகேசன் பிறந்தாரே!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


சகோ. தெரசிட்டா FSM

கிறிஸ்து பிறப்பு விழா இறை அழைத்தலை ஊக்குவிக்கிறதா?

கிறிஸ்து பிறப்பு விழா ஆண்டு தோறும் கிறிஸ்தவர்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிற மத கடவுளர்களுக்குக்கூட பிறப்பு விழா கொண்டாடப் படுகிறது. கிறிஸ்து பிறப்பு விழாவும், பிற தெய்வ-மனிதர் களின் பிறப்பு விழாவும் ஒன்றா? கிறிஸ்து பிறப்பு விழா தன்னிலே வலுவானது. வரலாற்றோடு தொடர்புடையது. தனித்தன்மை வாய்ந்தது. முன்குறித்து அறிவிக்கப்பட்டது. அனைத்துலக மாமன்னர், ஏழ்மைக்கு வடிவாய் எளிய கோலம் பூண்டு மண்ணுக்கு வந்த மகோன்னத பெருவிழா. மக்கள் மனதில் படிந்துள்ள இருளை நீக்க வல்ல ஒளி விழா.
இதோ! என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார் (மாற் 1:2-3) 
என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார் (மாற் 1:7). 
இறைவனால் அழைக்கப்பெற்ற திருமுழுக்கு யோவான் ஆண்டவரின் வழியை ஆயத்தம் செய்த இறைமுன்னோடி.
குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய் (லூக் 1:76)
வாக்கு மனிதர்ஆனார். நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14).
கடவுளோடு இருந்த ‘வாக்கை’ மனிதராக நம்மிடையே குடிகொள்ள அன்னை மரியாளை இறைவன் தேர்ந்து கொண்டார். “மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ! கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்” (லூக் 1:30-31). அன்னை மரியாள் இறை அழைத்தலின் முதல் முன்னோடி.
ஆண்டவரின் தூதர் இடையர் களுக்குத் தோன்றி,
இதோ! எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் (லூக் 2:10-11). 
இந்த நற்செய்திதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் உலகெங்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நற்செய்தியின் தூதுவர்களாய் நாமெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். துறவறம், இல்லறம் எதில் இருந்தாலும் ஒவ்வொரு மனிதரும் இறை அழைத்தல் ஊக்குநர்களே!
தேவனின் அழைத்தலைப் புரிந்து கொள்ளுகின்ற விதத்தில் கிறிஸ்து பிறப்பு விழாப் பொருள் உள்ளதாக இருக்க வேண்டும். அப்போது அருள் நம்மை வந்து சேரும். கடவுளுக்கு உரியதைத் தேடாமல், மனிதருக்குரியதைத் தேடுவது கனி இருக்கக் காய் கவர்வது போலாகும். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை யிலிருந்தே தம் பிள்ளைகளுக்கு நல் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும். பணத்தை இரண்டாம் பட்சமாக வைத்து ஒழுக்கத்தை முதலில் வைத்தால் நல்மணிகள் வீடெங்கும், நாடெங்கும் தோன்றுவர். இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, இரக்கம், சமாதானம், சமத்துவம், நீதி போன்றவை குழந்தைப் பருவத்திலிருந்தே வாழ்வாக்கப்பட்டால், தேவஅழைத்தல் பெருகும்; வீடும் நாடும் செழிப்புறும்.
கிறிஸ்து பிறப்பு விழா மகிழ்ச்சியின் விழா. நம்மை மீட்பின் கருவிகளாக மாற்றும் விழா. இறை அழைத்தலை உணர்ந்து, புரிந்து செயல்படுத்த அழைக்கும் உன்னத விழா. எல்லா விழாக்களைப் போல் பத்தோடு ஒன்றாக கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடாமல், மீட்பின் நற்செய்திப் பெருவிழாவாகக் கொண்டாட அழைக்கப்பட்டிருக்கிறோம். இதன் மூலம் இறை அழைத்தலின் முக்கியம் உணர்ந்து எதிர்வரும் சந்ததியினரை ஆண்டவருக்குச் சித்தமாய் வளர்ப்போம்! வாழ்வோம்! வளம் பெறுவோம்!!
ச. செல்வராஜ், விழுப்புரம்

அன்பு விதை

விந்தையான விதை ஒன்று
இம்மண்ணில் விழுந்தது - அது
மரியின் மண்ணில் தவழ்ந்தது - அன்பு
விந்தைகள் பல புரிந்தது!

எளிமையான உள்ளத்தை அது
இனாமாகக் கேட்டது - பணம்
இருக்கும் மனிதர்களின் பல்லிளிப்பைப்
பாரபட்சமின்றித் தள்ளி வைத்தது!

கொள்ளை கொள்ளும் புன்சிரிப்பால் - அன்புக்
கொள்கையை எடுத்துச் சொன்னது!
கொண்ட கொள்கைக்குத் தடையானவர்களைக்
கோபமின்றி வெளியே நிற்க வைத்தது!

பொறுமையைக் கடைப்பிடித்து
கடுமையாய் உழைத்து வாழச் சொன்னது!
தடைகள் பல வந்திட்டாலும் - அவைகளைத்
தடங்களாய் மாற்றி உயரச் சொன்னது!

தன்னம்பிக்கையைத் தரணியில் விதைக்க வந்தது
தருமத்தை வளர்த்து அதர்மத்தை அழித்து நின்றது!
ஏழைகளுக்கு மனம் இறங்கச் சொன்னது
பாவிகளை மன்னித்து பரலோகம் காட்டியது!

புரட்சிக் கருத்துக்களை இப்புவியில் தூவ வந்தது
புதுமைகள் பல செய்தே புவியை ஆள வந்தது
அரச பதவிக்கு ஆசை இல்லை எனச் சொன்னது
மனித உள்ளங்களை ஆண்டு புனிதமாய் நின்றது!

மதங்களைவிட மனிதம் மேல் ஆசை கொண்டது
மனித நேயத்தை அறுவடை செய்யவே
மரியின் மடியில் மனிதனாய் வந்துதித்தது!
பெத்தலகேமில் இயேசு என்ற பெயரோடே!

தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி

தூங்கு பாலா தூங்கு

தூங்கு பாலா தூங்கு - எழில்
தும்பை மலரே தூங்கு
ஏங்கி நீயழும் போது - இந்த
ஏழுல குமே கலங்குதே
ஆடு மாடு அடைக்கும் - தொழுவில்
அன்னை மரியின் மடியில்
மூடத் துணியும் இன்று - குளிரில்
வாடி வதங்கும் நிலையே
வானில் விண்மீன் ஒளிதர - தூதர்
பாவும் இசைத்தார் அர்த்தமாய்
கானில் இடையர் கேட்டு -- பாலனைக்
கண்டு வணங்கிச் சென்றாரே
கீழ்த்திசை மூன்று அரசர் - வானில்
நிகழ்ந்த ஒளியை ஆராய்ந்து
வாழ்த்தி வணங்(கி) தந்தார் - மூன்று
காணிக்கைப் பொருளைப் படைத்தார்
தூபத்தால் இறைவனைக் காட்டினர் -   மிளிரும்
பொன்னால் அரசனை விளக்கினர்
மீரையால் மனிதன் என்பதை - இதை
மேதினி அறியச் செய்தாரே
மனிதர் பாபம் தீர்க்க - இறைவன்
மானிட உருவெடுத்துப் பிறந்தார்
புனிதர் ஆக்க துன்பம் - எல்லாம்
கொண்டு பிறந்தார் கடவுள்
(கவிஞர் பெஸ்கிதாசன்)

இயேசுவில் இணைந்த ஒரு வாழ்வாக

புனித அருளானந்தர் சிறுவயதில் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டார். இறைபக்தியும் இறையருளும் நிறைந்த புனித அருளானந்தரின் (1647 - 1693) தாயார், அவர் சுகமாக வேண்டுமெனப் புனித சவேரியாரிடம் (1506 - 1552) வேண்டுதல் செய்துகொண்டார்கள்.
தவ வாழ்வின் அடையாளமாக புனித அருளானந்தர் அவரின் அரண்மனையிலேயே குருவின் வெண் அங்கியைத் தரித்து வலம் வந்தார். சில மாதங்களிலேயே அவர் முற்றிலும் குணமடைந்தார். ஆனால் புனித சவேரியாரின் வேண்டுதலால் கிடைக்கப்பெற்ற உடல்சுகம் அப்புனிதரின் மீது பற்றும் நேசமும் கொள்ள வைத்தது. புனித சவேரியாருக்கு இருந்த ஆன்ம தாகமும் இவரது உள்ளத்தையும் ஆட்கொண்டது. குருவின் உடையைத் தவத்தின் அடையாளமாக உடுத்தியதால், புனித அருளானந்தருக்கும் இறையழைத்தல் மீது நாட்டம் வர ஆரம்பித்தது.
‘இறைவனின் அதிமிக மகிமைக் காகவே’ என்ற விருதுவாக்கை ஏந்திய சேசு சபையில் தன் 15-ஆம் வயதிலேயே சேர்ந்தார். குருப்பட்டம் பெற்று 1673-இல் இந்தியாவின் தென்பகுதியான மரவ மண்ணில் வேத போதகப் பணி செய்ய விருப்பமுடன் வந்தார். கொடுமையாய் நடத்தப் பட்டபோதும், மிகத் தாழ்மையாய் இறை ஊழியம் செய்தார். 1693-இல் ஓரியூர் மண்ணில் வேதசாட்சியாய் மரித்தார். உலகியல் இன்பம் நிறைந்த அரண்மனை வாழ்வைத் துறந்தார். இயேசுவைப் பின்தொடர சகல வற்றையும் இழந்து இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்.
வேதாகமத்தில் புனித யாகப்பர் இவ்வாறு எழுதுகிறார் : “உலகத்தோடு நட்பு கொள்வது கடவுளைப் பகைப்பது என அறியீர்களோ? உலகுக்கு நண்பனாக விரும்பும் எவனும் கடவுளுக்குப் பகைவனாகிறான்” (யாக 4:4).
மத்தேயு 9:9-13 என்னும் பகுதியில் நற்செய்தியாளரான புனித மத்தேயு இறை அழைப்பைக் குறித்து மிக அழகாக எழுதுகிறார்.
மத்தேயு சுங்கத் துறையில் ஒரு பெரிய அதிகாரி. சமுதாயத்தின் உயர்ந்த பதவியிலும் இருந்தார். மற்றவர்களால் மிகவும் மதிக்கப்படும் நிலையிலும் இருந்தார். பெரிய பணக்காரராகவும் இருந்தார். ஆண்டவர் இயேசு அவர் சுங்கத்துறையில் அமர்ந்திருந்தபோது அவரை நோக்கி, “என்னைப் பின்செல்” என்கிறார். மத்தேயு உடனே எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார்.
இயேசு அழைப்பின் மகிமையை உணர்ந்த அவர் பெருமகிழ்வு கொண்டு தன் வீட்டில் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்திற்குத் தனக்குக் கீழ் பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களையும்கூட அழைத்து சாப்பிடும்படிச் செய்கிறார். ஆயக்காரர், பாவிகள் பரிசேயர்களோடும் இயேசு உணவருந்துகிறார். உன்னத காட்சி அவருடைய வீட்டில் இடம் பெறுகிறது.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை முற்றிலுமாய்ப் பின்பற்றிய மத்தேயு ஒரு பெரிய அப்போஸ்தலர் மட்டுமல்ல, மாறாக, நம் கைகளில் தவழும் நற்செய்தி நூலையும் நமக்காக எழுதியிருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவை மெசியாவாக ஏற்றுக்கொண்ட இவர், தன் இனமாகிய யூத மக்களும் இயேசுவை மீட்பராக ஏற்று விசுவசிக்க வேண்டும் என்பதற்காக உண்மை அப்போஸ்தலராக உழைத்தார். கடைசியில் கல்லால் எறியப்பட்டு வேதசாட்சியாக மரித்தார்.
இயேசுவில் அன்புக்குரியவர்களே, புனித பவுல் குறிப்பிடுவது போல், 
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்களாயின் மேலுலகில் உள்ளவற்றையே நாடுங்கள். அங்கேதான் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கம் இருக்கிறார். இவ்வுலகில் உள்ள வற்றின் மீது மனதைச் செலுத்தாதீர்கள் (கொலோ 3:1-2).
சீட்டா (Zita) என்ற புனிதை திருச்சபைச் சரித்திரத்தில் உண்டு. அவரின் தாயார் அவர் சிறு குழந்தையாய் இருக்கும் போதே ஒவ்வொரு செயலையும் சுத்த கருத்தோடு செய்ய வேண்டுமெனக் கூறி அறிவுறுத்தி வந்தார்கள்.
ஒவ்வொரு செயலும் இறைவனுக்குப் பிரியமான செயலாக இருக்கும் அல்லது இறைவனுக்கு மனம் வருத்தப்படுகிற செயலாக இருக்கும். நீயோ இறைவனுக்கு ஏற்புடையதை மட்டுமே செய் எனக் கூறினார். அவரும் வாழ்ந்து காட்டினார். சீத்தா (Zita)வும் அப்படியே வாழ்ந்து பெரிய புனிதையாக மாறினார்கள்.
நம் வாழ்வும் இறை இயேசுவில் இணைந்த ஒரு வாழ்வாக இருக்கட்டும். ஆமென். 
Fr. ச. ஜெகநாதன், கொடைக்கானல்

தேவ அழைத்தல்

(27.11.2010 அன்று நடைபெற்ற மாநில தேவ அழைத்தல் பணிக்குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு குடும்பத்தலைவரின் கருத்து).
யாரும் எவரும், எப்போதும் எவரையும் உருவாக்க முடியாது/ கூடாது. மாறாக உருவாவதற்கான சூழலைத் தான் ஏற்படுத்த முடியும் / வேண்டும் என்பதே உண்மை. சூழல் தான் ஒருவனை உருவாக்குகிறது என்பதால் இல்லறத்தாரும் (பெற்றோரும்) துறவறத்தாரும் இணைந்து ஏற்படுத்தும் சூழலைப் பொறுத்தே ஒருவன் அல்லது ஒருத்தி இறைவனுக்குரியவனா(ளா)க வளரவும் இறை அழைத்தலைப் பெற்று வாழவும் முடியும்.
அந்த வகையில் குடும்பத் தலைவனாக உள்ள நான் எப்படிப்பட்ட குடும்ப சூழலில் எனது குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை முதலில் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
எனது குடும்பத்தில் மூன்று குழந்தைகள். முதல் பையன் பொறியியல் இரண்டாமாண்டு படிக்கிறான். இரண்டாவது குழந்தை பத்தாம் வகுப்பும், மூன்றாவது குழந்தை 5ம் வகுப்பும் படிக்கின்றனர்.
என்னுடன் பிறந்த சகோதரிகள் இருவருமே இன்று அருட்சகோதரிகள். எனது அப்பாவின் தங்கை ஒரு அருட் சகோதரி, எனது சித்தாப்பாவின் பிள்ளைகள் இருவர் அருட்தந்தையர்கள்.
இப்படியாக இறை அழைத்தலை முழுமையாக அனுபவித்த குடும்பம். நான் இதுவரை எந்தவித போதை வஸ்துக்கும் அடிமை இல்லை. “தண்ணீ” அடித்ததில்லை. என் குழந்தைக்கு ஒரு நல்ல முன்மாதிரியான தகப்பனாக இருக்க முடிந்தவரை முயற்சி செய்பவன்.
எந்த நபருக்குமோ அல்லது பணம், பதவி, பட்டம், பகட்டு போன்ற பொருட்களுக்கோ அடிமையாகி விடாது ஓரளவுக்கு ஆளுமையுடன் வாழ விரும்பு கிறவன்.
நாங்கள் அன்றாடும் ஆலயம் செல்பவர்கள் அல்ல. எனினும் ஆண்டவனை மறந்தவர்கள் அல்ல. குடும்ப செபம் சொல்லாமல் படுக்கைக்குச் செல்வதில்லை.
நல்ல படிப்பு, நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என ஒருவித செக்கு மாட்டு வாழ்க்கையை மட்டும் வாழாமல் சமூக அக்கறையுடன் சமூகத்திற்கு உதவும் வகையில் நிறைவாக வாழ முயற்சிக் கனும்ங்கற கருத்தை என் குழந்தை களுக்கு வலியுறுத்தி வருகிறேன்.
இப்படியாக ஒரு நல்ல கத்தோலிக்க கிறித்தவ குடும்பமாக தன்மானத்துடன் நாளும் பொழுதும் வளர வாழ முயற்சி எடுத்து அதற்குண்டான சூழலில் வளர எனது குழந்தைகளுக்கும் வழிகாட்டி வரும் நான் ஒரு முறை கூட எனது குழந்தைகளிடம் நீ துறவறத்திற்குப் போ என்று சொன்னதில்லை.
ஏனென்றால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு ஒரு நல்ல குடும்பத் தலைவனாக இருப்பதற்கு மட்டுமே வழிகாட்டிடும் நான், என் குழந்தைகளை மட்டும் துறவறத்திற்குப் போ என எப்படிச் சொல்வது?
இருப்பினும் அதைப்பற்றிய ஆலோசனையைக் கொடுக்க முயற்சித்த பொழுது என் குழந்தைகள் என்னை ஒரு விதமாய்ப் பார்க்கின்றனர்.
எத்தனையோ குருக்களை, துறவிகளை நாங்கள் சந்தித்திருந்தும் எங்களுக்கு அப்படியயாரு எண்ணத்தை எவருமே தூண்டலையே என்கின்றனர்.
எனவே நல்ல மனிதர்களாய் வாழ சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என் போன்ற பல குடும்பத் தலைவர்களால் நல்ல குருவாக/துறவியாக மாறிட சூழல் ஏற்படுத்த இயலவில்லை. உங்களால் முடிந்தால் முயற்சியுங்கள் எனத் திறந்த மனதுடன் விண்ணப்பித்து பெற்றோர் களின் பணியாக நாங்கள் இன்னும் செய்ய வேண்டிய பொறுப்புகளையும் பட்டியல் இடுகிறேன்.

  1. இறைவனின் அன்பை எங்களது செயல்பாட்டின் மூலம் எங்களது குழந்தைகள் உணரும் வகையில் இன்னும் நல்ல முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும்.
  2. எனது வாழ்வு, எனது குழந்தைகள், எனது குடும்பம் என்கிற அளவில் மட்டும் இந்த ‘முன்மாதிரிகள்’ முடங்கிப் போகாது, முறிந்த குடும்பங் களும் (Broken Families) பிறிந்த உறவுகளுமாய் போதை வஸ்துகளில் மூழ்கி; சினிமா, டி.வி. காட்சிகளில் அமுங்கி; பணம், பகட்டே வாழ்க்கையயன அடிமைப்பட்டுக் கிடக்கும் அடுத்தடுத்த குடும்பங்களுக்குகுள்ளும் ஊடுருவிச் சென்று குணப்படுத்திட வேண்டும். 
  3. குடும்பத்தில் தேவ அழைத்தலுக்காக அதிகமாய் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
  4. நல்ல மனிதர்களை குறிப்பாக நல்ல குருக்களை / துறவிகளை அடையாளம் காட்டி அவர்களுடன் பழகி அனுபவம் பெற்றிட எம் குழந்தைகளுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வழிகாட்டிட வேண்டும்.
  5. நல்ல ம(பு)னிதர்களாய் வாழ்ந்து காண்பித்தவர்களின் வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லிக் கொடுத்தோ அல்லது வாசிக்கத் தூண்டியோ எம் குழந்தைகளைத் பக்குவப்படுத்த வேண்டும்.
  6. நம் சமூகத்தில் வாழ வழியற்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையை எம் குழந்தைகள் கிராமம் மற்றும் சேரிகளில் களப்பணி, ஆய்வு போன்றவைகள் மூலம் உணர்ந்து புரிந்திட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் உன்னால் ஆன பங்கு என்ன? என அவர்களைச் சிந்தித்துச் செயல்பட்டிடத் தூண்டிட வேண்டும். 
  7. வெறும் தேவ அழைத்தல் முகாம்கள் மட்டுமல்ல; மாறாக நல்ல மனிதனாய் நல்ல கத்தோலிக்கனாய் வாழத் தூண்டும் - வாழ்வின் நோக்கங் களைப் பெற்றிடத் தூண்டும் முகாம்களில், கருத்தரங்குகளில், நிகழ்வுகளில் ஆர்வமாய் பங்கெடுக்க குழந்தைகளுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  8. துறவற அல்லது குருத்துவ இல்லங்களில் ஓரிரு வார அல்லது மாத கால அளவிற்கு தங்கி குழந்தைகள் அங்குள்ளவர்களின் வாழ்க்கை நிலையை உணர, அனுபவம் பெற (Exposure) வாய்ப்புகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இப்படியாக செய்யும் பட்சத்தில் குடும்பங்களில் தேவ அழைத்தல் பெருகும். எதிர்காலத்தில் நல்ல குருக்கள், துறவிகள் மட்டுமல்ல நல்ல மனிதர்கள் உருவாகி மனிதம் தழைக்கும்.
குருக்கள் / துறவிகளின் பங்கு என்ன? (அடுத்த இதழில் தொடரும்)

எஸ். எரோணிமுஸ்,  
“ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி 

December 24

திருவருகைக் காலம் வந்து விட்டாலே நமது கோவில்களில் குழந்தை இயேசுவின் வரலாற்றுப் பிறப்பினைக் கொண்டாடத் தயாராகிவிடுகிறோம். கிறித்து பிறப்பு விழா என்றாலே பலருக்கும் பலவிதமான கனவுகள், தயாரிப்பு வேலைகள் என நமது மூளையில் சிந்தனைகள் சிறகடித்துவிடும். இந்த ஆண்டு கிறித்து பிறப்பு விழாவினை எப்படி கொண்டாடுவது என்றும், குடிலை எப்படி அலங்காரம் செய்வது என்றும், புத்தாடைகள் எந்தக் கடையில் எந்த விலையில் எடுப்பது என்றும், இனிப்புகள் எப்படி செய்வ தென்றும், வாழ்த்துக்களை எப்படிப் பரிமாறிக்கொள்வதென்றும் (வாழ்த்து அட்டைகள், கைபேசி குறுந்தகவல் உள்பட) சிந்தனைகள் நமது மூளைகளைத் துளைக்கத் தொடங்கிடும். இந்தச் சிந்தனை களெல்லாம் தேர்வு எழுதும் நமது சிறார்களுக்குச் சற்று தாமதமாகத்தான் தோன்றும் என்பதும் தவிர்க்க இயலாதது.
கிறித்து பிறப்பு விழா என்பது நமக் கெல்லாம் அவ்வளவுதானா? வேறு என்னவெல்லாம் இருக்க முடியும்? கிறித்து பிறப்பு விழாவை ஒட்டி புதிதாக ஒலிநாடாக் களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றில் இருந்து புதிய புதிய பாடக்கூடிய பாடல் களைத் தெரிவு செய்து, பயிற்சி செய்து பாடுவது, பெரிய பெரிய விண்மீன்கள் தொங்கவிடுவது, தாத்தா வேடம் அணிவது, கிறித்து பிறப்பு மரம் அமைப்பது, கிறித்து பிறப்பு மலர் வளையம் (நான்கு நிற வண்ணம் கொண்ட மெழுகுதிரிகள் கொண்ட மலர் வளையம், கிறித்துமஸ் ரீத் என்ற அழைக்கப்படும்) அமைப்பது, திருப்பலியில் பங்கெடுத்து குழந்தை இயேசுவை வணங்கிவிட்டு வருவது எனக் கிறித்து பிறப்பு விழா என்பது இவைகள் மட்டும்தானா? இல்லை, இன்னும் பல உண்டா...?
நல்லதும் தீயதும்
இதில் சில நல்ல உள்ளங்கள் கிறித்து பிறப்பு விழாவினை அர்த்தம் உள்ள வகையில் கொண்டாடுகின்றனர். கிறித்து பிறப்பு விழா கொண்டாட்டத்தில் வழிபாடுகளை அர்த்தம் உள்ள வகையில் அமைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப கண்டுணர்ந்து கிறித்து பிறப்புக் குடில்களைப் பயனுற அமைக்கிறார்கள். கிறித்து பிறப்பு நாட்களில் வீதிகளில் வாடிடும் ஏழைகளுக்கு, பெற்றோரை இழந்த சிறார்களுக்கு உணவு, உடை போன்றவைகள் கொடுத்து கிறித்து பிறப்பு விழாவினைச் சிறப்பான முறையில் கொண்டாடுகிறார்கள். இவையயல்லாம் பாராட்டக்கூடிய நல்ல செயல்கள். மனதார பாராட்டுவோம்.
ஆனால், சில கிறித்தவர்கள் வெறுமனே வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளுதல், வண்ண விளக்குகள் ஒளிர்வித்தல், விலை உயர்ந்த ஆடைகள் அணிந்து கொள்ளுதல், இயற்கை வாழ்வுக்கு எதிரான பொருள்கள் பயன்படுத்தி குடில்கள் அமைத்தல், இரவு முழுதும் கண்விழித்து கேளிக்கை நடவடிக்கை களில் ஈடுபடுதல் போன்ற அர்த்தமில்லா தவிர்க்கக்கூடிய செயல்களில் ஈடுபடு கின்றனர். இப்படிப்பட்டவர்கள் கிறித்து பிறப்பு விழாவினைக் கொண்டாடுவது பலருக்கு மன வருத்தத்தைத் தருகிறது. எனினும், இவை மட்டும்தான் கிறித்து பிறப்பு விழா கொண்டாட்டங்களா? இல்லை, வேறு ஏதாவது உண்டா? தேடலில் தெளிவு பிறக்கட்டும் எனத் தொடர்ந்து தேடுகின்றபோது இதுபோன்ற வெள்ளி முளைக்கக் கண்டேன்.
மகிழ்வும் வலியும்
காத்திருந்த கண்களுக்குத்தானே களிப்பு உண்டாகும்
எதிர்பார்த்த மனதுக்குத்தானே அகமகிழ்வு உண்டாகும்
ஏங்கித் தவித்த மனிதருக்குத்தானே நற்செய்தி புரியும்
2010 ஆண்டுகளுக்கு முன்பு மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்த வர்களுக்கு அவரின் வருகை பெரு மகிழ்வைக் கொடுத்தது. சாமானியர்கள் காத்திருந்தார்கள், கண்டுகொண்டார்கள்; பெருமகிழ்வு அடைந்தார்கள். ஆனால், மெசியாவின் வருகையைச் சற்று உற்றுக் கவனிக்கின்ற போது, அவரின் வருகை இருவிதமான அதிர்வை ஏற்படுத்தி யிருப்பதை நாம் கண்டுகொள்ள முடியும்.
1. இடையர் போன்ற சாமானியர் களுக்கு இதமான, மகிழ்ச்சியான அதிர்வைத் தந்தது.
2.ஏரோது போன்ற வலியோருக்கு எதிர்ப்பிற்கான அதிர்வைத் தந்தது.
இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும், எதிர்க்கப்படும் அடையாள மாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்... (லூக் 2:34-35)
 இவ்வாறு சிமியோன் சொன்னதும் இந்த இரண்டு விதமான அதிர்வினைப் பற்றிக் குறிப்பதாக இருக்கிறது. இந்த இருவிதமான அதிர்வினையும் மனுஉருவாதலின் விளைவாக நான் பார்க்கிறேன்.
பிறப்பின் பயன்
கடவுள் மனிதராகப் பிறத்தல் என்பது (கடவுள் வடிவில் விளங்கிய அவர்... பிலிப்பியர் 2:6-8) பிலிப்பியருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்ட தாழ்ச்சியோடு மட்டுமல்லாது, பிறப்பின் பயனையும் பற்றி நமக்கு உணர்த்தக் கூடிய ஒன்றாகும். பிறப்பு என்பது வாழ்வின் தொடக்கம். வாழும் வாழ்க்கையில்தான் அந்தப் பிறப்பின் பயன் வெளிப்படும். இயேசுவின் பிறப்பின் போது இருந்த அந்த இருவிதமான அதிர்வு அவருடைய வாழ்விலும் தொடர்ந்தது. இயேசுவினுடைய இறையாட்சிக் கனவு, அப்பா அனுபவம் இவை இரண்டுமே அவருடைய இறப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தன. இயேசுவின் பிறப்பு போலவே அவருடைய இறப்பிலும் இரண்டு விதமான அதிர்வு இருந்தது. ஆனால் அந்த அதிர்வு அவருடைய பிறப்பு போல் அல்லாமல் தலைகீழாக இருந்தது.

  1. இயேசுவின் இறப்பு இறையாட்சியின் சொந்தங்களுக்கு வலியைத் தந்தது.
  2. இயேசுவின் இறப்பு சீசர் போன்ற வலியோ ருக்கு இதமான மகிழ்ச்சியைத் தந்தது.

தலைகீழாக இருந்த இந்த அதிர்வு நீண்ட காலம் நீடிக்கவில்லை. இயேசுவின் உயிர்ப்பு மற்றும் தூய ஆவியின் வருகைக்குப் பிறகு கிறித்துவைப் பின்பற்றிய ஒவ்வொருவரிடமும் பரவியது. கிறித்துவைப் பின்பற்றிய யாவரும் கிறித்துவுக்குள் புதுப்பிறப்பு அடைந் தார்கள். சமுதாயத்தில் வலியோராய் இருந்தவருக் கெல்லாம் இறையாட்சியின் சொந்தங்கள் எதிர்ப்பின் அதிர்வலை களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருந்தன. அதே வேளையில் இறையாட்சியின் சொந்தங்கள் நாளுக்கு நாள் இன்ப அதிர்வால் பெருகிக் கொண்டே இருந்தன என்பது அன்றைய எதார்த்தம். கிறித்தவம் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பது வரலாறு. மனிதராகப் பிறந்த இறைமகனுடைய பிறப்பிலும் இறப்பிலும் இருந்த அதிர்வு அதன் பின் இயேசுவின் உண்மைச் சீடர்களை அது தொற்றிக்கொண்டு விரவிக் கிடக்கிறது என்பதும் சாட்சிய வாழ்வுக்கு அவர்களை இட்டுச்சென்றது என்பதும் நம்மை இன்று வலுவாகச் சிந்தனை செய்யத் தூண்டுகிறது.
நமது பிறப்பு?
இறைவனின் சாயலைத் தாங்கி இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலும் இப்படிப்பட்ட இரு வேறுபட்ட அதிர்வுகள் இருக்கின்றனவா? அந்த அதிர்வுகள் இன்றும் வலுவடைந்து கொண்டே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு என்ன பதிலிருப்பு செய்கின்றன? பிறப்பின் பயனை உணராத பிறப்பு விழாக்கள் தேவை தானா? இந்தக் கேள்விகளுக்குப் பாரதிதாசனின் வரிகள் ஒருவிதமான பதிலைத் தருகின்றன. பிறந்த நாள் ஒன்றில் நண்பன் ஒருவன் தன்னுடைய நண்பனுக்குப் பரிசாகத் தந்த கவிதை வரிகள்தான் இவை. பிறப்பின் காரணத்தைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டு கின்றன இந்த வரிகள்...
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்
மக்கள் தனை ஈந்த தமிழ்நாட்டிற்கும்
என்னால் தினையளவு நலம் பயக்குமெனில்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்.
இந்த வரிகள் இறைமகன் இயேசுவின் வாழ்வில் உண்மையானது. இந்த ஆண்டு கிறித்து பிறப்பு விழாவின் தயாரிப்பு நாட்களில் கடைசி நாளான டிசம்பர் 24 நமது பிறப்பின் காரணத்தை அறியும் நாளாக அமைத்துக்கொண்டு, சிந்தித்து அதிர்வுகளைத் தெளிவாய் வெளிப்படுத்த யாவரையும் வாழ்த்துகிறேன்.
பணி. தசி. லியோ ஜான்சன், பழையகோவில், திருச்சி

அர்ப்பணிக்க உன்னத ஓர் இலட்சியக் கனவு உண்டே!

உலகமய இவ்வுலகில்
என்னவாக என் குழந்தை
உருவாக வேண்டுமென
என் கனவு?

எத்தகைய மனிதனாய் மனு´யாய்
ஆளாக்கி உலகில் உலவவிட
வேண்டுமென
என் கனவு?

ஆளும் அமைச்சரா?
ஆசானா? ஆட்சித் தலை(வி)வனா?
இராணுவத் தளபதியா?
ஊர்தி ஓட்டியா?
இசை ஞானியா?
கட்டடக் கலைஞரா?
ஒலிம்பிக் வீரனா? வீராங்கனையா?
காவல் அதிகாரியா?
சட்ட வல்லுநரா?
ஆடை அணி வடிவமைப்பாளரா?
தேசத் தலைவ(னா)வியா?
அறிவியல் புலியா?
சமூகத் தொண்டரா?
அறிவாற்றல் மருத்துவரா?
இவற்றைப் போல்
இன்னும் வேறு இனிதான
உயர்வான கனவு உண்டு
இறைபணிக்கே
என் குழந்தை
அர்ப்பணிக்கும்
கனவு
உண்டே!
முனைவர் அ. அந்தோணி குருசு

குழந்தை யேசுவின் கனவு

செல்லும் இடங்களில்
எடுத்துச் செல்லுங்கள்
உடன் உங்கள் மழலையை!

உங்கள் சூழலுக்கேற்பவே
தகஅமைத்துக்கொள்கிறது
உங்கள் குழந்தை!

உங்கள் உடன்செல்லும் இடமெல்லாம்
புதிய இடங்கள்! புதிய மனிதர்கள்!
புதிய ஓசைகள்! புதிய இரைச்சல்கள்!
புதிய நறுமணங்கள்!
அனைத்தும் ஆர்வமாக்கிட அனுமதியுங்கள்!

உங்கள் உடன்வரும் குழந்தை
உந்துதல் தரும் உடன்நிகழ்வில் எல்லாம்
பார்க்கிறது! கேட்கிறது! சிரிக்கிறது!
வியக்கிறது! மகிழ்கிறது! அழுகிறது!

உங்கள் குழந்தை உறங்குவது
தொட்டிலோ! கட்டிலோ! இவற்றைவிட
சுகமான அம்மாவின் நெஞ்சணைப்பில்
கதகதக்கும் மடியிலோ!

என்ன வேண்டும் உங்கள் குழந்தைக்கு?
1000 ரூபாய்களின் டிஜிட்டல் விளையாட்டுக்
கருவிகளா? அதைவிட, அதைவிட -
அன்பு, நட்பு, அறிவு, நிறைவு, பாதுகாப்பு,
தன்னம்பிக்கை, தோழமை...
மிரள்கிறதே உங்கள் மழலை! ஏன்?
உங்களைச் சுற்றி

முட்டாள் பெட்டி (டிவி) முழக்கம்!
அலைபேசி அழைப்பு!!
தொலைபேசி இழுப்பு!
வலைபேசிக் கணினியின்
ஓயாத ஓட்டம்!!!

முனைவர் அ. அந்தோணி குருசு